சி.பி.ஐ விசாரணையிலிருந்து எடப்பாடி தப்ப முடியாது!”

ழுகார் வந்ததுமே, “என்ன, நேற்றெல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தீர்கள்போல?’’ என்றோம்.

“திருமணங்களில் விருந்தினராக பிஸி’’ என்ற கழுகார், நேரடியாக செய்திகளுக்குள் நுழைந்தார்.

“காங்கிரஸில் திருநாவுக்கரசருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகிவருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2016-ம் ஆண்டு செப்டம்பரில் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் கோஷ்டிகளை மறந்து பலரும் கைகோத்தனர். ஒருகட்டத்துக்குப் பிறகு வழக்கமான கோஷ்டி பூசல்கள் வெடிக்க, நிர்வாகிகள் ஒத்துழையாமை போராட்டத்தையும் ஆரம்பித்தனர். இதையடுத்து, தனக்கு நம்பகமான ஒரு நபர் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று பி.ஜே.பி-யில் இருப்பதுபோல அமைப்பு பொதுச்செயலாளர் பதவியை புதிதாக உருவாக்கி, தணிகாசலம் என்பவரை நியமித்தார் திருநாவுக்கரசர். இவர்தான் தலைவரின் நிழலாக இருந்து கட்சி வேலைகளை கவனித்து வருகிறார்.’’

“நல்லதுதானே?’’

“யாருக்கு நல்லது என்பதுதான் முக்கியம். காங்கிரஸைப் பொறுத்தவரை தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் போன்றவைதான் முக்கியமான பதவிகள். ஆனால், இவர்களையெல்லாம் ஓரங்கட்டும் வகையில் அமைப்புப் பொதுச்செயலாளர் பதவி அமைந்து விட்டது என்பதுதான் பிற தலைவர்களின் குமுறல். அதேபோல தணிகாசலத்தின் செயல்பாடுகளையும் மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. விளைவு, கோஷ்டி மோதல் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.’’

“ம்… ஓடாத குதிரைக்கு சறுக்கினால் சாக்கு என்று சொல்லும்!’’

 

“நன்றாக நக்கல் அடிக்கின்றீர். சி.பி.ஐ உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட பிரச்னை தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கடந்த 26-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கோஷ்டி மோதல் அப்பட்டமாக வெளிப்பட்டது. திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் மற்றொரு பிரிவினரும் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயமெல்லாம் ராகுல் காந்திவரை புகாராகப் போயிருக்கிறது’’

“ஒன்றும் புதிது இல்லையே…’’

“இன்னும் கேளும். கட்சியின் வளர்ச்சிப் பணி என்றபடி டெல்லி மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத், தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார். ஆனால், இவருக்கு மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. உரிய ஏற்பாடுகளையும் செய்வதில்லை. இதனால், சஞ்சய் தத் வருத்தத்தில் இருக்கிறார். திருநாவுக்கரசரை தன்னுடன் அழைத்துச் செல்லாமல், தனி ஆளாகவே வலம் வருகிறார் சஞ்சய் தத். இந்த விஷயம், திருநாவுக்கரசரின் ஆட்களைக் கோபம் கொள்ளச்செய்துள்ளது. இதன் விளைவாகத்தான் சஞ்சய் தத்துக்கு போதுமான ஒத்துழைப்புத் தரப்படுவதில்லை என்கிற புகாரும் ராகுல் காதுகளுக்குச் சென்றுள்ளது.’’

“இதற்காகவெல்லாம் தலைவரை மாற்றுவார்களா என்ன?’’

“திருநாவுக்கரசருக்கும் தி.மு.க-வுக்கும் அத்தனை தூரம் தோழமை இல்லை என்கிற விஷயத்தை மறுபடியும் சிலர் தூசுதட்ட ஆரம்பித்துவிட்டனர். சில தினங்களுக்குமுன் ‘தி.மு.க-வுடன்தான் கூட்டணி’ என்று ப.சிதம்பரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருப்பதைக் கவனித்தால், இதன் பின்னணி புரியும். அதனால், தி.மு.க-வுடன் கூடுதல் இணக்கத்துடன் இருக்கும் ஒருவரை புதிய தலைவராக நியமிக்கலாம் என்று டெல்லி யோசிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கான பட்டியலில் முன்னாள் எம்.பி-யான பீட்டர் அல்போன்ஸ் பெயர் முதலாவதாக இருக்கிறதாம்.’’

“டெண்டர் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. எடப்பாடி, இப்போது ஹேப்பி அண்ணாச்சியா?’’ என அடுத்த டாபிக் தாவினோம்.

“இது ‘தற்காலிகம்’தான். கண்டிப்பாக அவர் சி.பி.ஐ விசாரணையிலிருந்து தப்பிக்க முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எடப்பாடிமீதான இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து தமிழக ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு, தற்காலிக நிவாரணத்தை எடப்பாடிக்கு தந்துள்ளது. இதற்காக எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் சொல்லியிருக்கும் காரணம், கொஞ்சம் சுவையானதும்கூட!’’

“சொல்லும்… சொல்லும்!’’

 

‘‘ ‘இந்த வழக்கில் தி.மு.க-வின் ‘லெட்டர் பேடில்’ புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. மேலும்,  ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தாக்கல்செய்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றம் படித்துப் பார்க்காமல், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது தவறு’ என்று எடப்பாடி தரப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்துதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  தலைமையிலான பெஞ்ச், சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த மனு மீதான நீதிமன்ற விசாரணையின் முடிவில்தான் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதனால் விசாரணையின்போது, தி.மு.க தரப்பில் முக்கியமான விஷயத்தை வைத்து மிரட்டப்போகிறார்களாம். ‘சம்பந்தப்பட்ட யாரையும் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் விசாரணை செய்யவில்லை. புகார் கொடுத்த தி.மு.க தரப்பையோ, ஒப்பந்ததாரர் தரப்பையோ, துறை அமைச்சரையோ விசாரிக்கவில்லை. இப்படியிருக்க, புகாரை விசாரித்தாக  ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எப்படி அறிக்கை அளிக்க முடியும்’ எனச் சுட்டிக்காட்ட உள்ளார்களாம்!’’

“இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இடைத்தேர்தல் வேலைகளில் குதித்து விட்டதே எடப்பாடி தரப்பு?’’

“20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் இன்னமும் முடிவெடுக்கவில்லை. ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாதத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், தேர்தல் தேதியை அறிவிப்போம்’ என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ‘மேல்முறையீடா… இடைத்தேர்தலா’ என்ற பட்டிமன்றம் தினகரன் தரப்பில் தொடர்கிறது. இந்நிலையில்தான் முதல் ஆளாக முந்திக் கொண்டு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது எடப்பாடி தரப்பு. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொறுப்பில் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எந்தத் தொகுதிக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்படவில்லை. ‘கட்சியில் தலைமைப் பதவி தன்னிடமே உள்ளது என்று இதன்மூலம் மீண்டும் நிரூபிக்க முயல்கிறார் எடப்பாடி’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

“சரி, தேர்தல் நடக்குமா… நடக்காதா?’’

“நடக்கும்; ஆனால், நடக்காது. அதிரடியாக பொறுப்பாளர்களை அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க தயாராக இல்லை. தினகரன் தரப்பில் மேல்முறையீட்டுக்குச் சென்றால் தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது. இதைத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறது எடப்பாடி தரப்பு.’’

“எடப்பாடி தரப்புக்கு என்ன தயக்கம்?’’

“அமைச்சர்கள் உட்பட அனைத்து மாவட்டத்தின் நிர்வாகிகளையும் களத்தில் இறக்கியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. ஒரு தொகுதியிலேயே இத்தனை பிரச்னை என்றால், 20 தொகுதிகளை எப்படி சமாளிப்பது என்கிற கவலையில் இருக்கிறது எடப்பாடி தரப்பு. அதனால், நாடாளுமன்றத் தேர்தல்வரை, இடைத்தேர்தலை தள்ளிப் போடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்துவருகிறது எடப்பாடி தரப்பு. அதேசமயம், என்னதான் ஆட்சி கையில் இருந்தாலும், நூலிழை வித்தியாசத்தில்தான் மெஜாரிட்டி ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இதை முதலில் சரிக்கட்டுவதற்காக சில வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள்.’’

“அதென்ன வேலைகள்?’’

“தற்போதைக்கு அ.தி.மு.க-வின் பலம், சபாநாயகரைக் கழித்து 109. எதிர்த்தரப்பின் பலம் 104 (அதிருப்தி  எம்.எல்.ஏ-க்கள் மூவர், தினகரன், கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு மற்றும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் 97) இதில், தினகரன் பக்கம் போன அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்களை கட்சித்தாவல் தடைச் சட்டப்படி நீக்கிவிட்டால், மொத்த எண்ணிக்கை 211 எனக் குறைந்துவிடும். இதன்மூலம் அ.தி.மு.க-வின் பெரும்பான்மை பலம் என்பது 109-ல் இருக்கும். எதிர்த்தரப்பின் பலம் 101 எனக் குறைந்துவிடும். அதனால் மூன்று பேருக்கும் நோட்டீஸ் விடும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.அத்துடன் தினகரன் தரப்புக்கு வேறுவிதத்திலும் செக் வைக்கப் பார்க்கிறது எடப்பாடி தரப்பு!’’

“எத்தனுக்கு எத்தன்?’’

“அதேதான். ‘சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களும் அடங்குவார்கள்’ என்ற அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவை ஆராய்ந்துவருகிறது எடப்பாடி தரப்பு. பிரிவு 191 -ன் உட்பிரிவுகளில் இதுகுறித்த ஷரத்துக்கள் உள்ளன. ‘தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் என்று காலவரையறை குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் இந்தச் சட்டத்தை யாரும் இதுவரை அமல்படுத்தவில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் தரப்பினர் 18 பேரும் மீண்டும் தேர்தல் களத்தைச் சந்தித்தால், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடைகேட்க தீர்மானித்துள்ளது எடப்பாடி தரப்பு. இது எந்தளவுக்கு கைக்கொடுக்கும் என்று தெரியவில்லை. என்றாலும், ஓர் ஆட்டம் காண்பிக்கலாம் அல்லவா?’’ என்ற கழுகார், தலையைச் சிலுப்பியபடி பறந்தார்.


ரகசிய வழிகாட்டுதல் குழு!

டப்பாடி மற்றும் பன்னீர் அணிகள் இணைந்தபோது, ‘கட்சியை வழிநடத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், ஓர் ஆண்டைக் கடந்தும் அமைக்கப்படவில்லை. இதனால், பன்னீர் அணியில் இருந்தவர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளார்கள். இந்நிலையில், ‘சத்தமில்லாமல், ரகசிய வழிகாட்டுதல் குழுவை அமைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி’ என்கிற புகைச்சல் இப்போது கிளம்பியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மூன்று முறையும் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி மற்றும் பன்னீருடன் நான்கு அமைச்சர்கள் மட்டும் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள். இடைத்தேர்தலுக்காக 20 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனமும் இக்குழுவின் முடிவின்படியே எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைத்தான், ‘வழிகாட்டுதல் குழு’ என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர். ஆக, சாதுர்யமாக காய்களை நகர்த்தி, தன் ஆட்களை அனைத்து இடங்களிலும் நுழைப்பதில் வெற்றிகண்டு வருகிறார் எடப்பாடி!


 

தனித்தனியாக வந்தார்கள்!

ல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனின் மகள் திருமணம் திருப்பூரில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அவர்கள் மூவரும் வந்துசென்ற விதம்தான் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. காலையிலேயே வந்த பன்னீர்செல்வம், திருமணத்தில் சத்தமில்லாமல் தலையைக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டார். மாலை 7 மணியளவில் வந்த எடப்பாடி, மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டுக் கீழே இறங்க, அவரை நோக்கி ஓடோடிச்சென்ற எம்.எல்.ஏ நடராஜன் சட்டென எடப்பாடியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நன்றியைத் தெரிவித்தார். அதைப் பார்த்த திருப்பூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமாரும் திடீரென எடப்பாடியின் காலில் விழுந்து, ‘‘அடுத்த மாதம் என் மகள் திருமணத்துக்கும் தவறாமல் வந்துவிடுங்கள்’’ என்று நினைவுபடுத்தினார்.

எடப்பாடி கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் அமைச்சர் செங்கோட்டையனின் வாகனம் மண்டபத்துக்குள் நுழைந்தது. ‘‘எடப்பாடி மண்டபத்திலிருந்து கிளம்பியதை உறுதி செய்துகொண்டே செங்கோட்டையன் வந்தார்’’ என்ற தகவல்தான் தற்போது கட்சிக்குள் பரபரக்க வைத்திருக்கிறது.

%d bloggers like this: