மன்த்லி டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி – எதைத் தேர்வு செய்தால் லாபம்?

வ்வொரு மாதமும் வருமானம் தரும் மன்த்லி டிவிடெண்ட் திட்டங்களில் (Monthly dividend plans), ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் பலரும் தங்களது ஓய்வுக்காலப் பணத்தை முதலீடு செய்து டிவிடெண்ட் வருமானம் பெற்றுவந்தார்கள். இந்தத் திட்டத்தில் ஒரு பெரும் தொகையை இந்த வகை திட்டத்தில் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் டிவிடெண்ட் வருமானம்மூலம் மாதாந்திரச் செலவுக்கு வருமானம் பெற்று வந்தார்கள்.

சிறிது காலம் முன்பு வரை, இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த வரியும் கிடையாது. இப்போது, இதற்கும் வரி கட்டவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

எஸ்.டபிள்யூ.பி (SWP – Systematic Withdrawal Plan)

இது ஒருபக்கமிருக்க, சமீபத்தில் மத்திய அரசாங்கம் ஈக்விட்டி ஃபண்டுகளின் டிவிடெண்ட் வருமானத்திற்கு டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி (Dividend distribution tax) என்கிற அளவில் 10% வரி விதித்தது. இதனைத் தொடர்ந்து, ஈக்விட்டி டிவிடெண்ட் திட்டத்திலிருந்து (Dividend paying equity Plans) குரோத் திட்டத்திற்கு (Growth Plans) பலரும் மாறத் தொடங்கினார்கள்.

 

இப்படிச் செய்வது நல்லது என்றாலும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மாதந்தோறும் வருமானம் பெற நினைப்பவர்களுக்கு குரோத்   திட்டங்களின் மூலம் தொடர் வருமானம்     (Monthly cash flow) வராத காரணத்தால், சில முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தினை  விரும்பவில்லை. இதற்கு என்னதான் தீர்வு? 

டிவிடெண்ட் திட்டத்திலிருந்து குரோத் திட்டத்திற்கு மாறியபிறகு, குரோத் திட்டத்தி லிருந்து எஸ்.டபிள்யூ.பி என்ற முறையில் மாதந்தோறும் அந்தத் திட்டங்கள் மூலம் பணம் பெறுவதாகும். இந்த முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை நமக்கு வருமானமாகக் கிடைக்கும். லாபம் வருகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட தொகை நமக்கு வருமானமாகக் கிடைத்துவிடும். எப்படி?

உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டை (ICICI Prudential       balanced advantage plan) எடுத்துக்கொள்வோம். இதில் மன்த்லி டிவிடெண்ட் திட்டம் மூலம் வரும் வருமான விகிதமும், எஸ்.டபிள்யூ.பி-யில் நமக்குக் கிடைக்கும் தொகையின் லாப விகிதமும் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டுத் தரப்பட்டு உள்ளது. (பார்க்க, அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை). எஸ்.டபிள்யூ.பி முறையில் வரும் லாபம், மன்த்லி டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட அதிகமாக உள்ளது.

எஸ்.டபிள்யூ.பி-யின் சிறப்பம்சங்கள்

எஸ்.டபிள்யூ.பி திட்டத்தில் பல  சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

குறிப்பிட்ட தேதியில் வருமானம்

மன்த்லி டிவிடெண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட தேதி களில் வருமானம் கிடைப்ப தில்லை. முதல் வாரத்தில் அல்லது மாதத்தின் இறுதி வாரத்தில் வருமானம் கிடைக்கலாம். சில மாதங்களில் டிவிடெண்ட் எதுவும் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால், சில மாதங்களில் இரண்டு முறைகூட கிடைக்கலாம். ஆக, ஒரே மாதிரியாக டிவிடெண்ட் கிடைப்ப தில்லை.

 

ஆனால், நமது மாதாந்திரச் செலவுகள் குறிப்பிட்ட தேதிகளில் இருப்பதால், இந்த வருமானத்தை நம்பி செலவு செய்ய நினைக்கிற வர்களுக்கு மன்த்லி டிவிடெண்ட் திட்டம் ஏற்றதாக இல்லை. ஆனால், எஸ்.டள்யூ.பி முறையில் குறிப்பிட்ட தேதியில் நமக்கு வருமானம் கிடைப்பதால், நம் செலவிற்கு ஏற்றவாறு இந்தத் திட்டம் உள்ளது.

செலவுக்கேற்ற தொகை

மன்த்லி டிவிடெண்ட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் தொகை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டுள்ள திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் அதிகபட்சம் ரூ.12,167 (மே 16) கிடைத்து உள்ளது. குறைந்தபட்சம் ரூ.1,520 (ஜன 2016) கிடைத்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட தொகை கிடைக்காதபோது சில மாதங்களில் நமக்கு செலவுக்கேற்ற தொகை கிடைக்காமல் போகலாம். எஸ்.டபிள்யூ.பி முறையில் நாம், நமது செலவுக்கேற்றவாறு லாபத்தை அனுசரித்து, ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவது நல்ல விஷயம்தானே!

சந்தை நன்றாக இருக்கும்போது மன்திலி டிவிடெண்ட் திட்டங்கள் மற்றும் குரோத் திட்டங்களில் லாபம் அதிகம் கிடைக்கிறது. சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது இரண்டு திட்டங்களிலும் நஷ்டம் வரும். இரண்டிலும் அசல் குறைய வாய்ப்புகள் உள்ளது.

மன்த்லி டிவிடெண்ட் திட்டங்கள், டிவிடெண்ட் திட்டங்கள், குரோத் திட்டங்கள் ஆக மூன்று திட்டங்களும் அடிப்படையில் ஒன்றே. எனவே, அதன் லாபமீட்டும் தன்மையும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
ரிஸ்க்கும் அதேமாதிரி இருக்கும். என்றாலும், நமக்குக் கிடைக்கும் தொகையும், தேதியும் மாறுபடுவதால், நமக்குக் கிடைக்கும் லாப விகிதம் மாறுகிறது. இந்தத் தன்மையைப் புரிந்துகொண்டால், எதைத் தேர்வுசெய்வது என்பது எளிதாகப் புரியும்.

யூனிட்டுகளும், அதன் மதிப்பும்

மன்த்லி  டிவிடெண்ட் திட்டங்களில் யூனிட்டுகளின் எண்ணிக்கை மாறாது. ஆனால், எஸ்.டபிள்யூ.பி திட்டங்களில்  யூனிட்டுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், என்.ஏ.வி ஏறிக் கொண்டே செல்லும். இரண்டிலும் மதிப்பு என்று பார்த்தால், அதிக மாற்றம் இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.எஸ்.டபிள்யூ.பி முறையில் நாம் பணத்தைத் திரும்பப் பெறும்போது  நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஒவ்வொரு மாதமும் நாம் எடுக்கும் பணம், அந்தத்  திட்டத்தில் சராசரியாக வருகிற லாபத்தைவிட சற்று குறைவாகவே எடுத்தால், சுமார் 3-5 ஆண்டுகளுக்குப்பின், அசல் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

வரியும் வருமானமும்

எஸ்.டபிள்யூ.பி முறையைத் தேர்வு செய்ய முக்கியக் காரணம், வரிதான்.  இப்போது டிவிடெண்ட் வரி விதிக்கப் படுவதால், இனி வரும்காலத்தில் டிவிடெண்டாகக் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. அதேசமயம், எஸ்.டபிள்யூ.பி-யில் நாம் ஒரு வருடம் கழித்து பணம் எடுக்க ஆரம்பித்தால், வரியானது குறைவாக இருக்கும். முதலில் கிடைக்கும் ஒரு லட்சம் லாப ரூபாய்க்கு வரி கிடையாது என்பதால், வரி நோக்கிலும் எஸ்.டபிள்யூ.பி, மன்த்லி டிவிடெண்டைவிடச்  சிறந்தது. 

எச்சரிக்கை

நிறைய முதலீட்டாளர்கள் இதுபோன்ற ஹைபிரிட் திட்டங்களில் 12% வட்டியில் டிவிடெண்ட் பணம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்று நினைத்து முதலீடு செய்கிறார்கள். சந்தை நன்கு இருக்கும்போது மட்டுமே இது சாத்தியம். மாதந்தோறும்  வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

%d bloggers like this: