Advertisements

பார்வை ஒன்று போதுமா? – பரிசோதனை சொல்வதை கவனியுங்கள்!

ஒற்றைக்கண் பார்வைப் பிரச்னை ஏன் உருவாகிறது?

ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் விஷன்’ (Monocular Vision)என்கிறார்கள். சிலருக்கு சில மணி நேரம் மட்டும் பார்வை இழப்பு ஏற்படும். சிலருக்கு சில நாள்களுக்கு மட்டும் பார்வை இழப்பு ஏற்படலாம். சிலருக்குப் பார்வைக் குறைபாடு சில ஆண்டுகளாகக் கொஞ்சம்

கொஞ்சமாக ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கலாம். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை எல்லோருக்கும் ஏற்படலாம். “ஒரு கண் பார்வை இழப்பை, சிகிச்சையளிக்கக்கூடிய பாதிப்பு, சிகிச்சையளிக்க முடியாத பாதிப்பு என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு கண்ணின் பார்வை நேராகவும், அடுத்த கண்ணின் பார்வை விலகியநிலையிலும் காணப்படுவதை ‘மாறுகண்’ என்கிறோம். ‘மாறுகண் இருப்பவர் அதிர்ஷ்டசாலி’ என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மருத்துவரீதியாக, மாறுகண்ணை குணப்படுத்தவில்லை என்றால், பார்வையை இழக்க நேரிடும். எந்தக் கண்ணின் பார்வை விலகியநிலையில் இருக்கிறதோ, அந்தக் கண்ணின் நரம்பு வழியாகச் செல்லும் தகவல்கள் மூளையில் சரியாகப் பதிவாகாது.

மற்றொரு கண்ணிலிருந்து செல்லும் தகவல்கள் தெளிவாகப் பதிவாகும். இந்த நிலை தொடரும்போது, ஒரு கட்டத்தில் எந்தக் கண்ணிலிருந்து தெளிவான தகவல் கிடைக்கவில்லையோ, அந்தத் தகவல்களை மூளை புறக்கணிக்கத் தொடங்கும். அப்போது மூளை புறக்கணித்த கண்ணின் செயல்பாடு குறையத் தொடங்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் எந்தச் சிகிச்சையளித்தாலும் பயனளிக்காது. அழகியல் சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, விலகியிருக்கும் கண்ணை நேராக்க முடியும். ஆனால், பார்வையைத் திரும்பப் பெற முடியாது.

கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் இரு கண்களிலும் ஏற்பட வேண்டும் என்பது இல்லை. ஒரு கண்ணில் மட்டும் சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். அப்போது, நன்றாகத் தெரியும் கண்ணைவைத்து சமாளித்துக்கொண்டே இருப்பார்கள். நன்றாக இருக்கும் கண்ணில் அதிக அழுத்தம் கொடுக்கும்போது தலைவலி ஏற்படும். அதன் பிறகுதான் மருத்துவரை நாடுவார்கள். சிலர், ஒரு கண்ணில் பிரச்னை இருக்கிறது என்பதை உணராமலேயே இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து இதற்குத் தீர்வு காணாவிட்டால், குறைபாடுள்ள கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். உலக அளவில் கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் பார்வை இழப்பது அதிகரித்துவருகிறது. கிட்டப் பார்வை, தூரப் பார்வையால் மாறுகண் பிரச்னையும் ஏற்படலாம்” என்கிறார்  கருவிழி மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரம்யா சம்பத்.

இது தொடர்பாக மேலும் விரிவாகப் பேசுகிறார் அவர்…

“குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு கண் பார்வை இழப்புக்குப் பிரதான காரணம், பள்ளியில் சக வயதினரோடு பழகும்போது பென்சில், பேனாக்களால் கண்ணில் ஏற்படும் விபத்துகள்; இவை தவிர, பட்டாசு விபத்துகள், கழிவறையில் பயன்படுத்தும் ஆசிட் போன்ற ரசாயனங்கள், சுண்ணாம்பு போன்றவை கண்ணில்படுதல் காரணமாகவும் ஒரு கண்ணில் பார்வையை இழப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அரிதாக, ரத்தச்சோகை, கண்களில் புற்றுநோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த குறைபாடுகள், சாலை விபத்துகள் ஆகியவையும் குழந்தைகளின் ஒரு கண் இழப்புக்குக் காரணமாக அமைகின்றன. அதேபோல தாயின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளியே வரும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இடுக்கி, வேக்வம் கப் (Vacuum cup) போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க முயல்வார்கள். அப்போது அந்த உபகரணங்களைச் சரியாகக் கையாளவில்லை என்றால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஒரு கண்ணில் பார்வையை இழக்க நேரிடும். அதனால்தான் ஐந்து வயதுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம். ஏதாவது ஒரு காரணத்தால் கண்ணில் பாதிப்பு இருந்தால், அதை முன்னதாகவே கண்டறியப் பரிசோதனை உதவும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு குறைபாடு ‘கெரட்டோகோனஸ்’ (Keratoconus). வட்ட வடிவத்திலிருக்கும் கண்ணின் கருவிழியின் உருவம் பாதிப்படைந்து, கூம்பு வடிவத்தில் மாறுவதே இந்தக் குறைபாடு. கருவிழி பலவீனமாகிக்கொண்டே போகும்போது, அதில் தழும்பு ஏற்பட்டு பார்வை பாதிக்கப்படும். இந்தக் குறைபாடு 80 சதவிகிதம் பேருக்குக் காரணமே தெரியாமல் வருகிறது; 20 சதவிகிதம் பேருக்கு மரபணு பிரச்னை காரணமாக வருகிறது. ஒருவருக்குக் கருவிழி பலவீனமடைந்து ‘கெரட்டோகோனஸ்’ இருப்பது கண்டறியப்பட்டால், பார்வையை மீட்டெடுக்க வழியே இல்லை. கண்களில் மீதமிருக்கும் பார்வையைத் தக்கவைக்க, கருவிழியை வலுப்படுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு, கண்ணாடி அல்லது ‘கான்டாக்ட் லென்ஸ்’ பயன்படுத்தியே ஆக வேண்டும். இவை பயனளிக்கவில்லை என்றால், இறந்தவர்களிடமிருந்து கருவிழியை தானம் பெற்றுப் பொருத்துவதுதான் தீர்வு.

கண்ணின் கருவிழி என்பது மிகவும் ஒளி ஊடுருவும் (Transparent) அமைப்பு. அதில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். கண் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கருவிழி உலர்ந்துவிடுவது, ரசாயன விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், சாலை விபத்துகள் காரணமாகவும் பெரியவர்களுக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்படலாம். கண்களில் ‘பவர்’ அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்படும். நரம்பு திடீரென்று அகன்றுவிடும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்கள், காலையில் எழுந்து பார்த்தால், திடீரென்று பார்வை தெரியாது. லென்ஸ் போடுவது உள்ளிட்ட காரணங்களால் கண்களில் ஏற்படும் தொற்றும்கூட பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்திவிடலாம். தொற்று அதிகமாகிவிட்டால், சிகிச்சை பயனளிக்காது. கருவிழி மாற்றம்தான் தீர்வு. சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருந்தாலும், மருத்துவச் சிகிச்சையில் குணப்படுத்த முடியும். குணப்படுத்தினாலும் சிலருக்குக் கருவிழியில் தழும்பு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படலாம்.

நரம்பியல் பாதிப்பும் ஒற்றைக் கண் பார்வைக்குக் காரணமாக இருக்கிறது. புற்றுநோய்க் கட்டிகள், விபத்தால் கண்களில் ரத்தக்கசிவு போன்றவற்றால் பார்வை இழப்பு ஏற்படும். வலது மற்றும் இடது கண்களிலிருந்து மூளைக்குத் தகவல்களைக் கொண்டு செல்லும் இரண்டு நரம்புகளும் ஒரு கட்டத்தில் சந்திக்கும். அந்தச் சந்திப்பு நிகழ்வதற்கு முன்னதாக இருக்கும் நரம்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், ஒரு கண்ணில் மட்டும் பார்வை இழப்பு ஏற்படும். சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் கண்களில் பாதிப்பு ஏற்படலாம். சர்க்கரைநோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் கண்களுக்கான ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு ஏற்படும். அதுவும்கூட ஒற்றைக் கண் பாதிப்புக்கு வழிவகுக்கும். கண் நீர் அழுத்த நோய் காரணமாகவும் ஒரு கண் பாதிக்கப்படலாம்” என்கிறார் ரம்யா.

கண் சார்ந்த பிரச்னைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஏராளமான சிகிச்சை முறைகளும் தீர்வுகளும் உள்ளன. ஆனால், எந்தக் கட்டத்தில் சிகிச்சைக்குச் செல்கிறோம் என்பதில் இருக்கிறது சிகிச்சைக்கான வெற்றி. எந்தப் பிரச்னைக்கும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்றுவிட்டால்,  அதற்கு நிச்சயம் தீர்வு உண்டு. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்தி, சிகிச்சையைத் தாமதித்தால் தீர்வைக் கண்டறிவது சிரமம். ஒரு கண் பார்வை உள்ளவர்களுக்கு வாழ்க்கையை வாழ்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

ஒரு கண் பார்வையை உடையவர்களால் பிறரைப்போல் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். ஆனால், வாகனம் ஓட்டுவதில் மட்டும் அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. காரணம், பார்வை சரியாக இல்லாமல் ஒருவர் வாகனம் ஓட்டுவது, அவருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு கண் பார்வை உடையவர்கள் சைக்கிள், பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டலாம். ஆனால், கனரக வாகனங்களை ஓட்டவே கூடாது. ‘மாற்றுத்திறனாளிகள் வாகனங்களில் உள்ளதுபோல, பார்வைக் குறைபாடு உடையவர்களின் வாகனங்களிலும் பார்வை குறைபாட்டைத் தெரிவிக்கும் குறியீடுகளை ஒட்டினால், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும் கவனத்துடன் வாகனங்களை ஓட்டுவதற்கு உதவியாக இருக்கும். அரசு இந்த விஷயத்தைப் பரிசீலிக்க வேண்டும்’ என்பது மருத்துவர்களின் ஆலோசனை.


 

விலங்குகளுக்கும் உண்டு!

னிதர்களைப்போலவே விலங்குகளுக்கும் ஒற்றைக் கண் பார்வை இழப்பு நேரிடும். விலங்குகளைப் பொறுத்தவரை விபத்துகள், பிற விலங்குகள் தாக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவையே பிரதான காரணங்கள். பிற விலங்குகளைக் கொன்று தின்னும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளில்தான் ‘ஒற்றைக் கண்ணன்’கள் அதிகம். இந்த விலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு ஒற்றைக் கண்ணும் ஒரு காரணமாம். கண் பாதிக்கப்படுவதால், விலங்குகளை வேட்டையாடும் திறன் அவற்றுக்குக் குறையும். அப்போது எளிய இலக்கான மனிதர்களை அவை வேட்டையாடுகின்றன.


 

ஆழத்தை உணர்தல்

ரு கண்களாலும் பார்க்கும் காட்சியை கண்களுக்குப் பின்புறத்தில் இருக்கும் ‘ஆப்டிக் நெர்வ்’ எனப்படும் பார்வை நரம்புகள், சிக்னல்களாக மூளைக்கு எடுத்துச் செல்லும். மூளைக்குக் கொண்டு செல்லப்படும் தகவல்கள் அங்கு ‘பிராசஸ்’ செய்யப்பட்டு, முப்பரிமாண வடிவத்தில் நமக்கு உணர்த்தும். இது ‘டெப்த் பெர்செப்ஷன்’. அதாவது ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது, எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது என்பதை ஆழமாக நாம் உணர்வது. இரண்டு கண்களின் பார்வையும் சரியாக இருந்தால்தான் முப்பரிமாண வடிவத்தில் அந்தக் காட்சியை நம்மால் உணர முடியும். ஒரு கண்ணால் பார்க்கும்போது ‘டெப்த் பெர்செப்ஷன்’ குறையத் தொடங்கும். வாகன ஓட்டுநர் உரிமத்துக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ‘டெப்த் பெர்செப்ஷன்’ நிலை பரிசோதிக்கப்படும்.


 

Advertisements
%d bloggers like this: