Advertisements

வெற்றி புனையும் வேலே போற்றி!

நமசிவாயம்

`வந்த வினைகளும் வருகின்ற வல்வினை களும் கந்தனென்று சொன்னால் காணாமல் போகும்’ என்பார்கள் பெரியோர்கள். ஒருமுறை, தேவர்களும் கொடும்வினையைச் சந்தித்தார்கள். முக்கண் பரமனாம் சிவனாரை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதால், பெரும் பாவத்துக்கு ஆளான தேவர்களைச் சூரபத்மன் வடிவில் வினைகள் சூழ்ந்தன.

அரிய வரங்களை பெற்ற சூரன் தேவலோகத் தைக் கைப்பற்றினான்; அகப்பட்ட தேவர்களை அடிமையாக்கினான். செய்வதறியாது திகைத்த தேவர்கள், சிவனாரைச் சரணடைந்தார்கள். அவர்களை ரட்சிக்க சிவம் சித்தம்கொண்டது; முருக அவதாரம் நிகழ்ந்தது.

சிவனாரின் திருமுகங்களாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோ ஜாதம் மற்றும் அவரின் உள்முகமாகிய அதோ முகத்தின் நெற்றிக்கண் திறக்க ஆறு பொறிகள் தோன்றின. அவற்றைச் சிவப்பரம்பொருள் வாயுதேவனிடம் அளித்தார்.

வாயுவோ, ஆற்றல்மிகு பொறிகளைத் தாங்க இயலாமல், அவற்றை அக்னியிடம் அளித்தார், அக்னி பகவான் பொறிகளைக் கங்கையில் சேர்த்தார். கங்காதேவி அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தாள். அங்கே, பொறிகள் ஆறும் குழந்தைகளாய் மாறித் தவழ்ந்தன. கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப் பட்டன. 

உரிய காலத்தில் அம்மையும் அப்பனும் வந்தார்கள். ஆறு குழந்தைகளையும் அருகில் அழைத்து சேர்த்து அணைத்தாள் ஆதிசக்தி. ஆறு முகங்கள்- பன்னிரு கரங்களுடன் ஓருருவாய் ஒளிர்ந்து நின்றான் கந்தப்பெருமான். அக்கணமே தேவர்களின் வினைகள் யாவும் ஒழிந்தன என்றே சொல்லலாம். ஆம்! கந்தனரு ளால் விரைவில் அசுரகுலம் வீழ்த்தப்பட்டு தேவர் குலம் தழைத்தது.

தேவர்களை மட்டுமல்ல, கலியுகத்தில் வாழும் நம்மை ரட்சிக்கவும் ஓடோடி வருவான் வடிவேலன்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்

– எனப் போற்றுகிறது திருமுருகாற்றுப்படை. நாமும் சிந்தையில் கந்தனை நிறைத்து, அவன் தாள்களில் சரண்புகுந்துவிட்டால், வெற்றிகள் பெருகும்; வாழ்க்கை வளமாகும்.

கந்தனைச் சரணடைய – அவன் திருத்தாள் களைப் பற்றிக்கொள்ள ஏதுவான எளிய வழிகளை ஞானநூல்கள் பலவும் விவரிக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்ரீகந்தசஷ்டி விரதம்.

சந்ததி சிறக்க… கந்த சஷ்டி விரதம்!

விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகை உண்டு. வியாழன், சனி போன்ற ஏதாவது ஒரு நாள் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும்.

மாதத்தின் ஏதாவது ஒரு நாள்… உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதம். மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் – உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் ஆகிய நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது. இதில் சஷ்டி விரதம் சிறப்பானது.

‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’  என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே, சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பானதாக மாறும் என்பதுதான்.

இன்னொருவகையில்கூடச் சொல்லலாம். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால், அவர்களின் அகமென்னும் கருப்பையில் கரு வரும்.  இப்படியான சிறப்புகள் மிகுந்த சஷ்டி விரதம், காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது.

ஐப்பசி மாதம், தீபாவளி கழிந்த பிரதமை நாளில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாள்கள் கடைப்பிடிக்கப்பட்டு, சஷ்டி நாளில் முடியும். அதுவே கந்த சஷ்டி விரதம் எனப் படுகிறது. சூரனை முருகப்பெருமான் வதைத்த நாளோடு இந்த விரதம் முடிகிறது.

ஐப்பசி மாத சஷ்டியில் தொடங்கி, ஒரு முழு ஆண்டில் வரும் 24 சஷ்டி நாள்களிலும் விரதமிருப்பது நல்லது. முடியாதவர்கள், இந்த ஐப்பசி சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.  

விரத நியதிகள்

காலையில் எழுந்து தூய்மையாகி, திருநீறிட்டு, வடக்கிலோ, தெற்கிலோ அமர்ந்து முருகப் பெருமானைத் தியானிக்கவேண்டும். பின்னர், முருகனை ஆராதித்து வழிபடவேண்டும். அப்போது, நைவேத்தியமாக நெய்யில் செய்த மோதகம் சமர்ப்பிப்பது சிறப்பு.

ஷ்டி விரத ஆறு நாள்களிலும் உண்ணாமல் இருப்பதுதான் நல்லது. எச்சில்கூட விழுங்காமல் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், இன்னமும் இருக்கிறார்கள். மறைந்த கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் தாயார், தனது 90 வயதிலும் இந்த விரதத்தை கடுமையாகக் கடைப்பிடித்தார் என்று அவரே கூறியிருக்கிறார்.

முடியவே முடியாத பட்சத்தில் விரத நாளில் ஒரேயொரு முறை மட்டும் ஆறு மிளகும், ஆறு கை அளவு நீரும் எடுத்துக்கொள்ளலாம். மிளகு வயிற்றில் அமிலக்கோளாறு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், அதை எடுத்துக் கொள்ளலாம்.

று நாளும் விரதமிருந்து ஏழாவது நாளில் சிறப்பான பூஜைகளை மேற்கொண்டு அடியார்களுக்கு உணவிட்டு ‘மகேஸ்வர பூஜை’ மேற்கொள்ள வேண்டும். ஆறு நாள்களும் உண்ணாமல் விரதமிருந்து ஏழாவது நாளில் கடலில் நீராடிவிட்டே விரதம் கைவிடும் பக்தர் களைத் திருச்செந்தூரில் இன்றும் காணலாம்.

டலையும் மனதையும் சீராக்கும் கந்த சஷ்டி விரதம் இந்த வருடம் வரும் 8.11.18 வியாழக்கிழமை தொடங்குகிறது. செந்தூரில் 13.11.18 செவ்வாய்க் கிழமை அன்று சூரசம்ஹார வைபவம். இந்தத் திருநாள்களில் உடல்-உள்ளச் சுத்தியோடு வழிபடுவோம்; எல்லாம்வல்ல முருகனின் அருளைப் பெற்று மகிழ்வோம்.


கந்தசஷ்டி கவசத்தின் கதை!

ள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை – கந்த சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி அற்புதமானது.

ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தபோது, அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார்.

அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப் பரமன் பிரசன்னமானார்.

‘‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார். உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர், முருகனின் அருள்திறனைப் போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம்.

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித் தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள்.

ஆயினும், இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டுள்ள சிறு  குழந்தை வடிவாகிய முருகப்பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.

இப்பாமாலையைச் `சிரகிரி’ எனப்படும் சென்னி மலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.

`சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையின்  குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார்.

கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்த சுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது. உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்த அன்பர்களின் அனுபவ உண்மையாகும்.

Advertisements
%d bloggers like this: