புற்றுநோய் – கேர் டேக்கர் கவனத்துக்கு..

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், அவர்களைச் சிறப்பாக கவனித்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஆனால், இத்தகைய கவனிப்பின்போது சில நேரங்களில் அதிகப்படியான அலைச்சல், வேலை காரணமாக அவர்கள் சோர்வடைந்து மனதளவில் பாதிக்கப்படலாம். அப்படிப்பட்டச் சூழலில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் அழுத்தத்திலிருந்து விடுபட்டு, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

சரியானதைத் தேர்ந்தெடுங்கள்: ஆலோசனை என்ற பெயரில் உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு சிகிச்சைகள் பற்றி எடுத்துச் சொல்லி, குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் நோயாளிக்கு எது சரி, எது சிறந்தது என்பது குறித்த சரியான புரிந்துணர்வு உடனிருப்பவருக்கு வேண்டும். அதன்படி சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதவி பெறுங்கள்: நோயாளிகளைவிட அவர்களை கவனித்துக்கொள்பவர்கள், தனிமை மற்றும் பல காரணங்களால் மனதளவில் அமைதியற்று இருப்பார்கள். எனவே, அவர்கள் மருத்துவர்களிடம் பேசி தேவையான உளவியல் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பேசவிடுங்கள்:
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள். அது இருவருக்கும் மனதளவில் பெரிய ஆறுதலைக் கொடுக்கும். இருவரும் இணைந்தே நோய்க்கெதிராகப் போராட உதவும்.

உங்களையும் கவனியுங்கள்: நோயாளியை கவனிப்பதுபோல உங்கள் உடல்நலனிலும் அக்கறை செலுத்துங்கள். சரியான நேரத்தில் உணவு, போதுமான உறக்கம், ஓய்வு போன்றவை உங்களுக்கும் தேவை. சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் அலட்சியமாக இருக்கக் கூடாது.

சமூகத்தோடு இணையுங்கள்:
உங்கள் மனதில் உள்ளதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் பதற்றத்துடன் வாழாதீர்கள். கோயிலுக்குச் செல்வது, பிறர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பது என சமூகத்துடன் பழகினால் இறுக்கம் தளர்ந்து, புத்துணர்ச்சி கிடைக்கும்.

%d bloggers like this: