35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்!’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்

தினகரன் பிரிக்கப்போவது பா.ஜ.க எதிர்ப்பு ஓட்டுக்களைத்தான். இதனால், அண்ணா தி.மு.க-வைவிட அதிகம் நஷ்டப்படப்போவது தி.மு.க-தான்’ என்றார் தமிழிசை.

இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பின் பின்னணிக் காரணங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. `தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தினால், நாடாளுமன்றத் தேர்தலில் அணி அமைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம் என மேலிடத்துக்குத் தமிழிசை அனுப்பிய அறிக்கையும் பிரதான காரணமாக அமைந்துவிட்டன’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்யக்கூடிய பருவமழையைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தள்ளிப்போய்விட்டது. இதை, தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. `தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற காரணத்தால்தான், இப்படியொரு கடிதத்தைத் தலைமைச் செயலாளர் அனுப்பியிருக்கிறார்’ எனக் கொதிக்கின்றனர் டி.டி.வி தரப்பினர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், `இரண்டு தொகுதி இடைத்தேர்தலை, பருவ மழையைக் காரணம் காட்டித் தள்ளி வைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் அவர், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் தேர்தலே நடந்ததில்லையா. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது நடைபெற்ற 3 தொகுதிக்கான தேர்தல்களும் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில்தானே நடைபெற்றன. அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலும் மழைக்காலத்தை ஒட்டிய டிசம்பர் மாதத்தில்தானே நடந்தது. தற்போது 5 மாநிலத் தேர்தல்கள் நவம்பர்-டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதி இடைத்தேர்தலை மட்டும் மழையின் காரணமாகத் தள்ளி வைக்க வேண்டிய அவசியம் என்ன?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

“இந்தக் கேள்வியிலிருந்துதான் தமிழிசை தரப்பின் நியாயங்களும் அணிவகுக்கின்றன” என விவரித்த தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், “இடைத்தேர்தல் நடத்துவதால் பா.ஜ.க-வுக்கு எந்தப் பலனும் வரப்போவதில்லை. `தேர்தல் நடத்தினால், நாடாளுமன்றத் தேர்தலில் அணி அமைப்பதில் சிரமமாக இருக்கும்’ என மேலிடத்தில் கூறிவிட்டார் தமிழிசை. இடைத்தேர்தலை மையமாக வைத்து தமிழிசை எதிர்பார்த்தது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, `இடைத்தேர்தல் வேண்டாம்’ என்ற கோரிக்கையோடு ஸ்டாலின் நம்மிடம் வருவார் என எதிர்பார்த்தார். அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை.

இரண்டாவதாக, `தேர்தல் நடத்துங்கள்’ என்ற கோரிக்கையோடு அழகிரி நம்மிடம் வந்தால், பரிசீலிக்கலாம் என அவர் எதிர்பார்க்கிறார். இந்த இரண்டில் எது நடந்தாலும் அதற்கேற்ப முடிவு செய்யும் மனநிலையில் தமிழிசை இருக்கிறார். தற்போதுள்ள சூழலில் திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதில் எந்தச் சிரமமும் இல்லை. `திருப்பரங்குன்றம் தொகுதி காலி’ என சபாநாயகர் இன்னும் அறிவிக்கவில்லை. மழைக்காலத்துக்காகத் திருவாரூர் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாகச் சொல்கின்றனர். உண்மையில், அரசியல் மேகங்கள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக மாறினால், எப்போது வேண்டுமானாலும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்” என்றவர், 

ஸ்டாலின் கேட்டால், தினகரன் மீது மேலிடத்தில் பேசி நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறார் தமிழிசை. அதனால்தான், `தினகரன் தரப்பிலிருந்து தூதுவிடுகிறார்கள். நான் மறுத்துவிட்டேன்’ என அவர் பேட்டியளித்தார். இதுகுறித்து எங்களிடம் பேசிய தமிழிசை, `தினகரன் பிரிக்கப்போவது பா.ஜ.க எதிர்ப்பு ஓட்டுக்களைத்தான். இதனால், அண்ணா தி.மு.க-வைவிட அதிகம் நஷ்டப்படப்போவது தி.மு.க-தான்’ என்றார். பா.ஜ.க அணிக்குள் ஸ்டாலின் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருப்பினும், ஓரளவு நம்பிக்கை இருப்பதால்தான், `அ.தி.மு.க-வோடு இன்னும் கூட்டணி முடிவாகவில்லை’ எனப் பேட்டியளித்தார் தமிழிசை” என்றார் விரிவாக. 

ஆனால், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து வேறாக இருக்கிறது. “இடைத்தேர்தல் நடத்தப்படுவதால் அ.தி.மு.க-வுக்கு வரப்போகும் நஷ்டங்களைப் பற்றித்தான் முதல்வர் கவலைப்படுகிறார். `நாடாளுமன்றத் தேர்தல் வரையில் ஸ்டாலின் – அழகிரி மோதல் நீடிக்க வேண்டும்’ எனவும் அவர் எதிர்பார்க்கிறார். ஓர் இடைத்தேர்தலோடு இவர்களது மோதல் முடிவுக்கு வருவதை அவர் விரும்பவில்லை. `இவர்கள் இருவரும் இணைந்துவிட்டால், தி.மு.க பலம்பெற்றுவிடும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் 35 சதவிகித வாக்குகளோடு கொங்கு மண்டலத்தில் 15 எம்.பி தொகுதிகளைக் கைப்பற்றுவோம்’ என உறுதியாக நம்புகிறார் முதல்வர். இதுகுறித்து பேசும்போதும், `ஸ்டாலினுக்கும் நமக்கும்தான் போட்டி இருக்கும். நாம் நன்றாகத் தேர்தல் வேலை செய்தால் மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெறுவோம். மோசமாகத் தேர்தல் வேலை பார்த்தாலும் ஒரு பங்கு வெற்றி வந்து சேரும்’ எனக் கணக்குப்போடுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறார் அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகி ஒருவர். 

%d bloggers like this: