Advertisements

நோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி

நீண்டு வளரும் காய்கள்… காரம் கொஞ்சம் அதிகம்… கூடவே மருத்துவக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை – அதுதான் திப்பிலி. `அஞ்சறைப் பெட்டி’யில் குடியிருக்கும் நோய் தடுக்கும் காவல்வீரன்!

கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் திப்பிலியை அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தென்னிந்தியா விலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியமான நறுமணமூட்டி திப்பிலி.

மருத்துவக் குணம் நிறைந்த திப்பிலியின் பிறப்பிடம் இந்தியா என்பதால் நாம் பெருமை கொள்ளலாம். பீகாரின் ‘மகத நாடு’ பகுதிகளில் திப்பிலி அதிகமாக விளைந்ததால், பழைய நூல்களில் ‘மகதி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விளைந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில்தான் திப்பிலிக் கொடிகள் மிகவும் வீரியமாக வளர்கின்றன. மழைவளம் மிக்க சிரபுஞ்சி பகுதிகளிலும் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

கனை, செளண்டி, கலினி, பிப்பிலி, அம்பு, ஆதிமருந்து, வைதேகி, சரம், குடாரி, உண்சரம், உலவைநாசி, சாடி, பாணம் எனப் பல்வேறு காரணப் பெயர்களையும் வழக்குப் பெயர்களையும் கொண்ட திப்பிலி, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, கபத்தை அறுக்கும். உடலில் உண்டாகும் வாய்வை அகற்றி, செரிமான உறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும்.

திப்பிலிக் காய்கள் பச்சையாக இருக்கும் போது குளிர்ச்சியையும், உலர்ந்ததும் வெப்பத்தையும் கொடுக்கும் என்கிறது சித்த மருத்துவம். ‘ஈளை யிருமல் இரைப்பு பசப்பிணிகள்… நாசிவிழி காதிவை நோய் நாட்புழுநோய்…’ எனத் திப்பிலி சார்ந்து பாடப்பட்டுள்ள தேரையரின் பாடல்கள், இருமல், இரைப்பு, சுவையின்மை, மயக்கம், தலைவலி, தொண்டை நோய் போன்ற பல நோய்களுக்குத் திப்பிலி எதிரி என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

திப்பிலியின் வேர்களுக்கு `திப்பிலி மூலம்’ என்று பெயர். காம உணர்வைத் தூண்டுவதுடன் சிறுநீர்ப் பெருக்கி செய்கைகளும் இந்த வேருக்கு உண்டு. திப்பிலி வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் மருத்துவக் குணங்கள் அதிகம். நாக்பூர் பகுதியில் பானங்களை நொதிக்க வைப்பதற்காக இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பைப்பெரின், பைப்லார்டின், சில்வடின், பைப்பர்மொனாலின், பிராகிஸ்டைன் என நோய் நீக்கும் தாவர வேதிப்பொருள்கள் திப்பிலியின் காய்கள் மற்றும் வேர்களில் இருக்கின்றன. அழற்சி மற்றும் வீக்கம் உண்டாக்கும் காரணிகளின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, உடலில் தோன்றும் வலி, வீக்கத்தைத் திப்பிலி தடுப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. புற்று செல்களுக்கு எதிராகவும் திப்பிலியின் மூலக்கூறுகள் செயல்படுகின்றன. ஆரம்பநிலை கல்லீரல் பாதிப்பின்போது, செல்களின் மறு உருவாக்கத்துக்கும் திப்பிலி துணை நிற்கிறதாம். உணவின் சாரங்கள் மற்றும் மருந்துகளின் உட்கிரகித்தலை அதிகரிக்கவும் திப்பிலி உதவும்.

நுரையீரல் பாதைத் தொற்றுகளை அழிக்கும் சக்தி திப்பிலிக்கு உண்டு. கோழையை வெளியேற்றும் செய்கை இருப்பதால், `கோழையறுக்கி’ என்னும் பெயரைச் சுமக்கும் திப்பிலி, ஆஸ்துமாவுக்கான சிறந்த மருந்து. தொண்டைக் கரகரப்பும், இருமலும் அதிகரிக்கும்போது மூன்று விரல் அளவு திப்பிலிப் பொடியை வெற்றிலையில் வைத்துக் கடித்துச் சாப்பிட்டால் உடனடியாக வித்தியாசம் தெரியும். அக்ரகாரம், மிளகு, அதிமதுரம், திப்பிலி போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்படும் லேகியம், கடுமையான தொண்டைக்கட்டையும் விரைந்து குணப்படுத்தும்.

வெற்றிலை மெல்வதைப்போன்று, இதன் இலைகளை மென்று சாப்பிடும் வழக்கம் அந்தமான் தீவுகளில் உள்ளது. காரம் சற்றுத் தூக்கலாக இருப்பதால், தென்னிந்திய உணவுகளில் மிளகுக்குப் பதிலாகத் திப்பிலியைச் சேர்க்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறது. நாவில்பட்டதும் உமிழ்நீர்ச் சுரப்பை அதிகரித்து, செரிமானத்தைச் சிறப்பாகத் தொடங்கிவைக்கும். உடலில் தோன்றும் தடிப்புகளுக்கு, திப்பிலிப்பொடியை மஞ்சள் மற்றும் துளசி இலைகளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். திப்பிலியுடன் நல்லெண்ணெய் சேர்த்து வலி, வீக்கம் உள்ள பகுதிகளில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

தேமலை நீக்க, திப்பிலியைப் பொடியைத் தேனில் கலந்து ஒரு மாதம் சாப்பிடச் சொல்கிறது தேரன் காப்பியம் நூல். திப்பிலிப் பொடியை நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். நீர்த்துப்போன விந்தைக் கெட்டிப்படுத்த, அஞ்சறைப்பெட்டிக்குள் இருக்க வேண்டிய முக்கியமான மூலப்பொருள் திப்பிலி. திரிகடுகு சூரணத்தின் மருத்துவக் குணத்துக்குச் சுக்கு, மிளகுடன் சேர்ந்து அதிலிருக்கும் திப்பிலியும் மிக முக்கியக் காரணமாகும். மிளகைவிட அதிக காரத்தன்மை கொண்டது. சோர்வாக இருக்கும்போது, வெந்நீர் அல்லது தேநீரில் சிறிது திப்பிலிப் பொடியைச் சேர்த்துக் குடிக்கலாம்.

வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய்ப் பிரச்னைக்கு, திப்பிலிப் பொடியுடன் தேற்றான்கொட்டைப்பொடி, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். பிரசவத்துக்குப் பிறகு கருப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் திப்பிலி உதவும்.

வாதசுரக் குடிநீர், குமரி நெய், திப்பிலி ரசாயனம் என நிறைய மருந்து வகைகளிலும் திப்பிலி சேர்க்கப்படுகிறது. நாள்பட்ட கபநோய்களை அழிப்பதற்கான வீரியம், திப்பிலி ரசாயனத்துக்கு உண்டு. தனியா, மஞ்சள், மிளகாய் சேர்த்துக் குழம்புப் பொடி அரைக்கும்போது, இனிமேல் கொஞ்சம் திப்பிலியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்புப் பொடி, மருந்துப் பொடியாக உருமாறும்.

திப்பிலி, மிளகு மற்றும் இஞ்சியை அரைத்து, இறைச்சித் துண்டுகளின் உள்ளும் புறமும் தடவிச் சமைக்கும் அசைவ உணவுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம் என மருத்துவ நூல்கள் பதிவு செய்துள்ளன. திப்பிலி, மிளகு, மஞ்சள், திராட்சை ரசம், தேன் மற்றும் அரிசியுடன் தண்ணீர் சேர்த்து நொதிக்க வைத்த பானம், பண்டைய காலங்களில் மருந்தாக அதிகளவில் பருகப்பட்டுள்ளது. திப்பிலி, இஞ்சி, ஏலம், வெண்ணெய், நெய், ஆட்டுப்பால், கசகசா, பேரீச்சை, கொண்டைக்கடலை, பாதாம், அத்தி, தேனுடன் சேர்த்து அரைத்துத் தயாரிக்கப்படும் உணவு ஆண்மைக்குறைவைப் போக்குவதாக முகலாய நூல்களில் குறிப்பிட்டுள்ளன.

குளிர்காலங்களில் மிளகு ரசம் வைப்பதைப்போல, திப்பிலி ரசத்தையும் துணைக்கு அழைக்கலாம். திப்பிலி ரசமானது, நுரையீரல் பாதையைத் தெளிவாக்கி, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வெப்பத்தையும் கொடுக்கும். 

குளிர்காலமோ, மழைக்காலமோ அச்சப்பட வேண்டியதில்லை… திப்பிலி எனும் காவல்வீரனை உணவுகளில் முன் நிறுத்துங்கள் போதும்!


இருமல் சூரணம்

ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்த் தோல், அக்ரகாரம்ச், சித்தரத்தைச் சம அளவு  எடுத்து அரைத்து நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். அதில் ஐந்து சிட்டிகை அளவு வாயில் அடக்கிக்கொண்டால், கோழை வெளியேறி வறட்டு இருமல் அடங்கும்.

விக்கல் சூரணம்

எட்டு பங்கு திப்பிலி, பத்து பங்கு சீரகத்தை அரைத்து வைத்துக்கொண்டு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் அடங்கும்.

யவகு (Yavagu)

அரிசி அல்லது பார்லி கஞ்சியில் திப்பிலி, நெய் கலந்து செய்யப்படும் `யவகு’ என்னும் கஞ்சி வகை, பசியை அதிகரித்து, உணவின் சாரங்களை முழுமையாக உறிஞ்சப் பயன்படுகிறது. இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் இப்போதும் `யவகு’ பிரபலம். காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

சட்டகா (Sattaka) தயிருடன் பனங்கற்கண்டு, சுக்கு, திப்பிலி, மிளகு சேர்த்து மெல்லிய துணியில் வடிகட்டி, அதில் மாதுளை விதைகளைத் தூவிச் சாப்பிடும் சுவைமிக்க நொறுவை நம்மிடையே வழக்கத்தில் இருந்திருக்கிறது.

Advertisements

One response

  1. Useful tips thank you

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: