இனி தாயின் கருவறையில் வைத்தே குழந்தைக்கு ஆபரேஷன் செய்யலாம் – இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை!

ன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்’- இது பிரபுதேவா நடித்த படத்தின் புகழ்பெற்ற பாடல் வரிகள். கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் கருவில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கருவறை

கருவில் இருக்கும் குழந்தையின் முதுகு தண்டுவட எலும்புகள் சரியாக உருவாகாமல், தண்டுவடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுவது ‘ஸ்பைனா பிஃபிடா’ என்ற குறைபாடாகும். தண்டுவடம் சரியாக உருவாகாத காரணத்தினால், அதன் உள்ளே இருக்கும் திரவம் கசியத் தொடங்கும். 

இது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு, பிறந்த பிறகு குழந்தை நடப்பதில் சிக்கல் ஏற்படுத்தி, பல்வேறு நீண்ட கால உடல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும். இந்தப் பிரச்னைக்கு மருத்துவர்கள் குழந்தையின் தாயின் வயிற்றில் சிறு துளைகளின் மூலம் கருவிகளை உள்ளே செலுத்தி குழந்தையின் முதுகுத் தண்டுவடத்தில் 90 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக்கியுள்ளனர்.  எலும்புகள் உருவாகாமல் வெற்றிடம் காணப்பட்ட பகுதியில் தையல் போட்டு, அதிலிருக்கும் திரவம் கசிவது தடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் குழந்தை பிறந்த பிறகு செய்யப்படும் இந்த சிகிச்சை, தாயின் கருவில் இருக்கும்போதே வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இந்த உலகைக் காண வந்துவிட்டன. வெற்றிக் களிப்பில் மருத்துவர்கள்!  

%d bloggers like this: