Advertisements

ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி!

கைகொள்ளாத கிஃப்ட் பார்சல்களோடு வந்த கழுகார், “நிறையப் பேரை நேரில் சந்தித்து நேரத்தோடு கொடுக்க வேண்டும். சீக்கிரம் கிளம்பவேண்டும்’’ என்று படபடத்தார்.

“என்ன பட்டாசு பார்சலா?’’ என்று நாம் கேட்டதுமே…

“உச்ச நீதிமன்றம் வேறு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது. நீர் வேறு கொளுத்திப்போட்டுவிடாதீர். எல்லாமே ஸ்வீட் பார்சல்தான்’’ என்றவர் வேகமாகத் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

“சி.பி.ஐ மீதான அதிரடி தாக்குதல்போல, நீதித்துறை மீதும் ஏதாவது தாக்குதல் நடக்கக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த விஷயத்தை சுமுகமாக முடித்திருக்கிறது மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பதவிகள் காலியாக இருக்கின்றன. நீதிபதிகள் மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் இருவரும் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இதையெல்லாம் ஈடுகட்ட நான்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை (மத்தியப் பிரதேசம் – ஹேமந்த் குப்தா, திரிபுரா – அஜய் ரஸ்தோகி, பாட்னா – எம்.ஆர்.ஷா, குஜராத் – ஆர். சுபாஷ் ரெட்டி) உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. வழக்கத்துக்கும் மேலான வேகத்தில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு நான்குபேரின் பதவியேற்பு நிகழ்வே முடிந்துவிட்டது.’’

“ஓ… நீதித்துறையுடனும் மோதல் என்று பிரச்னை கிளம்ப வேண்டாம் என நினைக்கிறதோ மத்திய அரசு?’’

“இருக்கலாம். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ் விஷயம்தான் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.’’

“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டாரே… அவரா?’’

“அவரேதான். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தவர் ஹுலுவாடி ஜி.ரமேஷ். கர்நாடகாவைச் சேர்ந்தவரான இவர், தேவ கவுடா குடும்பத்து சம்பந்தி. தற்போது மத்தியப் பிரதேசத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு ஏற்கெனவே இரண்டு மூத்த நீதிபதிகள் இருப்பதால், இவர் மூன்றாவது இடத்துக்குத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். உண்மையில், இவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டியவர். இவரைவிட ஜூனியரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போபண்ணா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஹுலுவாடி ஜி.ரமேஷ் பெயரும் பரிசீலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.’’

“ஹுலுவாடிக்கு ஏன் வாய்ப்புக் கிடைக்கவில்லை?’’

“வழக்குகள் தொடர்பாக இவர்மீது உச்ச நீதிமன்றம்வரை புகார்கள் உண்டு. ஆனால், இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு அதுதான் காரணமா என்று தெரியவில்லை. இவரை மத்தியப்பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 29- தேதி மாற்றினார்கள். இதையடுத்து நவம்பர் 1, நவம்பர் 2 ஆகிய தேதிகளில், இரு கடிதங்களை உச்ச நீதிமன்ற கொலீஜி யத்துக்கு ஹுலுவாடி ஜி.ரமேஷ் அனுப்பினார். ‘இடமாறுதல் செய்வதாக இருந்தால் தலைமை நீதிபதியாக மாற்றுங்கள். இல்லையென்றால் சென்னையிலேயே இருக்கிறேன்’ என்று அவற்றில் எழுதியிருந்தார். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப் படவில்லை.’’

“உச்ச நீதிமன்றம் விஷயங்கள் போதும்… பரோலில் வந்துள்ள இளவரசி எப்படி இருக்கிறார்?’’

“நடராஜன் இறந்தபோது பரோலில்வந்து இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார் சசிகலா. ஆனால், இளவரசி, சுதாகரன் இருவரும் வரவில்லை. தற்போது சகோதரருக்கு உடல் நிலை சரியில்லை என்று வந்துள்ள இளவரசி, சென்னையில் தனது மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் இருக்கிறார். பெங்களூரு குளிர் தாங்கமுடியாமல் காது நரம்புகளில் பிரச்னையாம். சத்தமாகப் பேசினால்தான் சிறிதளவாவது கேட்கிறதாம். சர்க்கரை வியாதி படுத்துகிறதாம். பரோல் விடுமுறையைப் பயன்படுத்தி அவசர சிகிச்சைகளும் எடுத்துக் கொள்கிறாராம் அவர். தீபாவளியைக் கொண்டாடிவிட்டுச் சிறைக்குத் திரும்புவாராம் இளவரசி.’’

“தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் 18 எம்.எல்.ஏ-க்களில் பலர் விரக்தியில் இருக்கிறார்களாமே?’’

“தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் தினகரனுடன் நெருக்கமாக இருப்பவர்கள். பசையான பார்ட்டிகளும்கூட. அதனால், அவர்களிடம் பெரிதாக டென்ஷன் இல்லை. மற்ற 14 பேருக்குத்தான் ஏகவருத்தம். ‘தேர்தலுக்குச் செலவு செஞ்ச பணத்தைத் திரும்ப எடுக்கல.

எம்.எல்.ஏ-வுக்கான அதிகாரத்தையும் அனுபவிக்காமலே எங்க பதவி பறிபோயிடுச்சு. குடும்பத்துலகூட மதிக்கமாட்டேங்கறாங்க. தொகுதி மக்களையும் சந்திக்கறதுக்குப் பயமாயிருக்கு. மேற்கொண்டு என்ன செய்யப் போறோம்… எங்களோட அரசியல் எதிர்காலம் என்னவாகும்?’  என்றெல்லாம் மதுரை பப்பீஸ் ஹோட்டலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனிடம் புலம்பியிருக்கிறார்கள்.’’

“பிறகு?’’

“எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதே தொகுதியில் போட்டியிடப்போவது நீங்கள்தான். பொருளாதாரப் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். ‘என்னை நம்பியவர்களை என்றுமே நான் கைவிட்டதில்லை என்பது உங்களுக்கேத் தெரியும். ஊடகங்களில் எந்தத் தகவலையும் கூற வேண்டாம்’ என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசியிருக்கிறார் தினகரன். இதைத் தொடர்ந்து, அவர்களில் பலரும் மகிழ்ச்சியாக தொகுதிக்குச்சென்று மக்களைச் சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டனர். சாத்தூர் சுப்பிரமணியன் அன்று இரவே தொகுதியில் ஓட்டு கேட்கும்வேலையைத் தொடங்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளும்.’’

“இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்படி பார்க்கிறது?’’

“தினகரன் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறது. அதனால், அந்த 18 பேரில் சிலரை வளைத்து, மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. தேர்தலை முடிந்தவரை தள்ளிப்போடுவதுதான் அவர்களின் திட்டமே. அதேசமயம், சும்மா இருந்தால் வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதற்காக தேர்தல் வேலைகளைச் செய்துகொண்டிருக் கிறார்கள்.’’

“ஓ… பொறுப்பாளர்கள், ஆலோசனைக்கூட்டம் எல்லாவற்றுக்கும் இதுதான் பின்னணியா?’’

“அதேதான். ஆனால், இந்த வேலைகளிலும்கூட பன்னீர் மற்றும் எடப்பாடி இருவரும் ஏகமாக உரசிக்கொள்கிறார்களாம். 3-ம் தேதி சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 20 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 80 பொறுப்பாளர்களில் சிலரை மாற்றலாம் என்று பன்னீர் கூறியிருக்கிறார். ஆனால்,  அதை க் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை எடப்பாடி.”

“அடப்பாவமே…’’

“அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ‘ஆபரேஷன் அ.ம.மு.க’ தயார். அதாவது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி, முக்கிய நிர்வாகிகள்வரை பலரையும் தினகரனிடம் இருந்து அ.தி.மு.க-வுக்கு இழுப்பதுதான் பிளான். மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் உட்பட சில நிர்வாகிகளை எடப்பாடி அணிக்கு மீண்டும் அழைத்து வந்தவர் இந்த உதயகுமார்தான். அவர்களையெல்லாம் இன்றுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்த முன்அனுபவத்துக்காகவே ஆபரேஷன் அ.ம.மு.க இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.’’

“ஸ்டாலின் – தினகரன் சந்திப்பு என்று ஒரு செய்தி உலவுகிறதே?’’

“இதுவும் ‘ஆபரேஷன் அ.ம.மு.க’-வில் ஒன்றாக இருக்கலாம். ‘தினகரனை எப்படியாவது கேவலப்படுத்தவேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்கள் என்கிறது தினகரன் தரப்பு. ஓர் ஊரிலிருக்கும் பெரிய ஹோட்டலில் இரண்டு அரசியல்வாதிகள் அறை எடுத்துத் தங்குவது வழக்கம்தான். அப்படி தங்கும்போது சந்தித்துக்கொண்டால், அந்தச் செய்தி எப்படியாவது வெளியாகிவிடும். அதுவும் டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் மூலைக்கு மூலை கேமராக்கள் இருக்கின்றன. சும்மா கிளப்பிவிடுகிறார்கள். எடப்பாடி தரப்பு எப்படியெல்லாம் நடுங்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இது. என்ன செய்தாலும் அ.ம.மு.க-வை எதுவும் செய்யமுடியாது’ என்கிறார்கள் தினகரன் தரப்பினர்.’’

“சரி, உண்மையிலேயே தேர்தலில் போட்டியிடுவது தான் தினகரனின் திட்டமா?’’

“எதையோ மோப்பம் பிடித்துவிட்டுத்தான் கேட்கிறீர். தேர்தலில் போட்டியிடுவோம் என்று மதுரையில் சொன்னவர், சென்னை வந்த பிறகு சட்டநிபுணர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தலைச் சந்தித்தால் என்னென்ன பாதகங்கள் வரும், வழக்கு நடத்தினால் என்னென்ன பாதகங்கள் வரும் என்றெல்லாம் விளக்கிய சட்டப்புலிகள், ‘மேல்முறையீட்டுக்கு 90 நாள்கள் அவகாசம் இருப்பதால், அவசரப்பட வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்களாம். எனவே, எப்போது வேண்டுமானாலும் தினகரன் தரப்பு மாற்றிப்பேசக்கூடும். ஆனால், இந்த முடிவு எந்த வகையிலும் எடப்பாடி தரப்புக்கு சாதமாகிவிடக்கூடாது என்பதில் மட்டும் குறியாக இருக்கிறது தினகரன் தரப்பு’’ என்று கழுகார் சொல்லிக் கொண்டிருக்கும்போத, இந்த இதழுக்கான ஜூ.வி-யின் அட்டைப்படம் நம்முடைய வாட்ஸப்பில் வந்துவிழுந்தது. எட்டிப்பார்த்த கழுகார்,

“டைமிங்… ரைமிங்… ‘அழகிரி முதல் அம்பானி வரை… ரஜினி சர்கார்’ தலைப்பும் அருமை… அட்டைப்படமும் அருமை’’ என்று பாராட்டிவிட்டு, மறக்காமல் பார்சல்களுடன் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: