சர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி எலும்புத் தசை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சர்வதேச மூட்டுவாத தினம் (World Arthritis Day) அனுசரிக்கப்படுகிறது. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் அழற்சியே மூட்டுவாதம். இந்நோய் 100 வெவ்வேறு வகையான மூட்டு நோய்களாக வெளிப்படுகின்றன. பொதுவாக எலும்புகளைச் சார்ந்திருக்கும் குருத்தெலும்புச் சிதைவால் ஏற்படுகிற எலும்பு மூட்டு வாதம் மற்றும் ஆரோக்கியமான மூட்டுத் திசுக்களை நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தாக்குவதால் உண்டாகும் தன்தடுப்பாற்றல் நோய் என்கிற வாதமூட்டழற்சி போன்ற இருவகைகளில் இந்நோய் உண்டாகிறது.

பொதுவாக எலும்பு மூட்டுவாத நோய் முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கைகள், முழங்கால், முதுகெலும்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக 15 சதவிகித மக்கள் (18 கோடி பேர்) இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுகளில் வலி அல்லது மூட்டு வலுவிழந்து மென்மையாக இருத்தல், மூட்டுகளைச் சுற்றி விறைப்பு, வீக்கம் அல்லது சிவந்திருத்தல், மூட்டுகளின் இயக்கம் குறைதல், மூட்டுகளில் சிதைவு, உடல் எடை இழப்பும் களைப்பும், மூட்டுகளில்  முறிவோசை கேட்பது போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளது. 
நோயின் ஆபத்துக் காரணிகள்
* குடும்பத்தில் யாருக்காவது இப்பிரச்னை இருந்திருந்தால் சில வகை மூட்டுவாத நோய் ஏற்படுகிறது.
* வயது கூடும்போது இந்நோயின் ஆபத்தும் அதிகரிக்கிறது.
* ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கே இந்நோய் அதிகமாக ஏற்படுகிறது.
* அதிக உடல் எடையானது முழங்கால், முதுகெலும்பு, இடுப்புப் பகுதிகளில் அதிக அழுத்தம் அளிப்பதால் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது.
* ஏற்கெனவே மூட்டுக் காயம் உள்ளவர்களுக்கு அதே மூட்டில் வாதநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* முழங்காலை மடக்கி அதிக நேரம் பணி செய்பவர்களுக்கு இந்நோய் ஆபத்து அதிகமாக உள்ளது. 
மூட்டுவாத நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை
* பால், தயிர் போன்ற பால் பொருட்கள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை, அதிகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியம். எனவே மருத்துவர் ஆலோசனைப்படி எளிய, அழுத்தம் அளிக்காத உடல் பயிற்சிகளோடு ஆரம்பித்து அவர் கொடுக்கும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றி தொடர்  உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். எண்ணெய் தேய்த்து நீவுதல், வலியைக் குறைக்க வெப்ப ஒத்தடம், வீக்கத்தைக் குறைக்க குளிர் ஒத்தடம் போன்றவற்றை 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். எலும்பு மூட்டைச் சுற்றியுள்ள தசைக்கும் இணைப்புத் திசுக்களுக்கும் எண்ணெய் தேய்த்து நீவிவிடும்போது விறைப்பு குறைந்து, மூட்டு அசைவு அதிகரிக்கும்.
* மூட்டுகள் காயம்படாமல் பாதுகாக்க அடிக்கடி மூட்டுகளை மடக்கி உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.
மூட்டுகளும் தசைகளும் விறைப்பாவதைத் தடுக்க உடல் அமர்வு நிலைகளை குறிப்பிட்ட இடைவெளிகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். மூட்டு வாதத்தை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், அதனால் ஏற்படும் ஊனங்களைத் தவிர்க்கவும், கையாளவும் தற்போதைய மருத்துவத்துறை வளர்ச்சியானது பெரிதும் உதவுகிறது. மருத்துவத்தோடு, நம்பிக்கையும், நோயை எதிர்த்துப் போராடும் மனவலிமையும் நோயின் விளைவுகளை எதிர்கொள்ள மிகவும் அவசியம். எனவே, போதுமான பராமரிப்போடும், நம்பிக்கையோடும் இருந்தால் மூட்டுவாத நோயாளிகளும் நலமாக வாழலாம்.

%d bloggers like this: