Advertisements

எடப்பாடி குறி வைக்கும் சமூக வாக்குகள்: ஸ்டாலின், டிடிவி தினகரனுக்கு நெருக்கடியா?

இப்பலாம் யாரு சார் ஜாதி பாக்குறா?” என்று பொதுவாக பேசினாலும், தமிழக கலாச்சாரமும், அரசியலும் ஜாதியோடு பின்னிப் பிணைந்தது. ஒரு சமூகம் மெஜாரிட்டியாக உள்ள தொகுதியில், வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, சமூகநீதியின் அச்சாணியில் சுழல்வதாக கூறும் இரு கழகங்களும் வேட்பாளராக

நிறுத்துவது இல்லை. இது எதார்த்த உண்மை. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, ஜாதி அரசியலை மையமாக வைத்தே நகர்த் தொடங்கியிருக்கிறது. இதற்கு வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலும், 2021 சட்டமன்றத் தேர்தலும் ஒரு முக்கியக் காரணம்.

ஜெயலலிதாவின் தேர்தல் அரசியல் பெரும்பாலும் தேவர் மற்றும் கவுண்டர் சமூக வாக்குகளை மையப்படுத்தியே இருக்கும். தனது அமைச்சரவையின் 40 சதவிகித இடங்களை இச்சமூகத்தினருக்கே அளித்திருப்பார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், இந்த பங்களிப்பு மாறாமல் தான் உள்ளது.

தற்போதுள்ள அமைச்சரவையில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 17 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர். கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 26 எம்.எல்.ஏ.க்களில், முதல்வருடன் சேர்த்து 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில், ஜெ.வின் மறைவிற்குப் பிறகு அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட செங்கோட்டையனும் அடக்கம்.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் அமைச்சர்களாகவும், ஒடுக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அமைச்சர்களாகவும் அமரவைக்கப்பட்டுள்ளனர். முத்தரையர் சமூகத்திலிருந்து 3 பேர், நாயுடு சமூதாயத்திலிருந்து 2 பேர், நாடார், முதலியார், விஸ்வகர்மா, செட்டியார், ரெட்டி, மீனவர் சமூதாயங்களில் இருந்து தலா ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம், சட்டமன்றத்தில் படம் திறப்பு, காமராஜர் பிறந்தநாளை விருதுநகரில் கொண்டாடியது, தனஞ்செய முத்தரையர் மன்னரை தஞ்சாவூரில் வைத்து உயர்த்தியது, சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் என கடந்த ஆறு மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் நகர்வுகள் ஜாதி ரீதியான வாக்குகளை மையப்படுத்தியே நகர்கின்றன.

துணை முதல்வர் ஓ.பி.எஸ். தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்றாலும், இதுவே அ.தி.மு.க.வின் தேவரின வாக்கு வங்கியை பெற்றுவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பியிருக்கவில்லை. டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டதால், தனக்கு தேவர் சமூக வாக்குகள் பெருமளவில் வராது என கணித்திருப்பவர், அச்சமூகத்திற்கு மாற்றான மற்ற சமூகங்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் அரசியலில் முழுவீச்சாக குதித்துள்ளார்.

குறிப்பாக வட மாவட்டங்களில் மிகுதியாக வாழும் வன்னியர்கள், தென் மாவட்டங்களிலுள்ள நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையிலுள்ள முத்தரையர்கள் என இதுவரை ஜெயலலிதா சட்டை செய்யாத சமூகத்தினரை கவரும் அறிவிப்புகள் முதல்வரிடமிருந்து வந்து கொண்டு இருக்கின்றன.

வன்னியர் வாக்குகளை வேட்டையாடுவதில், வட தமிழகத்தில் பா.ம.க.விற்கு சவாலாக விளங்கியது தே.மு.தி.க.. தற்போது விஜயகாந்த் உடல்நலக்குறைவாலும், தொடர் அரசியல் தோல்விகளாலும் ஒருபக்கம் நொடிந்து போயுள்ள நிலையில், மறுபக்கம் காடுவெட்டி குருவின் கடைசி காலத்தில் ராமதாஸ் சரியாக கவனிக்கவில்லை என்கிற கோபம் வன்னியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் ஒரு வன்னியர் கூட அமர்த்தப்படவில்லை என்கிற அதிருப்தி அக்கட்சி சார்பு வன்னியர்களுக்குள் நிலவுகிறது. இச்சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, வன்னியர் வாக்கு வங்கியை எடப்பாடி கையில் எடுத்துள்ளார்.

பா.ம.க. ராமதாஸால் பெரிதாக கண்டு கொள்ளப்படாத முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றது முதல், கடலூரில் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபமும், வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று அறிவித்தது வரை, எல்லாமே தி.மு.க. மற்றும் பா.ம.க.விலுள்ள அதிருப்தி வன்னியர்களை குறிவைத்து தான். ஜெயலலிதா கூட தள்ளிப்போட்ட வன்னியர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான வன்னியர் நல வாரியத்தை அமைக்க தனிச்சட்டம் இயற்றியதற்காக அக்டோபர் 28-ம் தேதி எடப்பாடியாருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், ராமசாமி படையாச்சியாருக்கு சட்டமன்றத்தில் உருவ படம் திறக்கப்படும் என்று அறிவித்து, அதற்காக சமூக நீதி பெரியார் என்கிற பட்டத்தையும் வாங்கிக் கொண்டார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், இது “தனஞ்செய முத்தரையர் ஆண்ட மண்!” என்று பிரகடனப்படுத்தி, கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தஞ்சாவூரில், முத்தரையர்களை உயர்த்திப்பிடித்தது டி.டி.வி.க்கு விடுத்த ஓப்பன் சவால்! ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில், அமைச்சர்கள் அளவிலேயே காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். முதல்முறையாக ஒரு அ.தி.மு.க. முதல்வர் காமராஜர் பிறந்தநாளை விருதுநகரில் கொண்டாடியது எடப்பாடி பழனிச்சாமி தான்.

தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டிய கூட்டமொன்றில் துரைக்கண்ணு உட்பட சில மூத்த அமைச்சர்கள் சில மாதங்களுக்கு முன்னர் கலந்து கொண்டுள்ளனர். எடப்பாடியின் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த போது, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி முதல் ஆளாக வாழ்த்து சொல்லி, கூட்டணிக்கு அச்சாரமிட்டார்.

கொங்கு பெல்ட்டில் கவுண்டர்கள் மட்டுமே இல்லை. கவுடா, அருந்ததியர்கள், நாயுடு, நாடார்கள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள், மலையாளிகள் என மற்ற சமூக வாக்குகளும் கணிசமாக உள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினோ, அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனோ இதுவரையில் முன்னெடுக்காதது எடப்பாடி பழனிச்சாமிக்கு ப்ளஸ்!

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “எடப்பாடியின் இந்த அரசியல் நகர்வு, ஜெயலலிதாவின் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. காஞ்சி சங்கராச்சாரியாரை உயர்த்தியதில் தொடங்கி, தஞ்சையில் முத்தரையர் மன்னருக்கு புகழ்மாலை சூட்டியது வரையில், தேவரல்லாத வாக்குகளை அணிதிரட்ட தேவையான முயற்சிகளை எடப்பாடி எடுக்கிறார். இதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நகர்வு, அவரது அரசியல் எதிரியான மு.க.ஸ்டாலினை நிச்சயமாக வீழ்த்தும்!” என்றார்.

சரி, மு.க.ஸ்டாலின் ஏன் ஜாதி அரசியலை முன்னெடுக்கவில்லை? எங்கே சறுக்குறார்? இதை விளக்க இரண்டு காட்சிகள்.

காட்சி 1: கடந்த அக்டோபர் 31-ம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்காக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த பசும்பொன் சென்ற ஸ்டாலினுடன் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் சென்றிருந்தனர். ஆனால் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தும் போது, உடன் நின்றிருந்தவர்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், யாதவர் சமூதாயத்தைச் சேர்ந்த பெரியகருப்பனும் தான். தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமியும், தங்கம் தென்னரசுவும் பின்வரிசையில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இக்காட்சி சமூக வலைதளங்களிலும் விவாதத்திற்கு உள்ளானது.

காட்சி 2: அதே தேவர் ஜெயந்தி விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் செல்கிறார். தன்னுடன் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ்., திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் மணிகண்டன், காமராஜ் ஆகியோரை முன்வரிசையிலும், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை பின்வரிசையிலும் நிற்க வைத்து, தனது ஆட்சியில் தேவர் சமூகத்திற்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறார். இதுபோல, தன் கட்சியில் தேவர் சமூகத்திற்கு எவ்வளவு பிரதிநித்துவம் வழங்கப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலினால் காட்டத் தெரியவில்லையே. ஜாதி அரசியலில் ஸ்டாலினை விட பல கிலோ மீட்டர்கள் முன்னே எடப்பாடி ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த ஓட்டம் தேர்தலில் வெற்றியைத் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisements
%d bloggers like this: