சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்!’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்

தினகரன் கருத்தின்படி பார்த்தால், பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டி போட முடியாது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதற்கே வாய்ப்பு அதிகம்.

அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. `பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவைப் போட்டியிட வைக்காமல் தடுப்பதற்கான வேலைகளை தினகரன் செய்து வருகிறார்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், `வழக்கு தொடர்பாக மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துகளைத் தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துபூர்வ பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்துப் பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தனர். இதையடுத்து, `அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாகத் தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. 

இந்நிலையில், `அ.ம.மு.கவோடு அ.தி.மு.க இணையும்’ என தினகரன் தரப்பினர் பேசி வருவது, சசிகலா ஆதரவாளர்களிடையே சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஓர் இடைக்கால ஏற்பாடு. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் நவம்பர் 9-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும், அ.ம.மு.க என்ற இடைக்கால ஏற்பாடும் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிடும். வழக்கு முடிந்ததும், ` அ.ம.மு.க இருக்கக் கூடாது; பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டியிடலாம்’ என்றுதான் கே.சி.பழனிசாமி உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். `பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டியிட வேண்டும் என்றால், அ.ம.மு.க இடைக்கால ஏற்பாடு’ எனப் பதிவு செய்தால்தான் அவரால் போட்டி போட முடியும். இந்த இடத்தில் தினகரனின் கருத்து முரண்படுகிறது. `அ.ம.மு.க என்பது இடைக்கால ஏற்பாடு அல்ல. அண்ணா தி.மு.க எங்களோடு இணைய வேண்டும்’ என்கிறார். இதனை அ.தி.மு.கவுக்கு எதிரான நிலைப்பாடாகத்தான் பார்க்க முடிகிறது. இதன்மூலம் சசிகலாவைப் போட்டியிட வைக்காமல் முடக்கும் வேலைகள் நடப்பதாகவே தோன்றுகிறது” என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். 

தினகரன் கருத்து தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “தினகரன் கருத்தின்படி பார்த்தால், பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டி போட முடியாது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதற்கே வாய்ப்பு அதிகம். இந்தநேரத்தில் தினகரன் இதைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. அவரால் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டி போட முடியாது. அம்மா காலத்திலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவர். `எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும்தான் அ.தி.மு.க’ என நினைத்துக்கொண்டு பேசி வருகிறார் தினகரன். கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு, அ.தி.மு.க உறுப்பினராக இருக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தவிர்த்து மற்றவர்கள் பதவிக்கு வரும்போது நிலைமைகள் மாறும். `அப்படியொரு நிலைமை வந்துவிடக் கூடாது’ என்பதற்காகத்தான் தினகரனுடன் ரகசியச் சந்திப்பை நடத்தினார் பன்னீர்செல்வம். அதாவது, அ.தி.மு.க கூடாரத்தைக் காலி செய்துவிட்டு, அ.ம.மு.கவுடன் இணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது எனச் சந்தேகப்படுகிறோம். இருவரையும் சந்திக்க வைத்த அந்த 3வது மனிதர் யார் என்பது குறித்து இதுவரையில் தகவல் வரவில்லை. தினகரனுக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் வேண்டப்பட்ட தொழிலதிபர் என்றால், அவர் இந்த இருவரின் பினாமியாகத்தான் இருக்க வேண்டும்” எனக் கொந்தளித்தவர், 

`அ.தி.மு.கவை, இவர்களின் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். `சசிகலா குடும்பத்தின் பிடியிலிருந்து அ.தி.மு.கவை மீட்க வேண்டும்’ என்பதற்காகத்தான் கலகம் தொடங்கியது. இந்த நோக்கத்திலிருந்து திசைமாறி, ரகசிய சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக்குள் இப்போது பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ வழக்கு இருக்கிறது. இந்த தனி மனிதர்களை நம்பியெல்லாம் கட்சி இல்லை. இவர்களை மனதில் வைத்துக் கட்சியை எடை போடுகிறார் தினகரன். பொதுச் செயலாளர் தேர்தலில் சசிகலாவால் சட்டப்படி போட்டி போட முடியாமல் தடுப்பதற்கான வேலைகளைச் செய்கிறார் தினகரன். `அ.ம.மு.க இடைக்கால ஏற்பாடு என்ற அடிப்படையில், சசிகலா போட்டியிடலாம்’ என்கிறோம். இதற்கு மாறாகப் பேசுகிறார் தினகரன். அவரது பேட்டி குறித்து தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தால், சசிகலாவால் நிச்சயம் போட்டியிட முடியாது. ஜெயக்குமார் கூறியதுபோல, `சசிகலா இந்தக் கட்சியில் இல்லை. வேறு கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்’ என்ற நிலைப்பாடு சரி என்றாகிவிடும். தினகரனைத் தலைவராக்குவதற்காகத்தான் இங்கே சிலர் பாடுபட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மிஞ்சிய பெருமையோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் தினகரன். கட்சித் தேர்தல் நடக்கும்போது, இதற்கான விளைவை அவர்கள் அனுபவிப்பார்கள்” என்றார் கடுகடுப்புடன்.

%d bloggers like this: