ஸ்டாலின் Vs ரஜினி – பி.ஜே.பி மெகா பிளான்

தெம்பாக வந்த கழுகார், சுழல் நாற்காலியில் விர்ரென்று ஒரு ரவுண்ட் அடித்து பாட்ஷா ஸ்டைலில் ஒரு பார்வை பார்த்தார்.
‘‘கழுகாருக்கு என்னாச்சு?’’ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே…
‘‘காலையில் ஓர் அரசியல் பிரபலம் எனக்கு போன் போட்டார். ‘மூன்று மாதங்களுக்கு முன், ‘ரஜினி கையில் இரட்டை இலை… பி.ஜே.பி விரிக்கும் மாயவலை’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டீர்கள் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், பெரும்பாலும் அந்தத் திசையில்தான் தமிழக அரசியல் பயணிக்கும்போல. ‘ஸ்டாலின் தலைமையில் ஓர் அணி… ரஜினி தலைமையில் ஓர் அணி என்றுதான் தமிழக அரசியல் களம் இனி இருக்கும்’ என்று கராத்தே தியாகராஜன் சொல்லியிருப்பதையும் முடிச்சுப்போட்டுப் பாருங்கள்’ என்று சொன்னார்.”
‘‘ஓ… அதுதான் உற்சாகத்தில் மிதக்கிறீரோ?’’

‘‘சரி… சரி நான் வந்த வேலையைப் பார்க்கிறேன்’’ என்ற கழுகார் செய்திகளுக்குள் புகுந்தார்.
‘‘ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ‘தமிழக அரசியல் களம் இனி ஸ்டாலின், ரஜினி இடையேதான்’ என்று கடந்த 30-ம் தேதி ஒரு செய்தியைக் கொளுத்திப்போட்டார். இது அ.தி.மு.க, தி.மு.க -வினர் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முந்தய நாள் ரஜினியைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிவிட்டு வந்த கராத்தே, ஸ்டாலின் – ரஜினி என்று வாய் திறக்கிறார் என்றால் ஏதோ பின்னணி நிச்சயமாக இருக்கும் என்பதுதான் இரண்டு கழகங்களிலும் பரபர விவாதமாக மாறியிருக்கிறது’’

‘‘பலே பலே!’’
‘‘தமிழகத்தின் அரசியல் களம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க என்றுதான் சுழல்கிறது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத சூழலில், வேறு திசையில் சுழலக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை மு.க. ஸ்டாலின்தான் என்று முடிவாகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க-வில் அப்படி யாரையும் சொல்லமுடியாத நிலை. அந்த இடத்தில்தான் ரஜினியை வைத்து அழகு பார்த்துவிட வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்துவருகிறது பி.ஜே.பி. இதற்காக ஏகப்பட்ட அஸ்திரங்களையும் வீசியபடியே இருக்கிறது. ஆனால், ரஜினியிடமிருந்துதான் உறுதியான பதில் இல்லை. அதேசமயம், தன்னுடைய மக்கள் மன்றப் பணிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.’’
‘‘அதெல்லாம் இருக்கட்டும்.  பி.ஜே.பி-யின் பிளான் எந்த அளவுக்கு உண்மை?’’
‘‘ரஜினியும் சரி… பி.ஜே.பி., அ.தி.மு.க-வும் சரி… இதுவரை இதுகுறித்து மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டியதுதான். போதாக்குறைக்கு இப்போது கராத்தே வேறு இதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்!’’
‘‘அவர் பொத்தாம் பொதுவாகத்தானே ஸ்டாலின் – ரஜினி என்று இரு அணி எனக் கூறியிருக்கிறார், விவரமாகக் கூறவில்லையே?’’
‘‘கடந்த 25 ஆண்டுகளாகவே ரஜினிக்கு நெருக்கமானவராக இருப்பவர் கராத்தே. பல சமயங்களில் ரஜினியின் கருத்தை எதிரொலிக்கக் கூடியவராகவும் இருந்திருக்கிறார். அதனால், அவருடையக் கருத்தை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. எனவே, கராத்தே சொல்லும் விஷயத்தை மனதில் வைத்துப் பேசும் தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலர், ‘பி.ஜே.பி-யின் ஒரே அஜெண்டா, தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக்கு மாற்றாக வலுவான கூட்டணியை உருவாக்கவேண்டும் என்பதுதான். அதற்கு அவர்களுக்கு ரஜினி வேண்டும். அவர் தலைமையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க (தினகரன் உட்பட), பி.ஜே.பி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெறும் கூட்டணியை உருவாக்க வேண்டும். இதுதான் பி.ஜே.பி-யின் மெகாபிளான். இப்படியொரு அணிதான், தமிழகத்தில் பலமான அணியாக இருக்கும் என்று வெகுவாக  நம்புகின்றனர் டெல்லி பி.ஜே.பி தலைவர்கள்’’
‘‘அது சரி, போகிறபோக்கில் தினகரனும் இணைந்த அ.தி.மு.க என்கிறீரே?’’
‘‘தினகரனும் வந்தால்தான் இந்தக் கூட்டணி முழுமையடையும் என்றும் நம்புகிறது பி.ஜே.பி. ஆனால், அவரைக் கூட்டணிக்குள் இழுப்பது அத்தனை சுலபமல்ல. இதற்காக அவர் வைக்கும் நிபந்தனைகள் பயங்கரமாக இருக்கின்றனவாம். ‘உண்மையான அ.தி.மு.க, எங்களுடைய அ.ம.மு.க-தான்’ என்று போகிற இடமெல்லாம் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அதனால், அவரை வழிக்குக் கொண்டுவருவதற்காக, அவர் மீதிருக்கும் வழக்குகளைக் கையில் எடுக்கலாம் என்று கணக்குப் போடுகிறார்கள் பி.ஜே.பி தரப்பில். அதாவது, ‘உள்ளே அல்லது வெளியே’ அஸ்திரம் தேர்தல் கூட்டணியைக் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிடும் என்று நம்புகிறார்கள்’’

‘‘அ.தி.மு.க தரப்பில் என்ன நினைக்கிறார்கள்?’’
‘‘பி.ஜே.பி என்ன நினைக்கிறதோ, அதைச் செய்துகொடுப்பதைத் தவிர, வேறொன்றும் அறியேன் பராபரமே என்பதுதானே அவர்களின் நிலைப்பாடு. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்ற திட்டத்தை பி.ஜே.பி தரப்பு பல மாதங்களுக்கு முன்பே கையில் எடுத்துவிட்டது. சிலரை வழிக்குக் கொண்டுவருவதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ராஜகுரு ஒருவரை மீண்டும் உற்சாகப்படுத்தியது பி.ஜே.பி. காரணம், அந்த ராஜகுரு ரஜினியுடனும் எளிதாகத் தொடர்பு கொள்ளக்கூடியவர்; எடப்பாடி, பன்னீர் உள்ளிட்டோரையும் எளிதாக வழிக்குக் கொண்டுவந்துவிடுவார். அந்த நம்பிக்கையில்தான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோல முதல் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது’’
‘‘முதல் முயற்சி எது?’’
‘‘எடப்பாடி- மோடி சந்திப்புதான். இந்தச் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னதாக திருப்பதியில் வைத்து வெங்கய்யா நாயுடுவைத் திடீர் என்று சந்தித்தார் எடப்பாடி. அப்போதே தமிழக அரசியல் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டிருக்கிறது. பிறகு, எடப்பாடியைச் சந்தித்த பி.ஜே.பி தூதுவர்கள், ‘தனிப்பட்ட முறையில் இன்றைய அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு இல்லை. தி.மு.க-வின் பக்கம்தான் மவுசு கூடிக்கொண்டிருக்கிறது. அதை வீழ்த்த, அ.தி.மு.க-வுக்குள் ரஜினியைக் கொண்டுவருவதுதான் ஒரேவழி. அவருடைய தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைந்தால், அடுத்து நடப்பது எல்லாம் பி.ஜே.பி-க்கு சாதகமாகவே நடக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியே தொடரும். நீங்கள் அனைவருமே பங்கமில்லாமல் பதவிகளில் தொடரலாம்’ என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள். இதற்குப் பிறகுதான், டெல்லிக்குச் சென்று மோடியைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், மோடி எதிர்பார்த்த அளவுக்கு அப்போது பிடி கொடுக்கவில்லையாம் எடப்பாடி.’’
‘‘என்ன காரணமாம்?’’
‘‘ரஜினியிடம் கட்சியைக் கொடுத்துவிட்டுப் பிறகு நாம் என்ன செய்வது என்று நினைக்கிறார்கள். ‘ரஜினி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம். ஆனால், அவரைத் தலைவராக வைத்துக் கொண்டு இன்றுபோல டெண்டர்களில் புகுந்துவிளையாட முடியாது. தன்னுடைய மன்றத்தவர்களையே பதவிகளுக்கு ஆசைப்படக்கூடாது என்று தற்போது மிரட்டிக் கொண்டிருக்கும் ரஜினி, நம்மையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவே மாட்டார்’ என்றெல்லாம் புலம்பல்கள் அவர்களிடம் இருக்கிறது’’
‘‘இருக்காதா பின்னே?’’
‘‘அதனால்தான் அ.தி.மு.க தரப்புக்கு செக் வைக்கும்விதமாக கட்சியின் முக்கியத் தலைகளைக் குறிவைத்து மத்திய அரசின் வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகள் அவ்வப்போது பாய்கின்றன. ‘எங்களை மீறி எதுவும் செய்யமுடியாது’ என்று காட்டிய பிறகே அ.தி.மு.க பணிந்துவிட்டதாம். அதேசமயம், அ.தி.மு.க தரப்பில் சில கோரிக்கைகள் வைத்தார்களாம். அவையும் சத்தமில்லாமல் முடித்துக் கொடுப்பதற்கான உத்தரவாதம் பி.ஜே.பி தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாம்’’
‘‘அரசியல் பார்வையாளர்கள் சொல்வது இருக்கட்டும்… ரஜினியின் ரியாக்‌ஷன் என்னவோ?’’
‘‘அவர் அரசியலுக்குள் கால் வைப்பதைவிட, தமிழக அரசியலை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் முக்கியம். பி.ஜே.பி-யில் எந்த அளவுக்கு நெருக்கம் காட்டுகிறாரோ ரஜினி, அதே அளவுக்குப் பிற கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், பி.ஜே.பி பக்கம் போவது ஆபத்து என்றுதான் ரஜினிக்கு நாசூக்காகச் சொல்லிவருகிறார்களாம்’’
‘‘ஓஹோ’’
‘‘சமீபத்தில் பி.ஜே.பி மூத்த தலைவர் ஒருவரிடம் ரஜினி பேசும்போது, ‘நான் நாடாளுமன்றத் தேர்தலில் இறங்கும் மனநிலையில் இல்லை. எனது திட்டம் சட்டமன்ற தேர்தல்தான். அதேநேரம் தமிழகத்தில் பி.ஜே.பி பெரிய அளவில் சோபிக்காது’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டராம். அதற்கு, ‘நீங்கள் வந்தால் போதும். அ.தி.மு.க-வையும் அணியில் இணைத்துக் கொண்டு வெற்றிக் கூட்டணியாக மாற்றிவிடலாம்’ என்று தூண்டில் போட்டுள்ளார்.’’
‘‘ரஜினி சிக்கினாரா?’’
‘‘அவர்தான் எந்த முடிவையும் உடனடியாக எடுக்கமாட்டரே? ‘பார்க்கலாம்’ என்று மட்டும் சொல்லியுள்ளார். ஆனால், டெல்லி பி.ஜே.பி தரப்பு விடவில்லை. அடுத்தடுத்து ரஜினியை நோக்கி மலர் அம்புகளை விட்டபடி இருக்கிறது. பிரபலத் தொழிலதிபர்கள், மூத்த அமைச்சர்கள் என்று பலரும் ரஜினியிடம் தூது போய்க் கொண்டுள்ளனர். அதைப்பற்றியெல்லாம் விரிவாக விசாரிக்கவேண்டும். பிறகு பார்க்கலாம். தீபாவளி பர்ச்சேஸுக்கு போகவேண்டும்… வர்ட்டா’’ என்றபடியே பறந்தார்.

%d bloggers like this: