மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு முறைகள்

* மழைக்காலத்தில் வீட்டிற்குள் பாதுகாப்பு முறைகள் எப்படி?
வீட்டை நன்றாக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நம் கடமை. வீட்டின் அறைகள், மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மழை நீர் தேங்காதவாறு வழித்தடங்களை சுத்தம் செய்ய வேண்டும். மின்சார உபகரணங்கள் குழந்தைகளுக்கு எட்டாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

தாய்மார்களும், குழந்தைகளும் சுத்தமாக இருப்பது நோய் தொற்றை விரட்டும். குழந்தைக்கும், தாய்க்கும் போதிய உணவு கட்டாயம். குழந்தைக்கு தேவைப்படும் பொழுதெல்லாம் தாய்ப்பால் ஊட்ட வேண்டும். இது அவர்களின் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது தாய்ப்பால் ஊறுவதை அதிகரிக்கும். மழைக்காலத் தொற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் காய்ச்சல், தும்மல், சளி போன்றவை ஏற்படலாம்.
இது மற்றவர்களுக்கு வெகு விரைவில் பரவலாம். இதற்கு சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சரி செய்ய வேண்டும். கொசுக்கடி, பூச்சிகளிருந்து பாதுகாக்க வேண்டும். கொசுவலை, கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்துவது குழந்தைகளையும், பெரியவர்களையும் காக்கும். குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் ஈரமான ‘டய பருடன்’ பயன்படுத்துவது சருமத்திற்கு சொறி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இவற்றை அக்கடி மாற்றுவதும், புண் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தக்க களிம்புகளை போடுவது பயனளிக்கும். பருத்தி ஆடைகள், கம்பளி ஆடைகள் போன்றவை குழந்தைகளை குளிரிலிருந்து காக்கும். குழந்தைகளுக்கு எப்போதுமே மழைக்காலங்களில் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை தருவது தொற்று வருவது வெகு விரைவாக குறைக்கும்.

* மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு முறைகள் எப்படி?
குழந்தைகளை அழுக்கான இடங்கள், நீர் தேங்கிய இடங்கள் மற்றும் கூட்டம் நிறைந்த இடங்களில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொசுக்கடி அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, முழுக்கை சட்டை, பேன்ட் அணிவித்து வெளியே அழைத்து செல்வது நல்லது. மழைக்காலங்களில் ‘புளு’ காய்ச்சல் அதிகம் பரவுவதால் ஆண்டு தோறும் அதற்குரிய தடுப்பூசியை குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டு கொள்வது நலம். முடிந்தவரை வெளியில் உணவு உட்கொள்வதையும், நீர் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்து உணவுகளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் எடுத்து செல்வது குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் நன்மை பயக்கும்.
– டாக்டர் முருகன் ஜெயராமன்
குழந்தைகள் நல நிபுணர், மதுரை.
94864 67452

%d bloggers like this: