Advertisements

கேம் சேஞ்சர் எடப்பாடி!

மக்கு முன்பே அலுவலகத்தில் இருந்தார் கழுகார். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, இரண்டு கைகளாலும் மொபைலைப் பிடித்தபடி ஏதோ கேம் ஆடிக்கொண்டிருந்தார். ஆக்ரோஷமான முகத்துடன், ‘‘ஓடுடா… சுடுடா… சீக்கிரம்!’’ என்று கத்தியபடி கேம் விளையாடிய அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. சில நிமிடங்கள் கழித்து நம்மை நிமிர்ந்து பார்த்தவர், ‘‘ஜெயிச்சாச்சு!’’ என்றார்.
‘‘என்ன இது?’’ என்றோம்.

‘‘PUBG கேம். நம் ஊரில் வெறித்தனமாகப் பரவிவருகிறது. இப்போது எல்லா வீடுகளிலும் இளசுகள் இந்த பப்ஜி கேம்தான் ஆடுகிறார்கள். அறிமுகமே இல்லாத நான்கு பேர் இணைந்து போர் செய்வது போன்ற கேம். இதேபோன்ற ஒரு கேமை இப்போது எடப்பாடி பழனிசாமி விளையாடுகிறார். தனக்குக் குடைச்சல் கொடுக்கும் அத்தனை பேரையும் வீழ்த்தும் கேம் சேஞ்சர் ஆகியிருக்கிறார் அவர். நீர் வரிசையாகக் கேளும். நான் சொல்கிறேன்…’’
‘‘கேம் ஒன்று?’’
‘‘இதில் வீழ்த்தப்பட்டவர் கவர்னர். துணைவேந்தர் நியமனத்தில் கோடிகள் புரள்வதாக மேடையில் பேசினார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். ‘கவர்னரே ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார்’ என தமிழகமே இதனால் பரபரப்பானது. கவர்னரின் இந்தப் பேச்சை எடப்பாடி ரசிக்கவில்லை. அக்டோபர் 8-ம் தேதி டெல்லி சென்றபோது, சொல்ல வேண்டியவர்களிடம் இதுபற்றிச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னார். அங்கிருந்து என்ன தகவல் வந்ததோ, மறுநாளே கவர்னர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. ‘கவர்னர் யாரையும் குற்றம் சாட்டவில்லை; பணம் கைமாறியதாகவும் சொல்லவில்லை. சில கல்வியாளர்கள் தன்னிடம் சொன்ன தகவலையே அவர் குறிப்பிட்டார்’ என்றது அந்த அறிக்கை. அநேகமாக இந்த அறிக்கையைப் படித்து எடப்பாடி பழனிசாமி மர்மப் புன்னகை புரிந்திருப்பார். நக்கீரன் கோபால் கைது விவகாரத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-வது பிரிவைக் குறிப்பிட்டு கவர்னர் மாளிகையிலிருந்து புகார் பெற்று, கைது நடவடிக்கை நடைபெற்றது. நீதிமன்றத்தில் இந்தப் புகார் எடுபடாமல் போனது. இந்த விவகாரத்திலும் எல்லோரின் கோபமும் கவர்னர்மீதே திரும்பியது. இப்படியாக கவர்னரை வீழ்த்தினார் எடப்பாடி.’’
‘‘கேம் இரண்டு?’’
‘‘இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான கேம். ‘டி.டி.வி.தினகரனை பன்னீர் சந்திக்கவே இல்லை’ என பல அமைச்சர்களும் மறுத்துக்கொண்டிருக்க, ‘சந்தித்தது உண்மை’ என பேட்டி கொடுத்தார் பன்னீர். ‘தினகரனிடம் சந்திப்புக்கான ஆதாரங்கள் இருப்பதால்தான் பன்னீர் இதை ஒப்புக்கொண்டார்’ என தினகரன் ஆதரவாளர்கள் சொன்னாலும், இன்னொரு காரணமும் இருந்தது. ‘எனக்கு எல்லாத் தரப்பிலும் தொடர்புகள் உள்ளன. என்னைச் சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது’ என எடப்பாடிக்கு உணர்த்தவே பன்னீர் இதைச் செய்ததாக அவரின் ஆதரவாளர்கள் சிலர் சொன்னார்கள். ஆனால், டெல்லியில் இது வேறுவிதமாக எடுத்துச் சொல்லப்பட்டது. தினகரன் தரப்புமீதான கோபம் இன்னமும் டெல்லிக்குக் குறையாத நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ராஜவிசுவாசம் இல்லையே! பன்னீர்மீது டெல்லி தலைமை கோபம் கொள்ளும் அளவுக்கு இந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல… பன்னீர் பக்கம் இருந்த ஆதரவாளர்கள் பலரையும் கரைத்து, தன் முகாமுக்குத் திருப்பிவிட்டார் எடப்பாடி. ‘முன்பாவது பன்னீரை நம்பி 11 எம்.எல்.ஏ-க்கள் போனார்கள். இப்போது போக யாருமில்லை’ என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘கேம் மூன்று?’’
‘‘அடுத்தடுத்து வழக்குகள் போட்டுத் திணறடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை முடக்கிப்போட எடப்பாடி எடுத்திருக்கும் வழக்கு ஆயுதம் இந்த கேம். புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நீதிபதி ரெகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியதால், ரெகுபதி பதவி விலகினார். சென்னை உயர் நீதிமன்றம், ‘முறைகேடு நடந்திருப்பதாகக் கருதினால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸார் இதை விசாரிக்கலாமே’ என தமிழக அரசுக்கு ஆலோசனை சொன்னது. இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் எடப்பாடி. செப்டம்பர் 24-ம் தேதி ரெகுபதி ஆணையத்துக்கு ஓர் அரசு உத்தரவு போனது. ‘ஆணையம் வைத்திருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றது அந்த உத்தரவு. இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரிக்க செப்டம்பர் 28-ம் தேதி அனுமதிக் கடிதத்தையும் அரசு அளித்துவிட்டது. ஆணையத்திடமிருந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு ஆவணங்கள் வந்து சேர்வதற்கு முன்பே அனுமதிக் கடிதம் கொடுத்த வேகம், தி.மு.க-வினரை அதிரவைத்துவிட்டது. எனவே, ‘விசாரணை ஆணையத்தின் ஆவணங்களை வைத்துக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது’ என இப்போது ஸ்டாலின் சார்பில் அடுத்த வழக்கு போடப்பட்டிருக்கிறது. ‘இந்த விஷயத்தில், இன்னும் எஃப்.ஐ.ஆர் கூடப் போடவில்லை. அதற்குள் தி.மு.க அதிர்ந்துவிட்டது. அடுத்தடுத்து இப்படிப் பல அஸ்திரங்கள் பாயும்’ என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘கேம் நான்கு?’’
‘‘இது தினகரன் விஷயத்தில் எடப்பாடி ஆடும் சாமர்த்திய கேம். எடப்பாடி பழனிசாமியின் பூர்வீகத்தை ஆராய்ந்து கடுமையாக விமர்சனம் செய்கிறார் தினகரன். ஆனால், ஸ்டாலினை விமர்சனம் செய்த அளவுக்குக்கூட தினகரனை எடப்பாடி விமர்சனம் செய்ததில்லை. சசிகலாவைப் பற்றி மறந்தும்கூட எதுவும் பேசியதில்லை. துணை முதல்வர் பொறுப்புடன், தினகரனைத் திட்டும் பொறுப்பையும் பன்னீருக்கே கொடுத்திருக்கிறார் அவர். தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடியில் கூட்டம் போட்டு தினகரனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீர்மானித்தபோது, அந்தக் கூட்டத்துக்குப் போனவர் எடப்பாடி அல்ல; பன்னீர்தான். தினகரனை தன் சார்பில் விமர்சனம் செய்வதற்குத் தனக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணியையும் வேலுமணியையும் எடப்பாடி பயன்படுத்திக்கொள்கிறார். ‘சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு யாராவது ஒரு தகவல் அனுப்ப வேண்டும் என்றால், அது தினகரனைத் தாண்டி உள்ளே போகாது. இப்போதுகூட எடப்பாடியால் இந்த வளையத்தைத் தாண்டித் தொடர்புகொள்ள முடியும்’ என்கிறார்கள் எடப்பாடியின் உள்வட்டத்தில் இருப்பவர்கள்.’’
‘‘கேம் ஐந்து?’’
‘‘தமிழக அரசை நீதிமன்றங்களில் இழுத்தடிக்கும் வழக்குகளைக் கவனியும். ஓ.பன்னீர்செல்வம்மீது தி.மு.க கொடுத்த புகாரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்து முதல்வர்மீதும் இப்படி தி.மு.க புகார் கொடுத்தது. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை உறவினர்களுக்குக் கொடுத்தது தொடர்பான புகார் இது. இந்தப் புகாரை உடனே விசாரித்து, ‘முதல்வர்மீது வழக்குபோட முகாந்திரம் இல்லை’ என நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சொல்லிவிட்டது. ஆனால், பன்னீர்மீதான புகாா் இன்னமும் விசாரணையில் இருக்கிறது. கேம் ஓவர்.’’
‘‘பன்னீர் என்ன சொல்கிறார்?’’
‘‘சமீபத்தில் அவர், தனக்கும் தினகரனுக்கும் பொதுவான ஒரு நண்பரிடம் நீண்ட நேரம் பேசினாராம். ‘அம்மா இறந்தபின்பு நான் முதல்வராக இருந்தேன். அப்போது நினைத்திருந்தால் ஒரே நாளில் தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகியிருக்கலாம். அந்த சமயத்தில் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்கவே மக்கள் சசிகலா குடும்பத்தினர்மீது கடும் கோபத்தில் இருந்தனர். மோடி அரசும் சசிகலா குடும்பத்தை ஆதரிக்கவில்லை. அந்த சமயத்தில் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும், சசிகலா குடும்பத்தின் முக்கிய நபர்களைக் கைது செய்யுமாறு ஆலோசனை கொடுத்தார்கள். அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டேன். ஒருவேளை அப்படிச் செய்திருந்தால் தமிழகம் முழுவதும் எனக்கு மக்கள் ஆதரவு பெருகியிருக்கும். முதல்வர் பதவியையும் இழந்திருக்க மாட்டேன். கட்சியும் என் கைக்குள் வந்திருக்கும். ஆனால், கட்சி, பதவி எதையும் யோசிக்காமல் விசுவாசம் காட்டிய என்னை அவர்கள் துரோகி என்கிறார்கள். இப்போதும், என் பதவி போய்விடும்; டெல்லியில் எனக்குச் செல்வாக்கு இல்லை’ என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். பிரச்னை வரும்போது எனது செல்வாக்கு என்னவென்பது புரியும்’ என்றாராம் பன்னீர்.’’  
‘‘இப்போதே அவருக்குப் பிரச்னைகள்தானே?’’
‘‘கிட்டத்தட்ட அப்படித்தான். வழக்கமாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு பன்னீர் வரும்போது வாழ்த்து கோஷங்கள் அதிரும். எடப்பாடிக்கு அந்த அளவு இருக்காது. ஆனால், அக்டோபர் 11 அன்று அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு பன்னீர் வந்தபோது, அவ்வளவாக கோஷங்கள் ஒலிக்கவில்லை. எடப்பாடிக்கு வாழ்க கோஷங்கள் அதிர்ந்தன. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்தான். இணை ஒருங்கிணைப்பாளர்தான் எடப்பாடி பழனிசாமி. அதாவது, கட்சியைப் பொறுத்தவரை பன்னீர்தான் சீனியர் பொறுப்பாளர். அந்த வகையில் தலைமைக் கழகத்தில் நடைபெறும் கட்சிக் கூட்டங்களில் நிறைவு உரை ஆற்றுவது அவர்தான். இதுவும் இப்போது பன்னீரின் கையை விட்டுப் போய்விட்டது. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் நிறைவு உரையை எடப்பாடிதான் நிகழ்த்தினார். ‘ஏற்கெனவே ஆட்சி என் கையில். இப்போது கட்சியும் என் கையில்தான்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல இருந்தது எடப்பாடியின் நடவடிக்கைகள்.’’
‘‘அது சரி, அந்தக் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை குறைகிறதாமே?’’
‘‘ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என்று இனி அ.தி.மு.க-வை அழைக்க முடியாது. 1,10,41,600 உறுப்பினர்கள் இருப்பதாக நிகழ்ச்சியில் சொல்லியுள்ளார்கள். எண்ணிக்கை குறைந்ததற்கு, பாசறை உறுப்பினர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாததே காரணம் என்கிறார்கள். ஆனால், ‘கட்சிப் பணிகளில் ஏற்படும் சுணக்கமே இதற்கெல்லாம் காரணம்’ என்று சில தலைவர்கள் முணுமுணுக்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் பணி எல்லாம் ஒரே மாதத்தில் முடிந்துவிடும். தற்போது, பத்து மாதங்களாக நடந்தும் இலக்கை அடையமுடியவில்லை. ‘செப்டம்பர் மாதத்துக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க வேண்டும்’ என்று தலைமையிலிருந்து அழுத்தம் கொடுத்ததால், மாவட்டக் கட்சி அலுவலகங்களிலேயே ஆட்களைப் போட்டு விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பிவிட்டார்களாம். அவர்கள் சொல்லும் ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் என்பதும்கூட சரியான கணக்காக இருக்காது என்று அ.தி.மு.க-வினரே புலம்புகிறார்கள்.’’
‘‘அ.தி.மு.க-வில் இனி சசிகலா இல்லை என்று அறிவித்துவிட்டார்களே?’’
‘‘அவர்தான் ஏற்கெனவே அ.ம.மு.க பொதுச் செயலாளராக இருக்கிறாரே? ஆனாலும், அவர் அ.தி.மு.க உறுப்பினர் அட்டையும் வைத்திருந்தார். இதைப் புதுப்பிப்பதற்காக அவர் சார்பில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதனால், இனி அ.தி.மு.க உறுப்பினராக சசிகலா தொடரமாட்டார் என்று எடப்பாடி சொல்லியுள்ளார்.’’
‘‘ஆனால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லையே?’’
‘‘டெல்லி உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி, ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் பன்னீர்செல்வம், கே.சி.பழனிசாமி ஆகியோருடன் சசிகலா தரப்பிடமும் விளக்கம் கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். இந்தச் சூழலில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
‘கே.சி.பழனிசாமி அ.தி.மு.க-வில் உறுப்பினரே இல்லை. அவர் அ.தி.மு.க-வுக்கு எதிராக அளித்துள்ள மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ‘பொதுச்செயலாளர் வழங்கிய உறுப்பினர் பதவியை நீக்கும் அதிகாரம், அதே பொதுச்செயலாளர் தகுதிபெற்ற நபருக்கு மட்டுமே உண்டு. வழக்கு தொடுத்தபோது கட்சியின் உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் பழனிசாமி இருந்துள்ளார். எனவே, இறுதித் தீர்ப்பு வரும்வரை கழக உறுப்பினராகவே தொடரமுடியும்’ என்ற வாதத்தை அவர் தரப்பில் வைக்க உள்ளார்கள். சசிகலா தரப்பும் ‘பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டும்’ என்றுதான் விளக்க மனுவைத் தாக்கல் செய்துள்ளது. கட்சியின் உறுப்பினராக நீடிக்கும் விஷயத்தில், ஏற்கெனவே கே.சி.பழனிசாமி சொல்லியிருக்கும் வாதத்தையே சசிகலா தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்குமாம். அது ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், பொதுச்செயலாளர் தேர்தல் நிச்சயம். சசிகலா போட்டியிடுவதும் உறுதியாகிவிடும்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: