உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்!

ஒரு வயதில், மொபைல் போனை வைத்து விளையாட துவங்கும் போதே, குழந்தைகளுக்கு, ‘டிஜிட்டல் மீடியா’ அறிமுகமாகி விடுகிறது. 8ம் வகுப்பு அல்லது அதற்கும் முன் கூட, சொந்தமாக மொபைல் போன் வைத்திருக்கின்றனர். கடந்த வாரம், திருவான்மியூரில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ‘எத்தனை பேருக்கு ‘பேஸ்புக்’ கணக்கு உள்ளது?’ என்று கேட்டேன். ஆறாம், ஏழாம் வகுப்பு குழந்தைகள் அனைவரும் கைகளைத் உயர்த்தினர். தன் குழந்தை, ‘பேஸ்புக்’ பயன்படுத்துகிறது என்பது, நிறைய பெற்றோருக்குத் தெரியவில்லை; அதிர்ந்து போயினர்.

மிகக் குறைந்த வயதில், சமூக வலைதளங்களை பயன்படுத்தத் துவங்கும் போது, குழந்தைகள் முன், பிரத்யேகமாக நிறைய சவால்கள் உள்ளன. எதிலும் கவனம் இல்லாமல், எல்லா நேரமும், ‘வீடியோ கேம்’ விளையாடுவதை, மனநோய் என, கடந்த ஜூன் மாதம், உலக சுகாதார மையம் அறிவித்தது.
வீடியோ கேம் விளையாடும் எல்லாக் குழந்தைகளும், அதற்கு அடிமை ஆகிவிடுவர் என்றும் சொல்ல முடியாது.
ஒரு நாளில், அரை மணி நேரம் மட்டும், விளையாடிய குழந்தை, படிப்படியாக அதிக நேரம் விளையாடத் துவங்கி, படிப்பு, விளையாட்டு, சாப்பாடு என்று அன்றாட நடவடிக்கை எப்போது பாதிக்கப்படுகிறதோ, அப்போது, குழந்தை அடிமை ஆகிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.
பத்து வயதுக் குழந்தையின் பெற்றோர், என்னிடம் வந்தனர். ஒரு வயதில் இருந்தே போனைக் கொடுத்து பழக்கியிருந்தனர். பள்ளியில் சேர்ந்த பின்னும், வீடியோ கேம் விளையாடுவது தொடர்ந்தது.
அறையை விட்டு வெளியில் வராமல், முழு நேரமும், வீடியோ கேம் ஆடினான். சாப்பாட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தால், கேம் ஆடியபடியே சாப்பிட்டான். குளிக்க மாட்டான்; பள்ளிக்கும் போகவில்லை; ஒரு கட்டத்தில் பாத்ரூமுக்கு கூட எழுந்து போகாமல் இருந்த இடத்திலேயே கழிப்பான். இந்த நிலையில் தான், பெற்றோர் என் உதவிக்காக வந்தனர்.
குழந்தையை, எப்படியாவது அழைத்து வரச் சொன்னேன்; ஆனால், வரவில்லை. குழந்தை நன்றாக ஆகியிருப்பான் என்று நம்புகிறேன். இவ்வளவு மோசமாக, வீடியோ கேமில் அடிமையான குழந்தைகள் பற்றிய தகவல்கள், மற்ற மாநிலங்களிலும் உள்ளன.
மிகைப்படுத்திச் சொல்வதாக வோ, பயமுறுத்துவதற்காகவோ இதை நான் சொல்லவில்லை. தற்போது குழந்தைகள் மத்தியில் வளர்ந்து வரும் பெரிய பிரச்னை இது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து நேரம் செலவழிப்பதால், ‘பேஸ்புக் அடிமை’ ஆகிவிடுவதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு எச்சரித்து உள்ளது. பேஸ் புக்கில், ‘போஸ்ட்’ செய்யப்படும் புகைப்படம், குடும்ப நிகழ்ச்சி, சுற்றுலா என்று மற்றவர்கள் செய்யும் விஷயங்களை ஒப்பீடு செய்வது, குழந்தைகளின் மத்தியில் அதிகரித்துள்ளது.
‘சைபர் புல்லிங்’ எனப்படும் கிண்டல் செய்வது, நக்கலாக, ‘கமென்ட்’ போடுவது அதிகரித்து உள்ளது. பள்ளியில் வெளிப்படையாக நடந்தால், ஆசிரியர் கண்டிப்பர். இணையதளம் என்பதால், பெற்றோருக்கும் தெரிவதில்லை.
சமூக வலைதளங்களை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு மனப் பதற்றமும், மனச் சோர்வும், குழந்தைகளுக்கு அதிகரிக்கிறது என, இந்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளிடம் தற்போது உள்ள பொதுவான பிரச்னை, படிப்பது நினைவில் இல்லை; மறந்து போய்விடுகிறது என்பது தான். காரணம், மூளையை பயன்படுத்துவது குறைந்து விட்டது.
நினைவில் வைக்காமல் இருப்பதால், மூளையின் குறிப்பிட்ட பகுதி மழுங்க துவங்கி விட்டது என்று சொல்கின்றனர். இதற்கு, ‘டிஜிட்டல் அம்னீஷியா’ என்று பெயர்.
உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும், படிப்படியாக குறைந்த விட்டது. மகிழ்ச்சி என்றால், ஸ்மைலி, சோகமாக இருந்தால், அதற்கு ஒரு படம் என்று எல்லாம், ஒரு படத்தைப் போட்டு முடித்து விடுகின்றனர்.
தொழில்நுட்பம், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை நாம் எஜமானர்கள். அதன் வலைக்குள் சிக்கிக் கொண்டால், நாம் அடிமைகள் தான்.

டாக்டர் யாமினி கண்ணப்பன்,
மனநல மருத்துவர், சென்னை.
yaminikannappan@gmail.com

%d bloggers like this: