சுரைக்காயை ஒதுக்கும் குழந்தைகளையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் ரெசிப்பிகள்!

குழந்தைகளுக்குச் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

1. சுரைக்காய் கபாப்

தேவையானவை:

சுரைக்காய்த் துருவல் – ஒன்றரை கப்

தோல் சீவிய துருவிய இஞ்சி  – ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு – அரை கப்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்

பூண்டுப் பல் – 3

பச்சை மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப)

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் பிறகு, தண்ணீரை வடியவிட்டு, இதனுடன் சுரைக்காய்த் துருவல், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் பூண்டுப் பல், பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பதைப் போல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சோம்பு, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், சோள மாவு, கரம் மசாலா தூள்  சேர்த்துப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி,  நீளவாக்கில்  விரல்களைப் போல் உருட்டி  வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு நீளவாக்கில் உருட்டியவற்றைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். 

2. சுரைக்காய் வடாம்

தேவையானவை:

சுரைக்காய்த் துருவல் – 2 கப்

காய்ந்த மிளகாய் – 10

இட்லி புழுங்கல் அரிசி – 2 கப்

சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை ஃபுட்கலர் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

இட்லி புழுங்கல் அரிசியுடன் மிளகாய் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர்விட்டு முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து சுரைக்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கொதி வந்ததும் அரைத்த சுரைக்காய் விழுது, உப்பு, ஃபுட் கலர், சீரகம்  சேர்த்து அடிப்பிடிக்காதவாறு கைவிடாமல் கிளறி வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிய கரண்டியால் சுரைக்காய் கூழை வட்ட வடிவில் ஊற்றவும். வெயிலில் நன்கு காயவிட்டு எடுத்துச் சேகரிக்கவும். தேவையானபோது சூடான எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடவும்.

3. சுரைக்காய் ஃப்ளோட்டிங் பால்ஸ்

தேவையானவை:

சுரைக்காய்த் துருவல் – ஒரு கப்

பாசிப்பருப்பு – அரை கப்

தேங்காய்த் துருவல் – கால் கப்

பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்)

தோல் சீவி துருவிய இஞ்சி  – ஒரு டீஸ்பூன்

பூண்டுப் பல் – 2 (தட்டவும்)

ஓமம் – அரை டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு –  2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

மிதக்கவிடத் தண்ணீர் செய்ய:

புளிக்கரைசல் – கால் கப்

மஞ்சள்தூள் –  ஒரு சிட்டிகை

வெல்லத்தூள் – கால் கப்

சாட் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

கெட்டித்தயிர்  –  சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

ஓமப்பொடி (அ) காராபூந்தி – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப 

செய்முறை:

பாசிப்பருப்பைத் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு மலர வேகவைத்து எடுக்கவும். சுரைக்காய்த் துருவலைத் தண்ணீர் இல்லாமல் பிழியவும். வெந்த பாசிப்பருப்புடன், சுரைக்காய்த் துருவல், உப்பு, பச்சை மிளகாய், ஓமம், சீரகம், தேங்காய்த்துருவல், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன் பனீர் துருவல், எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசைந்து சிறிய பந்துகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, உருட்டிய பந்துகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுரைக்காய்ப் பந்துகள் ரெடி. புளிக்கரைசலுடன் சிறிதளவு தண்ணீர், மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், சேர்த்து மிக்ஸியில்  அரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சாட் மசாலா தூள் தூவவும். இதில் பொரித்த சுரைக்காய் பந்துகளை மிதக்கவிடவும். மேலே தயிர் ஊற்றி, கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி (அ) காராபூந்தி தூவி பரிமாறவும்.

4. சுரைக்காய் ரெலிஷ்

தேவையானவை:

சுரைக்காய்த் துருவல் – அரை கப் (தோல் சீவி, விதை நீக்கியது)

மிளகுத்தூள், சீரகத்தூள், சாலட் ஆயில் – தலா ஒரு டீஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள்ஸ்பூன்

புதினா இலைகள்  –  சிறிதளவு

பூண்டுப் பல் – 2

வெள்ளரித் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

சுரைக்காய்த் துருவலுடன் கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், வெள்ளரித் துருவல், பூண்டுப் பல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சால்ட்  ஆயில் சேர்த்துக் கலக்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:

பிரெட் சாண்ட்விச் செய்யும்போது இந்தச் சுரைக்காய் ரெலிஷை பிரெட்டுக்கு நடுவில் தடவி சாப்பிடலாம். சப்பாத்தி, தோசையை இதில் தோய்த்தும் சாப்பிடலாம். இது உடல் உஷ்ணத்தைத் தடுக்கும்.

5. சுரைக்காய் அடை

தேவையானவை:

சுரைக்காய்த் துருவல் – 2 கப்

சீரகச் சம்பா அரிசி – ஒரு கப்

துவரம்பருப்பு – அரை கப்

கடலைப்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு – தலா கால் கப்

காய்ந்த மிளகாய் – 10

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லித்தழை –  சிறிதளவு

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம்  – கால் கப் (தோலுரித்து, பொடியாக நறுக்கவும்)

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளைத் தண்ணீரில் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். எட்டு மிளகாயைத் தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், மீதமுள்ள இரண்டு மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், சுரைக்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை  வதக்கி இறக்கவும். சுரைக்காய் மசாலா  தயார். அரிசி, பருப்பைக் களைந்து, ஊறவைத்த மிளகாய்,  உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன்  சுரைக்காய் மசாலா, கொத்தமல்லித்தழை  சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி,  சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

6. சுரைக்காய்த் தொக்கு

தேவையானவை:

சுரைக்காய்த் துண்டுகள்- 2 கப் (தோல் சீவி பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)

சின்ன வெங்காயம் – அரை கப் (தோல் உரித்தது)

கடுகு, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

முந்திரி விழுது  – 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைத்து, அரைத்தது)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு – சிறிதளவு

ரெசிப்பி

செய்முறை:

தக்காளி, சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த வெங்காய – தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும். இதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள், முந்திரி விழுது சேர்த்து வதக்கி வேகவிட்டு இறக்கவும். இதைச் சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, நாண், தோசைக்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம். பிரெட்டின் நடுவே தடவியும் சாப்பிடலாம்.

%d bloggers like this: