Advertisements

கண்களில் தெரியும் அவசரம்

மது உடலின் மென்மையான உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். அவைதாம் வெளிச்சம் தந்து நம்மை வழிநடத்துகின்றன. சிறு தூசு விழுந்தால்கூட கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். உடலில் ஏற்படும் அலர்ஜியின் பாதிப்புகள் கண்களில் வெளிப்படலாம். அதனால் கண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் எவற்றுக்கெல்லாம் அவசரகால சிகிச்சைகள் அவசியம்? விளக்குகிறார் கண் மருத்துவர் ரஜினிகாந்தா.

 

“கண்கள் சிவந்து காணப்பட்டாலே, ‘மெட்ராஸ் ஐ’ என்று சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். கண்களின் மேலுறைகளான வெண்படலம் (Conjunctiva) மற்றும் கருவிழி (Cornea) ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகளாலும், கண் அழுத்தம் அதிகரிப்பதாலும்கூடக் கண்கள் சிவந்து காணப்படலாம். இந்த மாதிரி நேரத்தில் கண் மருத்துவரை அணுகாமல் நமக்கு நாமே மருந்து எடுத்துக்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.  பார்வையே பாதிக்கப்படலாம்.

இரும்புத் துகள், நெல் உமி, பூச்சிகளின் சிறகு போன்றவை கண்களில் விழுந்தாலும் சிவந்து, நீர் வடிதல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இவ்வாறு நேர்ந்தால், கண்களைத் தேய்க்காமல், சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், தூசு மற்றும் புகையில் இருந்து கண்களைக் காத்துக்கொள்ள, பாதுகாப்பு கண்ணாடி அல்லது ‘ஷீல்டு’ அணிவது அவசியம். இதன் மூலம் கண்களில் தூசு விழுவதைத் தவிர்க்க முடியும்.

குழந்தைகள் விளையாடும்போது பந்து போன்ற பொருள்கள்பட்டு கண்களில் காயம் ஏற்படலாம். ஊசி, பேனா, நிப், ஊக்கு போன்றவற்றை கவனக்குறைவாகப் பயன்படுத்தினால், கண்களில் குத்திக் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின்போது குழந்தைகள் கவனமின்றி பட்டாசு கொளுத்துவதாலும், தசரா பண்டிகையின்போது வில், அம்பு செய்து விளையாடுவதாலும், கண்களில் தீக்காயங்கள் மற்றும் விபரீத விளைவுகள் ஏற்படலாம். அதனால், பெற்றோர் குழந்தைகளுக்கு இது குறித்து எச்சரிக்கை செய்வதும் விழிப்புஉணர்வூட்டுவதும் அவசியம்.

 

எப்போது கண் மருத்துவரை அணுக வேண்டும்?

காயங்களால் பார்வை பறிபோவது வெறும் ஐந்து சதவிகிதம்தான். நோய்களால்தான் 95 சதவிகிதம் பேருக்குப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான கண் நோய்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிடுவதால் பாதிப்பு அதிகமாகிறது. இதைத் தவிர்க்க ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

ஆபத்தான சில அறிகுறிகள்

* தெளிவில்லாத பார்வை.

* தொடர்ச்சியான கண் உறுத்தல்.

* அருகில் இருக்கும் பொருளையோ, தொலைவில் இருக்கும் பொருளையோ பார்ப்பதில் சிரமம்.

* பார்க்கும் பொருள்கள் அனைத்தும் இரண்டாகத் தெரிவது.

* தொடர்ச்சியாகக் கண்ணீர் வழிவது.

* கண்களில் எப்போதும் தூசு விழுந்தது போன்ற உணர்வு இருப்பது.

* கண்கள் அல்லது புருவத்தில் வலி.

* இரண்டு கண்களுக்கும் இடையில் பார்வை வித்தியாசம்.

* எப்போதும் கண்கள் சிவப்பாக இருப்பது.

* அடிக்கடி மின்னல் மின்னுவது அல்லது மின்மினிப் பூச்சி பறப்பதுபோலத் தோன்றுவது.

* மின்விளக்கைப் பார்த்தால் அதைச் சுற்றிலும் வானவில்போல பல வண்ணங்கள் தெரிவது.

* ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுவது.

* மாறுகண்.

* கண்மணிப் பாவையில் (Pupil) வெள்ளை அல்லது மஞ்சளாக ஏதேனும் தோன்றுவது.

இவற்றில் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தாலும், உடனே கண் மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்.

Advertisements
%d bloggers like this: