Advertisements

“ஏழு பேரை இழுத்தால் ஆட்சி கவிழும்!” – தினகரன் திட்டம்

வேகமாக உள்ளே நுழைந்த கழுகார், ‘‘கடந்த இதழில் வெளியான ‘நாக் அவுட் ஜெயக்குமார்?’ கவர் ஸ்டோரி அசத்தல். எக்ஸ்க்ளூசிவாக செய்திகளை அள்ளித்தந்த ஜூ.வி டீமுக்குப் பாராட்டுக்கள்’’ என்று பூங்கொத்தை நீட்டி அசரடித்தார். அதேவேகத்தில் செய்திகளுக்குள் புகுந்தார்.
‘‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இப்படி வரும் என எதிர்பார்த்திருப் பார்களா என்பது தெரியாது. ஆனால், இந்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஞாயிற்றுக்கிழமையே வந்துவிட்டது. அதனால்தான் தினகரன், சென்னை அசோக் நகரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் இந்த 18 பேருடன் ஆலோசனை நடத்தினார். தீர்ப்பு எப்படியும் தங்களுக்குச் சாதகமாக வரும் என அவர் நம்பினார். ‘தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்ததும், இந்த 18 பேரின் பதவி உயிர்பெற்றுவிடும். அப்போது யாரும் அணி தாவிச்சென்று எடப்பாடியுடன் சேர்ந்துவிடக் கூடாது’ என்பதற்காகவே அவர்களைக் குற்றாலத்துக்கு அனுப்பி வைத்தார். அதே ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் வீட்டிலும் ஒரு ரகசிய ஆலோசனை நடந்தது. ‘தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம்’ என அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.’’

‘‘ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லையே?’’
‘‘தினகரனுக்கு நெருக்கமானவர்கள், இதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள். இதேபோல தி.மு.க-வும் பல வாய்ப்புகளை ஆலோசித்து வருகிறது. முதல் வாய்ப்பு, ஆட்சியைக் கவிழ்ப்பது. இந்தக் கணக்கைக் கொஞ்சம் பாருங்கள். 234 தொகுதிகளில், ஏற்கெனவே ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றமும், கருணாநிதி மறைவால் திருவாரூரும் காலியாக உள்ளன. இப்போது 18 தொகுதிகள். மொத்தம் 20. எனவே, இப்போது சட்டமன்றத்தின் பலம் 214. இதில் பெரும்பான்மைக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை. ‘எங்கள் ஆட்சிக்கு 109 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ளது’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் 97 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். தினகரன் சுயேச்சை. அவர் பக்கம் இப்போது அ.தி.மு.க-வைச் சேர்ந்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் உள்ளனர். இவர்கள் தவிர, இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோரையும் தினகரனின் கணக்கில்தான் சேர்க்கிறது ஆளும்கட்சி. எனவே, தினகரன் கணக்கு ஏழு. தி.மு.க கூட்டணியினரையும் இதையும் கூட்டினால், ஆளும்தரப்புக்கு எதிரானவர்களின் பலம் 104. சபாநாயகரைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஆளும்கட்சியின் பலம் 109.’’

‘‘மெஜாரிட்டி இருக்கும்போது, ஆட்சியை எப்படிக் கலைக்க முடியும்?’’
‘‘சொல்கிறேன் கேளும். கடந்த ஜூலை 9-ம் தேதியுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்தது. எனவே, வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் சட்டமன்றம் கூட வேண்டும். அப்போது எடுத்துக்கொள்ளும்விதமாக தி.மு.க தரப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்படும். ‘தி.மு.க கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தினகரன் உள்ளிட்ட ஏழு எம்.எல்.ஏ-க்களும் ஆதரிக்கலாம். அத்துடன் அ.தி.மு.க-வில் இருக்கும் தங்களின் ஸ்லீப்பர் செல்களில் ஏழு பேரை இழுக்கலாம்’ என்பது தினகரன் திட்டம். இந்த ஏழு பேரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டியதில்லை. அன்றைக்கு சட்டமன்றத்துக்கு வராமல் இருந்தாலே போதும்… 102-க்கு 104 என்ற ஓட்டு எண்ணிக்கையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சிக் கவிழ்ந்துவிடும். இதற்கு ஆறு பேரே போதுமானதுதான் என்றாலும், சட்டச் சிக்கல்கள் எதுவும் எழாமல் இருக்க, ஏழு பேர் தேவை என்று தினகரன் கருதுகிறார்.’’
‘‘ஏற்கெனவே தினகரனை நம்பிப் போனவர்கள் 18 பேர் பதவியை இழந்திருக்கும் நிலையில், புதிதாக அவர் பக்கம் எம்.எல்.ஏ-க்கள் வருவார்களா?’’
‘‘அ.தி.மு.க முகாமில் சில எம்.எல்.ஏ-க்கள் வருத்தத்தில் உள்ளார்கள். ‘முதல்வர் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் நான்கு பேருக்காக நடைபெறும் ஆட்சியாக இது உள்ளது’ என்று இவர்கள் புலம்புகிறார்கள். இவர்களை தினகரன் தரப்பு குறிவைத்து பல நாள்களாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தீர்ப்பு வந்ததும் அணிமாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் எட்டு எம்.எல்.ஏ-க்களுக்குக் குறிவைக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் முகாம் மாறும் மூடுக்கு வந்திருந்தார்கள். ஆனால், தீர்ப்பு தலைகீழாக மாறியதும், பதுங்கிவிட்டனர். அவர்கள் யாரென்பதை ஆதாரத்துடன் எடப்பாடியிடம் உளவுத்துறை சொல்லிவிட்டதாம். இதையடுத்து, அவர்கள் மீது ‘பொருளாதாரத் தடை’ விதித்து உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி.’’
‘‘எடப்பாடி அதை மட்டும்தான் செய்தாரா?’’
‘‘தினகரனுக்கு செக் வைப்பது மட்டுமே எடப்பாடி தரப்பின் ஒரே அஜெண்டா. தேர்தலை நடத்துவது அல்ல. இடைத்தேர்தலை நடத்தினால் விளைவு என்னவாகும் என்பது ஆளும்கட்சிக்குத் தெரியாமல் இல்லை. ‘இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலைத் தள்ளிப்போட்ட எங்களுக்கு, 20 தொகுதிகளின் தேர்தலைத் தள்ளிப்போடத் தெரியாதா’ என்று கேட்கிறார்கள் அவர்கள். நாடாளுமன்றத் தேர்தல்வரை இதைத் தள்ளிப்போடுவதுதான் ஆளும்கட்சியின் திட்டம்.’’
‘‘இது சாத்தியமாகுமா?’’
‘‘அதற்குத்தான் சில வாய்ப்புகளை அவர்கள் தேடுகிறார்கள். ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் கருத்தைக் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என தினகரன் அறிவித்துள்ளார். மற்றவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும், இடைத்தேர்தலைச் சந்திக்கலாம் என தினகரன் நினைக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் இதற்காக மனு செய்து, ‘ஒன்றரை ஆண்டுகளாக இந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதால், மக்கள் பணிகள் நடைபெறவில்லை. எனவே, சீக்கிரம் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று வழக்குப் போடநினைக்கிறார் அவர். ஆனால், இந்த 18 பேரில் ஒருசிலரை தங்கள் பக்கம் இழுத்து, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வைக்கலாமா என ஆளும்தரப்பு ஆலோசனை செய்கிறது. அப்படிச் செய்தால், இடைத்தேர்தல்களை நீதிமன்றமே தள்ளிப்போட்டுவிடும். அதற்கு நடுவில், தினகரன் பக்கம் மிச்சமிருக்கும் எம்.எல்.ஏ-க்களை இழுக்கவும் திட்டங்கள் தீட்டப்படும். அது முடியாவிட்டால், அவர்களைத் தகுதிநீக்கம் செய்யும் வழிகளும் ஆலோசிக்கப்படும். சபாநாயகர்மீது கருணாஸ் கொடுத்த நோட்டீஸ் ஒன்று நிலுவையில் இருப்பதால், அதை இப்போது செய்யமுடியாமல் இருக்கிறது. அந்த நோட்டீஸை என்ன செய்யலாம் என இப்போது ஆலோசனை நடக்கிறது.’’
‘‘ஸ்டாலின் என்ன முடிவில் இருக்கிறார்?’’
‘‘இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் ஜெயிக்க என்ன செய்யலாம் என சீனியர் நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை செய்துவருகிறார். ஒருவேளை அப்படி நடந்தால், தி.மு.க ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ‘இது ஆளும்தரப்புக்கும் தெரியும். அதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தலை நடத்தவிட மாட்டார்கள்’ என்று பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதனால், ‘20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தச்சொல்லி நீதிமன்றத்தை அணுகலாமா’ என தி.மு.க-வும் ஆலோசித்து வருகிறது. ஆனால், ‘தனியாக இடைத்தேர்தல் நடந்தால் ஆளும்தரப்பும் தினகரன் தரப்பும் பணத்தை இறைப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடந்தால் நமக்கு நல்லது’ என சீனியர் தலைவர்கள் ஸ்டாலினிடம் சொன்னார்கள். எது எப்படியோ, அடுத்த சில வாரங்களுக்கு பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது’’ என்ற கழுகார், மற்ற செய்திகளுக்குத் தாவினார்.
‘‘விடுதலையாகி வெளியில் செல்லும்போது, ஆங்கிலத்தில் முழுமையாக உரையாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் ஆங்கில மற்றும் கன்னட மொழி வகுப்புகளில் ஆர்வமுடன் கலந்துகொள்கிறார். இளவரசியும் கன்னடம் கற்கிறார். பெண் கைதிகளுக்கு என்று தனியாக நூலகம் ஒன்று உள்ளது. இங்கே புத்தகங்களைப் படிக்கும் சசிகலா, கம்ப்யூட்டரும் கற்றுக்கொள்கிறாராம். கூடவே, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் கன்னட மொழி ‘டிப்ளோமா’ கோர்ஸும் படிக்க விண்ணப்பித்துள்ளார்.’’
‘‘ஓ… சசிகலா சென்னா கீதாரா?’’
‘‘உமக்கும் கன்னடம் தெரியுமா? அவர் நன்றாக இருக்கிறாரா என்று கேட்கிறீர். ஆனால், சசிகலா மட்டுமல்ல, இளவரசியும் நலமாக இல்லை. இருவரையுமே உடல்நலப் பிரச்னைகள் படுத்தி எடுக்கின்றன. சர்க்கரை நோய்க்கு இன்சுலின் போட்டுக்கொள்பவர் என்பதால், மிகவும் உடைந்து போயிருக்கிறாராம் இளவரசி. அதனால், சொந்த பந்தங்களை நேரில் பார்த்தால் ஆறுதலாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம். சிறைக்குப்போய் ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை அவர் பரோலில் வெளியில் வரவே இல்லை. தற்போது, அவரின் சகோதரர் உடல்நிலை பாதிப்படைந்திருப்பதால், ஆறுதல் கூறுவதற்காக பரோல் பெற்றுள்ளார். ஏற்கெனவே பரோலில் வந்த சசிகலா, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் சென்னை வீட்டில் தங்கினார். இளவரசியும் அங்கேதான் தங்குகிறார்.’’
‘‘சசிகலாவுக்கு என்ன பிரச்னை?’’
‘‘அவருக்கும் சர்க்கரை நோய்தான். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரைக்கும் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால், இத்தனை உடல்நலப் பிரச்னைகளோடு அவ்வளவு காலம் சமாளிக்க முடியாது என்றே நினைக்கி றாராம் சசிகலா. அதனால், உடல்நிலையைக் காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்டபூர்வமான வாய்ப்புகளை அலசிக்கொண்டுள்ளது அவரின் வழக்கறிஞர் படை. கூடவே, கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மனு அளிப்பதன் மூலமாகவும் முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான வாய்ப்பு உண்டா என்றும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.’’
‘‘சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான வி.வி.மினரல் நிறுவனத்தில் ரெய்டு நடந்துள்ளதே?’’
‘‘அந்த நிறுவனம் கடந்த மூன்று வருடங் களாக வருமானவரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரையடுத்தே இந்த ரெய்டு. வி.வி மினரல் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நெல்லை மாவட்டம் கீரைக்காரன்தட்டு கிராமத்தில் சோதனை நடத்தப்பட்டது. வைகுண்டராஜனின் வீடு, அவர் சகோதரர் வீடு, வி.வி மினரல் அலுவலகம், வி.வி பெயின்ட்ஸ் அலுவலகம் உள்பட, தமிழகம் முழுவதும் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே, மு.க.ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டிய வைகுண்டராஜன் தரப்பு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக தன் தொழிலை முடக்கியிருப்பதால், ஆளும்தரப்புமீது வைகுண்டராஜன் கோபத்தில் இருக்கிறார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பை யொட்டி தினகரன் எடுத்த சில முயற்சிகளுக்கு வைகுண்டராஜன் ‘பக்கபலமாக’ இருப்பதாக டெல்லிவரை தகவல் போனது. தீர்ப்பு வெளியான நாளில், அந்த முயற்சியை முடக்கி, வைகுண்டராஜன் தரப்பை அதிர்ச்சியாக்கும் வகையில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: