Advertisements

ஏமாற்றுத் திட்டங்கள்… எச்சரிக்கை டிப்ஸ்!

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், 84% ஆண்டு வருமானம் கிடைக்கும் என நம்பி பல லட்சங்களை இழந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நம்பிக்கையோடு முதலீடு செய்ததில், 50 லட்சம் ரூபாய் மட்டுமே அவருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த மோசடி குறித்து யுவராஜ் சிங்கின் தாயார் புகார் அளித்ததை அடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். அந்த நிறுவனம்,

பணத்தை பிட்காயினில் முதலீடு செய்து, அதிலிருந்து ஹவாலா நெட்வொர்க்கிற்குப் பணத்தைத் திருப்பிவிட்டதாகவும், மேலும் இவரைப்போலவே இன்னும் பலரிடம் முதலீட்டைப் பெற்று ரூ.700 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு பிரபலத்தின் தாயாரே இப்படி பொன்ஸி திட்டத்தில் முதலீடுசெய்து ஏமார்ந்திருப்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

“ஒரு பிரபலமே முதலீடு செய்திருக்கிறார், நாமும் அதில் முதலீடு செய்யலாம் என்ற முடிவுக்கு வருவது தவறு என்பதற்கு இது நல்ல உதாரணம். ஏனெனில், ஒருவர் பிரபலமாக இருப்பதாலேயே முதலீடு செய் வதிலும் மிகுந்த அறிவுடனும்,  அனுபவத்துடனும் இருப்பார் எனக் கருத முடியாது. நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை எப்படி முதலீடு செய்வதென்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
அடுத்ததாக, எந்த ஒரு முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தில் இருக்கும் ரிஸ்க் என்ன என்பது குறித்து ஓரளவாவது புரிந்துகொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும். பின்னர், அந்தத் திட்டத்திலுள்ள டாக்குமென்ட் நடைமுறைகளைச் சரியாகச் செய்து அவை அனைத்திற்கும் ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான ஒன்று, விதிமுறைகளை வகுத்து, கண்காணிக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பின்கீழ் வராத எந்தத் திட்டத்திலும் முதலீடு செய்யக்கூடாது. எனவே, இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கும் ரெகுலேட்டர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வங்கிகள் நடத்தும் திட்டங்களில் பணத்தைப் போடுவதன் மூலம் சராசரியாக 7-8% வருமானம் கிடைக்கிறது. அதைவிட அதிகமாக    அதாவது, 12-15% வரை தருகிறார்கள் என்றால் ஓரளவுக்கு அந்தத் திட்டத்தை நாம் நம்பலாம். அதற்குமேல் எனில், ‘take it with a pinch of salt’ என்பதுபோல, ஓரளவுக்கே அதனை நம்ப வேண்டும். அந்தத் திட்டங்களை மிகக் கவனமாக அணுக வேண்டும். ஒரு நிறுவனம் நமக்கு உறுதியளிக்கும் வருமானம் மிகப் பெரிதாக இருந்தால், அவர்களின் வருமானம் அதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
84% வருமானம் தருகிறோம் என்று சொன்ன நிறுவனத்தை நம்பி, யுவராஜின் தாயார் முதலீடு செய்திருக்கிறார் என்றால், அது அவரது அறியாமையையே காட்டுகிறது. ஒருசிலர், தனக்கென ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும்; தானும் சம்பாதிக்க வேண்டும் என்ற சமூக அழுத்தத்தின் காரணமாக யாரையும் கலந்தாலோசிக்காமல் இப்படி தவறான முதலீட்டைச் செய்துவிடுகிறார்கள். இன்னும் பலர், பேராசை காரணமாக இத்தகைய திட்டங்களை நம்பிவிடுகிறார்கள்” என்றார்.
அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, தவறான நிறுவனத்தில் முதலீடுசெய்து, சம்பாதித்த பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த விஷயத்திலிருந்து நாம் கற்கவேண்டிய பாடம்!

Advertisements
%d bloggers like this: