Advertisements

குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்!

.தி.மு.க-வின் ஒவ்வோர் அசைவையும் இனி நீதிமன்றம்தான் தீர்மானிக்கப்போகிறது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா? அவை ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்துவிட்டன’’ என்றபடி உள்ளே நுழைந்த கழுகாருக்கு, வாய்நிறைய ஸ்வீட்டைத் திணித்தோம். ஏககுஷியாகி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அ.தி.மு.க விஷயத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன். முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்று கட்சிக் கூட்டத்தில் வைத்து வாயைத் திறந்தார். இதைத் தொடர்ந்து, அவரை எதிர்க் கட்சியினர் காய்ச்சி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர் அரசாங்கத்தின் பிரதிநிதியும் அல்ல, சொன்ன இடம் அரசாங்க அலுவலகமும் அல்ல என்பதுதான் காரணம். பிறகு, அதை மறுத்து பொன்னையன் பேசினார். ஆனால், அவர் சொன்னபடியே தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டது.’’

‘‘ஆமாம்!’’
‘‘தி.மு.க இந்த விஷயத்தை எளிதில் விட்டுவிடாது என்றே தோன்றுகிறது. ‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மேல்முறையீட்டுக்கு வந்தால், அதில் எங்களைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது’ என்று கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதியே தாக்கல் செய்துவிட்டது தி.மு.க. எப்படியும் எடப்பாடியை இதில் சிக்கவைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதங்களை அழுத்தமாக எடுத்து வைக்குமாம். இதற்காக, டெல்லியின் சீனியர் வழக்கறிஞர்களிடம் பலமான ஆலோசனை நடப்பதாகவும் கேள்வி. இதற்காக தாராளமாக செலவு செய்யவும் தீர்மானித்துள்ளார்களாம்.’’

‘‘இதற்கு பதிலடியாக டி.ஆர்.பாலுவைக் குறிவைத்துள்ளதே அ.தி.மு.க?’’
‘‘கடும்கோபத்தில் இருக்கும் எடப்பாடி, ‘மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் தி.மு.க-வின் டி.ஆர்.பாலு. அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக ஒப்பந்தப்புள்ளிக் கோரப்பட்டது. 2006-ல் சேலம்-குமாரபாளையம் 4 வழிச்சாலை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 8 கோடியே 78 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்படி பல டெண்டர்கள் மூலமாக பெருமளவு ஊழல்கள் நடந்துள்ளன. தோண்டத்தோண்ட வந்துகொண்டே இருக்கின்றன தி.மு.க-வின் முறைகேடுகள். அனைத்தும் விரைவில்  அம்பலத்துக்கு வரும்’ என்று தாக்கியுள்ளார். இதற்கு விளக்கம் தந்துள்ள டி.ஆர்.பாலு, ‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல், ஏழு ஆண்டுகள் கழித்து தி.மு.க ஆட்சியில் டெண்டர் ஊழல் என்கிறார். தைரியம் இருந்தால் எங்கள் மீது வழக்குப் போடட்டும்’ என்று கூறியுள்ளார்.’’
‘‘ஆளும்கட்சிக்கு தைரியம் இருக்கிறதுதானே?’’
‘‘ம்… ஏராளமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது அல்லவா? அதில் முதல் வழக்காக, ஸ்டாலின்மீதான வழக்கைத்தான் விசாரிக்கப்போகிறார்கள். ஸ்டாலினுக்குத் துணையாக இன்னும் பலரையும் அனுப்பப்போகிறார் எடப்பாடி. சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராமத்தில் பேசிய எடப்பாடி, ‘தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் வழக்குகளில் சிக்குவார்கள்’ என வெளிப்படையாகவே மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் பல துறைகளின் பழைய ஃபைல்களை ஒரு டீமே உட்கார்ந்து அலசிக் கொண்டிருக்கிறதாம்.’’ 
‘‘சரி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி ஏதாவது செய்தி உண்டா?’’
‘‘எடப்பாடிக்கு இருக்கும் இன்னொரு குடைச்சல், பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கு. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் வேலையில் எடப்பாடி இறங்கியுள்ளார். இந்தத் தேர்தலை நடத்தச்சொல்லி வழக்கு தொடர்ந்திருக்கும் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமியை எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், அவர் சம்மதிக்கவில்லை யாம். ஒருவேளை தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால், சசிகலா போட்டியிட்டிருக்க முடியும். இதில் தினகரன் சிக்கலை ஏற்படுத்தி விட்டதாக சசிகலா தரப்புக்குக் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்தபேட்டியில், ‘அ.ம.மு.க என்பது தனிக்கட்சி. அ.ம.மு.க-வுடன் அ.தி.மு.க விரைவில் இணையும்’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார் தினகரன். இந்த விஷயம், எடப்பாடி தரப்பைக் குஷிப்படுத்தியுள்ளது. ‘அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலாதான். வேறு ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்கிற வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைப்போம்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர் அ.தி.மு.க-வினர். 30 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் இருந்த கட்சியை விட்டுவிட மனமில்லாத சசிகலா, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டே தீருவது என்று வைராக்கியத்துடன் இருக்கும் நிலையில், தினகரனின் இந்தப் பேச்சு சட்டச் சிக்கல் எதையாவது உருவாக்கிவிடுமோ என்று வருத்தத்தில் இருக்கிறாராம் சசிகலா.’’
‘‘தினகரன் தன் கட்சி அலுவலகத்தில் நடத்திய கூட்டத்திலிருந்து அரூர் எம்.எல்.ஏ-வான முருகன் எஸ்கேப்பாமே?
‘‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் 17 பேர், சமீபகாலமாக தினகரனுடன் கைகோத்துத் திரியும் அ.தி.மு.கவின் ரத்தினசபாபதி, பிரபு மற்றும் கலைச்செல்வன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தினகரனையும் சேர்த்து 22 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கருணாஸும் வந்திருந்தார். முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தினகரன் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அ.தி.மு.க-வினர் அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார்கள். ‘முருகன் போல அடுத்தடுத்து ஆட்கள் எஸ்கேப் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், இந்த அவசர ஆலோசனைக் கூட்டமே. இந்நிலையில், மருத்துவமனையில் முருகன் இருப்பதாகக் கூறி ஏமாற்றப் பார்க்கிறார் தினகரன்’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வெளியாகக்கூடும் என்ற நிலையில், இனியும் ரிஸ்க் எடுக்க தினகரன் விரும்பவில்லை. தீர்ப்பைத் தொடர்ந்து 18 பேரில் சிலர் அணி தாவக்கூடும் என்ற தகவல் வந்ததால், அனைவரும் ஒரே இடத்தில் பாதுகாப்புடன் இருக்கும்வகையில் குற்றாலத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்குகிறார்கள்.’’
‘‘குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸா?’’
‘‘ஆமாம். புதுச்சேரியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், தொகுதிக்கு இருவர் வீதம் தி.மு.க-வில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘யார் யார் எம்.பி தேர்தலில் சீட் கேட்பார்கள் என்பதைக் கண்டறிந்து, பொறுப்பாளராக நியமித்துவிட்டார் ஸ்டாலின். இதனால், இப்பட்டியலில் உள்ளவர்களுக்கு சீட் கிடைக்காது என்பதை சூசகமாக உணர்த்திவிட்டார். வேறு தொகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலமாக, சொந்தத் தொகுதிகளில் அதிருப்தி அரசியல் செய்வதற்கும் செக் வைத்துவிட்டார் ஸ்டாலின்’ என்று கட்சியினர் பலரும் புளகாங்கிதம் அடைகின்றனர். பட்டியலில் இடம்பெற்றுள்ள பலர் நொந்து கிடக்கிறார்களாம். பொறுப்பாளர்களில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பதும் பிரச்னையைக் கிளப்பியுள்ளது. ‘இளைஞர்களை எல்லாம் பொறுப்பாளராகப் போட்டு, அவர்களுக்குக் கீழ் எங்களைப் பணியாற்றச் சொல்வது சரியல்ல’ என்று சீனியர் மாவட்டச் செயலாளர்கள் பலரும் புலம்ப ஆரம்பித் துள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை யெல்லாம் சரி செய்யவே 25-ம் தேதியன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளார்கள்.’’
‘‘கமல்-ராகுல் சந்திப்பு விஷயம் திடீரென ட்ரெண்டிங் ஆகிறதே?’’ 
‘‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் எதிர்பார்ப்பு, குறைந்தபட்சம் 18 சீட்கள். இது குதிரைக்கொம்புதான் என்று தெரிந்திருந்தாலும், தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், ஒற்றை இலக்கத்தில் சீட் தருவதாகச் சொல்லி தி.மு.க ஓட வைத்துவிடும் என்கிற பயமும் காங்கிரஸாருக்கு இருக்கிறது. அதை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றால், இருக்கிற உதிரிக்கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறது தி.மு.க. அதாவது, கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் அதன் எண்ணம். குறைந்தபட்சம் 28 தொகுதிகளில் வெற்றி கிடைத்தால்தான், தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்ற முடியும் என்பது ஸ்டாலினின் எண்ணம். ‘இதை மோப்பம் பிடித்துதான், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று கமல் மூலமாகவே சொல்ல வைத்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள்’ என்கிறார்கள்.’’
‘‘ஓஹோ…’’
‘‘இந்த விஷயத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலையும் உருள்கிறது. ஏற்கெனவே, ‘காங்கிரஸ், பா.ம.க., அ.ம.மு.க ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணியை அமைக்க கமல் வியூகம் வகுக்கிறார்’ என்ற தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்போது தி.மு.க கூட்டணியை கமல் உடைப்பார் என்கிற செய்தி ரவுண்டு அடிக்கிறது. இப்படிப்பட்ட செய்திகள் வெளிவருவதன் பின்னணியில் மத்திய உளவுத்துறை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, கன்னியாகுமரி தொகுதியின் தற்போதைய எம்.பி-யாக இருக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைத் தோற்கடிக்க, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கங்கணம் கட்டிக்கொண்டு இப்போதே வேலை பார்க்கிறது. ‘இந்தக் கூட்டணியை உடைத்தே தீரவேண்டும்’ என நினைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், அதற்கான பல வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். அதனால்தான், ‘தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்’ என்பது உள்ளிட்ட செய்திகள் உளவுத்துறை மூலமாகப் பரப்பப்படுகின்றன என்றும் பேச்சு இருக்கிறது’’ என்ற கழுகார், பறந்தார்.

Advertisements
%d bloggers like this: