Advertisements

இசை என்ன செய்யும் தெரியுமா?

வாழ்க்கைச் சுழற்சியில் நம் ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு `Pause Button’ தேவைப்படுகிறது… மனதை லேசாக்குகிற, அமைதிப்படுத்துகிற பாஸ் பட்டன். அந்த இடத்தை, அதைத் தவிர வேறு எதனாலும் நிரப்ப முடியாது. மனிதர்களை மட்டுமல்ல, அனைத்து உயிர்களையும் மயங்கவைக்கும் மந்திரம் இசை” என்கிற மனநல மருத்துவர் குறிஞ்சி, இசை சிகிச்சை குறித்து விரிவாகப் பேசுகிறார்.

“இசையால், உங்கள்  மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்; உங்களை மகிழ்ச்சியில் திளைக்கவைக்க முடியும்; உங்கள் குணத்தை மாற்ற முடியும். நம் கலாசாரத்திலேயே இசைக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது. அவ்வளவு ஏன்… ஒரு சினிமாவைப் பிரபலமாக்குபவை பாடல்கள்தானே. இசைக்கு மொழி தேவையில்லை. அதைப் புரியவைக்கவேண்டிய அவசியமில்லை, உணர்ந்தாலே போதுமானது. `90 சதவிகித அமெரிக்கர்கள் தினமும் இசை கேட்கிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. `இசை கேட்பது நல்லது; இசையை வாசிப்பது அதைவிட நல்லது’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஏனென்றால், இசைக் கலைஞர்களின் மூளை பெரியதாகவும், அவர்கள் உணர்வு பூர்வமானவர்களாகவும் இருப்பார்களாம்.
மூளை ஆரோக்கியம்
இசையைக் கேட்பவர்களைவிட, அதைக் கற்றுக்கொண்டு இசைப்பவர்களின் மூளையில் சில நல்ல தாக்கங்கள் ஏற்படுகின்றன. அவை… 
கவனம் (Attention): இசையைக் கற்றுக்கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அதை வாசிப்பவர்களின், பாடுபவர்களின் கவனிக்கும் திறன் அதிகமாகிறது.
ஞாபகசக்தி: ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்வது, மூளையின் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) எனும் பகுதி. இசைக்கலைஞர்களுக்கு ஹிப்போகாம்பஸ் பகுதி சிறப்பாக வேலை செய்யும்.
ஒருங்கிணைக்கும் திறன் (Co-ordination): இசையைக் கேட்டு, வாசிக்கும்போது கண், காது, கை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதோடு, இசைக்கலைஞர்களின் மூளை இயக்கம் சீராகவும், அதன் செயல்திறன் மற்ற சாதாரண மனிதர்களோடு ஒப்பிடும்போது அதிகமாகவும் இருக்கிறது.  
இசையால் மூளையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என்னென்ன? 
நம் உடலில் கார்டிசால் ஹார்மோன் சுரப்பு அதிகமாவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் (Cortisol) ஹார்மோனின் அளவை இசை குறைக்கும். அதோடு,  மறைமுகமாக நோய் எதிர்ப்பு சக்தியைச் சீரான நிலையில் வைத்திருக்கவும் உதவும். டோபமைன் (Dopamine) எனும் நியூரோ டிரான்ஸ்மிட்டர், நம்மை மகிழ்ச்சியாகவைத்திருக்க உதவும். இசையைக் கேட்டால், டோபமைனின் அளவு அதிகரிக்கும். அதனால்தான் இசை கேட்கும்போது ஒருவித மகிழ்ச்சியை உணர்கிறோம். ஆக்சிடோசின் (Oxytocin) ஹார்மோன் மனிதர்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்தி, நம்பிக்கை உணர்வை உண்டாக்குவது. இதன் சுரப்பை இசை அதிகரிக்கச் செய்யும். 

இசை உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன?
பொதுவாக இசையை இரண்டு வகைப்படுத்தலாம். `பீட்’ (Beat) மற்றும் `மெலடி’ (Melody). பீட், உடல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். மெலடி, மனதை அமைதிப்படுத்தும். ஒவ்வொரு நோயாளியின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட ரிதமில், குறிப்பிட்ட நாள்களுக்கு இசையைக் கேட்கவைத்தால், அவர்களின் குழப்பம், கோபம், சந்தேக மனநிலை எல்லாம் குறையும்.
முன்பெல்லாம் மூளையில் சிதைவு ஏற்பட்டால் அதைச் சீர்ப்படுத்த முடியாது. இப்போது தனிநபர் வாழ்க்கையில், சில செயல்களால் மூளையில் மாற்றம் ஏற்படுத்துவது சாத்தியம் எனக் கண்டறிந்திருக்கிறார்கள். இதை `நியூரோபிளாஸ்டிசிட்டி’ (Neuroplasticity) என்கிறார்கள். அதாவது, இசையைக் கேட்கவைப்பதன் மூலம் மூளையின் சிதைந்த பகுதியையும் சீராக்கலாமாம்.  தசைகளில் ஏற்படும் வலிகளையும் இசை குறைக்கும். புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் வலிகளை மறக்கடிக்க இன்னிசை உதவும். 

டிமென்ஷியா (Dementia) எனப்படும் மறதிநோயை குணப்படுத்தவும் இசை உதவும். பார்க்கின்சன்’ஸ் நோயாளிகள் கைகளில் நடுக்கம் இருக்கும். செய்யும் செயலையே மெதுவாகச் செய்வார்கள். இவர்களைக் குறிப்பிட்ட தாள லயத்தில்  இசையைக் கேட்கவைத்தால், அவர்களின் உடலில் சீரான இயக்கம் ஏற்படும். ஹைப்பர் ஆக்டிவிட்டி (Hyper activity) இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க, இசை உதவும். `Schizophrenia’ எனப்படும் மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கு, காதுகளில் ஏதோ குரல் கேட்பது போன்ற பிரமை, மாயக் காட்சிகள் தோன்றும். அவர்கள் காதுகளில் ஹெட்போனை அணிந்துகொண்டு இசை கேட்டால், இந்தப் பிரச்னை குறையும்; ஒரே வேலையைத் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சலிப்புணர்வைப் போக்கவும் இசையை ரசிக்கலாம்.

எப்போது, எவ்வளவு நேரம் இசை கேட்கலாம்?

இசை கேட்பதால் மன அழுத்தம் குறையும். அவரவரின் வாழ்க்கை முறை, விருப்பத்துக்கு ஏற்ப கேட்கலாம். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்வரை கேட்பது மிக நல்லது. இன்றையச் சூழலில் தூக்கமின்மை மிகப் பெரும் பிரச்னை. எனவே, தூங்குவதற்கு முன்னர் இசையைக் கேட்டால் நிம்மதியான தூக்கம் பெறலாம்
உலகை உயிர்ப்போடு வைத்திருப்பது இசை. இசை மட்டும் இல்லையென்றால் எத்தனையோ பேர் மன அமைதியைத் தொலைத்திருப்பார்கள் என்பது உண்மையே.”
– இ.நிவேதா


இசை சிகிச்சை… ஏன், எப்படி?
ல நூற்றாண்டுகளாகவே, `இசைக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு’ என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் உடலாலும் மனதளவிலும் துன்பமடைந்தவர்கள் லட்சக்கணக்கானோர். அப்படி பாதிக்கப்பட்ட பல படைவீரர்களுக்கும் மக்களுக்கும் இசை சிகிச்சை (Music Therapy) மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. இதற்காகவே பிரத்யேகமாக இசைக்கலைஞர்கள் மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டார்கள். வலிகளைப் போக்க இசை ஒரு மாற்று சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டது.
இசை சிகிச்சை என்பது சரியான முறையில் இசையைப் பயன்படுத்தி, பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் மூலம் ஒருவரின் அறிவாற்றல், சமூக உணர்ச்சி மற்றும் உடற் செயல்பாடுகளைச் சீரான நிலைக்குக் கொண்டுவருவது. இசையைக் கேட்கும்போதும், கவனிக்கும்போதும் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. எல்லா இசைகளாலும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்திவிட முடியாது. ஆனால், ஒரு நோயைக் குணப்படுத்துவதில் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது.
பெரும்பாலும் இசை சிகிச்சை, இசைக்கருவிகள் மூலம்தான் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், வார்த்தைகள் நம் எண்ணத்தைத் தூண்டுபவை. வார்த்தைகள் இல்லாமல் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்கும்போது அது சிந்தனையைத் தூண்டுவதில்லை.
நோயை குணப்படுத்தவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இசை சிகிச்சை உதவுகிறது. 
இசை சிகிச்சைகள் இரண்டு வகை.
1. செயல் முறை (Active Mode): நோயாளிகள் இசைச் சிகிச்சையில் பங்கேற்க வேண்டும்.
2. செயலற்ற முறை (Passive Mode): இதில் சிகிச்சை பெறுபவர்கள் இசையை கவனித்தால் மட்டும் போதும்.
நரம்பியல் பிரச்னைகளுக்காகவும், ஹைப்பர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு செயல் முறை இசை சிகிச்சை அளித்தால், நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு குழந்தைகளின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். சரளமாகக் குழந்தைகளைப் பேசவைக்கவும், வளர்ச்சி மற்றும் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இந்த வகை இசை சிகிச்சை உதவும்.
மருத்துவத்துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் ஆதிக்கம் செலுத்துவதும் செயலற்ற முறை இசை சிகிச்சைதான். அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக வயதானவர்கள், ஞாபகமறதி உள்ளவர்களின் நினைவைத் தூண்டுவதற்கு இந்த வகை இசை சிகிச்சை உதவுகிறது.

Advertisements
%d bloggers like this: