Advertisements

லிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்?

ரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும் டேர்ம் இன்ஷூரன்ஸ்  எடுத்துக்கொள்வது மிக அவசியம். டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்தி அதிக காப்பீட்டுத் தொகையைப் பெறுவதாகும்.

இந்த வகையான பாலிசிகளில் குறைந்த பிரீமியத்தைச் செலுத்தி அதிக காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இந்த பாலிசியில், பாலிசிதாரர் உயரிழந்தால் மட்டுமே அவரது குடும்பத்திற்குக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அப்படி நடக்காவிட்டால்,  எந்தவித முதிர்வுத் தொகையும் திரும்பக் கிடைக்காது.


டேர்ம் இன்ஷூரன்ஸில் பலவகைகள் உள்ளன. அதில் லிமிடெட் பிரீமியம் பாலிசி என்பது ஒன்று. அது என்ன லிமிடெட் பிரீமியம் பாலிசி?

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, பாலிசிதாரரின் வயது, எத்தனை ஆண்டுகளுக்கு பாலிசி தேவை மற்றும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டே அந்த பாலிசியின் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரூ.1 கோடிக்கான காப்பீட்டுத் தொகைக்கு 20 வருட பாலிசியில் பிரீமியமாக ஆண்டுக்கு ரூ.12,000 – ரூ.15,000 வரை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்துக் கட்ட வேண்டியிருக்கும். இந்த பாலிசியில் வருடத்திற்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தவேண்டும். ஒரு வருடம் பிரீமியம் செலுத்தத் தவறினாலும், பாலிசி காலாவதி ஆகிவிடும். இதற்கு மாறாக, 20 வருட பிரீமியத்தை வரையறுக்கப்பட்ட குறைந்த பாலிசி பிரீமியம் செலுத்தும் காலமாக மாற்ற லிமிடெட் பிரீமியம் பாலிசிகள் உதவி செய்கின்றன.

உதாரணமாக, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரூ.1 கோடிக்கான காப்பீட்டுத் தொகைக்கு 20 வருட பாலிசிக் காலமாக எடுத்துக்கொண்டு, 10 வருடத்துக்கு பிரீமியம் செலுத்தும் காலமாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பிரீமியமாக ஆண்டு ஒன்றிற்கு ரூ.15,000 – ரூ.18,000 வரை ஆண்டு பிரீமியமாக 10 வருடத்திற்குக் கட்டினாலே போதுமானது. ஆனால், பாலிசியின் ஆயுள் காப்பீடு 20 வருடம் வரை தொடரும்.

லிமிடெட் பிரீமிய பாலிசிகளால் என்ன லாபம்?

* இந்த வகை பாலிசிகளில் பிரீமியம் கட்டும் தொகை குறையும். உதாரணத்திற்கு, மேற்கூறிய பாலிசியில் ஆண்டு பிரீமியம் செலுத்தும்பட்சத்தில் ரூ.2,40,000 –  ரூ.3,00,000 வரை மொத்த பிரீமியமாகச் செலுத்த வேண்டும். இதுவே, லிமிடெட் பிரீமியம் பாலிசியில், ரூ.1,50,000 – ரூ.1,80,000 வரை மொத்த பிரீமியமாகக் கட்ட வேண்டியிருக்கும். இதனால், பாலிசிதாரருக்கு ரூ.80,000 – ரூ.1,20,000 வரை பிரீமியத் தொகையில் சேமிப்பு இருக்கும்.

குறைந்த ஆண்டுகள் பிரீமியம் கட்டினாலும், வழக்கமான டேர்ம் பிளானைவிட ஆண்டுக்கு ரூ.2,000 – ரூ.3,000 பிரீமியம் கூடுதலாகக் கட்ட வேண்டிவரும் என்பதை மனதில்கொள்ள வேண்டும். இப்படிக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குக் கூடுதல் பிரீமியத்தைக் கட்டும் தகுதி உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.

*  லிமிடெட் பிரீமியம் பாலிசி எடுக்கும்பட்சத்தில், பாலிசிதாரர் பாலிசியைக் கைவிடும்பட்சத்தில், சரண்டர் மதிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இந்த பாலிசி எடுப்பதால்,  பாலிசிதாரர்கள் அதிக ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.

* தொழில் செய்பவர்கள் மற்றும் நிலையான மாத வருமானம் இல்லாத துறையில் இருப்பவர் களுக்கு இந்த பாலிசி  உறுதுணையாக இருக்கும். ஏனெனில், அவர்கள் இந்த பாலிசிகளில் பாலிசி யின் மொத்த பிரீமியத்தையும் ஒரே பிரீமியமாக முதல் வருடத்திலேயே செலுத்தவும் முடியும். 

கோட்டக், ஹெச்.டி.எஃப்.சி, டாடா ஏ.ஐ.ஏ, ஐ.சி.ஐ.சி.ஐ, மேக்ஸ் லைஃப், பிர்லா சன் லைஃப் மற்றும் எடெல்வைஸ் போன்ற நிறுவனங்கள் லிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகின்றன.

ஒரு நிதி ஆலோசகரைக் கலந்தாலோசித்து, உங்களுக்குத் தேவைப்படுமெனில், இந்த லிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸை நீங்கள் தேர்வு செய்யலாம்!

Advertisements
%d bloggers like this: