Advertisements

மருத்துவத்திலும் மெய்நிகர் உண்மை – வியப்பளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி விஞ்ஞானம்

ன, உடல்ரீதியான பல பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப கேட்ஜெட்டுகளே காரணம்’ என்று குற்றம் சொல்கிறோம். ஆனால் இதே தொழில்நுட்பம்தான் மருத்துவ சிகிச்சைகளில் புதுமைகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. லேட்டஸ்ட் உதாரணம், விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), சுருக்கமாக வி.ஆர். பொழுதுபோக்குக்கான விஷயமாக மட்டுமே பார்க்கப்பட்ட வி.ஆர் தொழில்நுட்பம், இப்போது மருத்துவத் துறைக்கும் முன்னேறியிருக்கிறது. 

அதென்ன விர்ச்சுவல் ரியாலிட்டி?

இந்தத் தொழில்நுட்பம், கணினிகள் மூலம் முப்பரிமாணச் சூழல் ஒன்றை உருவாக்கி, அந்தச் சூழலில் நிஜத்தில் இருப்பதுபோல நம்மை உணரச்செய்யும். நம் செயல்களுக்கேற்ப காட்சிகள் நம் பார்வைக்கு வந்தடைவதால், அங்கிருக்கும் பிம்பத்தை அப்படியே நமக்குத் தரும். இதைக் காண்பதற்கு சிறப்பு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகள் இருக்கின்றன. செயற்கையான சூழல்கள் மட்டுமல்லாமல், நிஜத்திலிருக்கும் இடங்களையும்கூட சிறப்பு கேமராக்களில் படம்பிடித்து, இருக்கும் இடத்திலிருந்தே அங்கு சென்று வரும் உணர்வைக்கூட இதனால் பெற முடியும்.

ஓர் உணர்வையோ, சிந்தனையையோ, செயலையோ நம் மூளை தொடர்ந்து பெறும்போது அவற்றுக்கு ஏற்றபடி மூளைக்குச் செல்லும் நரம்பியல் பாதைகள் தம்மைத் தாமே மாற்றியமைக்கத் தொடங்கும். இதை
‘நியூரோபிளாஸ்டிசிடி’ (Neuroplasticity) என்று சொல்கிறார்கள். அதாவது, சில நாள்களாகவே தொடர்ந்து ஒரு சிகிச்சையாலோ, விபத்தினாலோ ஒருவர் வலியை உணர்ந்துகொண்டிருந்தால், நரம்பியல் மையங்கள் வலிக்கு முன்னுரிமையளித்து அதற்கேற்ப பாதைகளை அமைத்துக்கொள்ளும். இதைத் தடுக்க விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகள் மூலம் அவர்களை அவர்களே பார்க்கவைக்கலாம். உதாரணத்துடன் பார்ப்போம்.

நம் வலது கை எலும்புமுறிவால் பாதிக்கப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது நம்முடைய கையை ஒவ்வொரு முறை அசைக்கும்போதும், வலி உணர்வுகள் நம் மூளையைச் சென்றடையும். அந்த நேரத்தில் நாம் வி.ஆர் ஹெட்செட் அணிந்து, இடது கையில் சில சென்சார்கள் பொருத்திக்கொள்வோம். இப்போது நாம் இடது கையைத் தூக்கினால், ஹெட்செட்டில் வலது கையைத் தூக்குவதுபோல் தெரியும். நம் கண்கள் தொடர்ந்து இதைப் பார்க்கும்போது மூளை குழம்பிவிடும். நாம் அசைப்பது வலது கையையா அல்லது இடது கையையா எனத் தெரியாமல், கை வேகமாக குணமாகிவருகிறது என நினைத்து வலி நரம்புகள் தங்கள் பாதைகளை மாற்றி அமைத்துக்கொள்ளும். இதன் மூலம் வலி குறையும். இது முற்றிலும் உளவியல் சார்ந்த சிகிச்சை என்பதால் பக்கவிளைவுகளும் இருக்காது.

 

மறதியை குணப்படுத்துவதில்…

இந்தியாவில் மட்டும் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் அல்சைமர் என்கிற மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூளையில் என்ன நடக்கிறது, எப்படி நினைவுகள் சேமிக்கப்படுகின்றன, எப்படி அவை நினைவுபடுத்தப்படுகின்றன, எதனால் மறதி ஏற்படுகிறது எனப் பல கேள்விகளுக்கு இன்றுவரை ஆராய்ச்சியாளர்களிடம் பதில்கள் இல்லை. இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக, நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் விர்ச்சுவல் ரியாலிட்டியை நாடியிருக்கிறார்கள். விர்ச்சுவல் ரியாலிட்டியில் மனிதர்களை இருக்கவைத்து அந்தச் சூழலையும், மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் பதிவுசெய்து வருகிறார்கள். இதில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சைகளில்…

கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு முன்னர் சிகிச்சை பெறவிருக்கும் நோயாளியின்  உடல் உறுப்புகளை 3டியில் ஸ்கேன் செய்து, அதை விர்ச்சுவல் ரியாலிட்டியில் பார்த்து முன்னேற்பாடுகள் செய்து, அதன் பின்னர் நிஜ அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதன் மூலம் அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் தோல்விகள் குறையும் என நம்பப்படுகிறது.

ஆட்டிசம் சிகிச்சையில்…

ஆட்டிசம் பாதிப்புக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரத்யேக தெரபிகள் மூலம் பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும். விர்ச்சுவல் ரியாலிட்டி தெரபிகள் மூலம்  பாதிக்கப்பட்டவரின் குணாதிசயங்களைக் கண்காணிப்பதோடு அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.

சமீபத்தில் கூகுள் கார்டுபோர்டு பாக்ஸ் போன்றவற்றால் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடிய ஒன்றாகிவருகிறது. மேலே  கூறப்பட்ட சிகிச்சை முறைகள் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வரும் நிலையில் இவை இந்தியாவிலும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டன. இதன் மூலம் இனி வரும் காலங்களில் மருத்துவத்துறையிலும் மெய்நிகர் உண்மை உச்சம் எட்டப் போகிறது.


 

மருந்துகளைக் குறைக்கும் மாயம்!

விர்ச்சுவல் ரியாலிட்டி தெரபியின் மூலம் குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுக்கும் பெங்களூரைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் பிரமோத் சின்டெர், அதன் சிறப்புகளை விளக்குகிறார்.

‘‘விர்ச்சுவல் ரியாலிட்டி தெரபியை நாங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் தருகிறோம். பிசியோதெரபி எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் முழுவதுமாக இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி உலகத்தில் மூழ்கிவிடுவதால், வலி உணர்விலிருந்து அவர்களது கவனம் வெளியே வந்துவிடுகிறது. இதனால் கிட்டத்தட்ட முப்பது சதவிகித வலி நிவாரண மருந்துகளையும் குறைக்க முடிகிறது. பக்கவிளைவுகளையும் குறைக்க முடியும். மேலும் ASMR (Automatic Sensory Meridian Response) என்கிற ஆடியோவை இதனுடன் இணைக்கும்போது வலியை மறந்து குழந்தைகளும் பெரியவர்களும் தூங்கிவிடுகின்றனர். இதை மிகக் குறைந்த விலையில் கூகுள் கார்டுபோர்டு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகள் மூலம்தான் தருகிறோம். இது சிகிச்சையின் ஓர் அங்கம்தானே தவிர, முக்கிய சிகிச்சை இல்லையென்பதால் பெரும் தொகை செலவிடுவதும் தேவையற்றது. எனவே, இது அனைவருக்குமான விஷயமாகவும் விரைவில் மாறத் தொடங்கும்.’’

Advertisements
%d bloggers like this: