Advertisements

பாயும் ஸ்டாலின்… பதறும் குடும்பம்! – தி.மு.க கூட்டணி கணக்கு…

மெல்லிய சாரலில் தலையைச் சிலுப்பியபடியே வந்த கழுகார், “ம் ஐப்பசியே முடிந்துவிட்டது. அடைமழை வந்தபாடில்லை. ஏதோ கஜா புயல் புண்ணியத்தில் சாரலாவது விழுகிறது. அதுதான் நனைந்துகொண்டே வந்தேன்’’ என்று குஷிபொங்கச் சொன்னவர், ‘லேப் டாப்’பை ஆன் செய்தார்.
‘‘நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தி.மு.க இறங்கிவிட்டது. தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன. இந்த அணியுடன் ஜி.கே.வாசன், ஜவாஹிருல்லா, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய தலைவர்களும் தோழமை உணர்வுடன் செயல்பட்டுவருகிறார்கள். தி.மு.க தலைமையிலான கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன.”“ஓஹோ!’’

“அறிவாலயத்துக்கு வரிசையாக விசிட் அடிக்கும் தலைவர்களே இதற்குச் சாட்சியம். சந்திரபாபு நாயுடு வந்தபிறகு, சீதாராம் யெச்சூரி வந்தார். வரும் 22-ம் தேதி அன்று டெல்லியில் பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளின் கூட்டம் ராகுல் தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது பி.ஜே.பி-க்கு எதிராக அணிதிரளும் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலினும் கைகுலுக்கப்போகிறார். அதன் பிறகு டெல்லியில் அகில இந்திய தலைவர்கள் சிலரைத் தனித்தனியாக ஸ்டாலின் சந்திக்கும் திட்டம் உள்ளது. இந்தக் கூட்டத்துக்குச் செல்லும்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் சிலருக்கு அழைப்புக் கொடுக்கிறார் ஸ்டாலின்.” 

“சிலை திறப்பு விழா எப்போதாம்?”
“டிசம்பர் 16-ம் தேதி சிலை திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிலை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி பல கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இதனால், தேதி இறுதி செய்யப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் சிலை வைத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். சிலை திறப்பு விழாவுக்கு பல தலைவர்களையும் அழைத்து, அந்த விழா மேடையையே நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்கான ஆரம்ப மேடையாக மாற்றும் திட்டமும் ஸ்டாலினிடம் இருக்கிறது.”
“இந்த மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்கிறார்களே?’’
‘‘புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்பதே தி.மு.க-வின் அஜென்டா. இதையே அக்கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் ஸ்டாலின் கறாராகப் பேசியிருக்கிறார். தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க ஒரு கணக்கு வைத்துள்ளது. முப்பது தொகுதிகள் தி.மு.க-வுக்கு; ஒன்பது தொகுதிகள்தான் கூட்டணிக்கு. காங்கிரஸுக்கு நான்கு, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒன்று, வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என்று மொத்தம் 39 தொகுதிகள் கணக்கு இதுதான்.  புதுவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமாம்.’’
“இவ்வளவு குறைவான தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ளுமா?”
“அவர்களிடம் ரஜினி உட்பட சில கணக்குகள் இருக்கின்றனதான். ஆனால், அரசனை நம்பி புருஷனைக் கைவிட அவர்கள் யோசிக்கிறார்கள். இதுவரை நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து எதுவும் வெளிப்படையாகப் பேசவில்லை. இதனால், இப்போதைக்கு காங்கிரஸுக்கு தி.மு.க-வை விட்டால் வேறு வழியில்லை. அதனால், தருவதைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இதை உறுதிசெய்வது போலவே  அதன் முக்கியத் தலைவர்கள் இருவர் தனித்தனியாகத் தங்கள் கோஷ்டிகளிடம், ‘தி.மு.க-விடமிருந்து ஐந்து சீட்டுகள் வரை உத்தரவாதம் உண்டு’ என்று சமீபத்தில் பேசியிருக்கிறார்கள்.”
“தி.மு.க கூட்டணியின் பிரசாரத் திட்டம் என்னவோ?”
“வேறென்ன பி.ஜே.பி எதிர்ப்புப் பிரசாரம்தான். அந்தக் கட்சியின் மதவாதம், பண மதிப்பு நீக்கம், ரஃபேல் ஊழல் விவகாரம் என்று ஸ்டாலின் வெளுத்துவாங்க உள்ளாராம். இதற்கான காரசாரமான ‘நோட்ஸ்’கூடத் தயாராகிவருகிறதாம்.”

“ஆனால், பி.ஜே.பி-க்கு நெருக்கமானவருடன் ஸ்டாலின் குடும்பத்து முக்கியப் புள்ளி தொடர்பில் இருக்கிறார் என்கிறார்களே?”
“தமிழகத்தைச் சேர்ந்த ‘ராஜகுரு’வை, தி.மு.க குடும்பத்துப் புள்ளி சந்தித்தது பற்றிச் சொல்கிறீர்களா. அந்தக் குடும்பப் புள்ளிதான் ஸ்டாலினின் அரசியல் மற்றும் கட்சி நிர்வாகத்தின் மாஸ்டர் மைண்ட் என்கிற கமென்ட் கடந்த சில ஆண்டுகளாகவே தி.மு.க-வில் உள்ளது. ‘ராஜகுரு’வுடன் மட்டுமல்லாமல் அகில இந்திய பி.ஜே.பி தலைவர்களுடனும் அந்தக் குடும்பப் புள்ளி தொடர்பில் இருக்கிறார். அதன் மூலமாக தி.மு.க-வுக்கு மத்திய அரசு நெருக்கடி தாராமல் பார்த்துக்கொள்கிறாராம்.’’
“ஓ… கதை அப்படிப் போகிறதா?’’
“ஆமாம். அ.தி.மு.க-வில் சிக்கலை உண்டாக்கியது போல தி.மு.க-வில் 2 ஜி வழக்கு மூலம் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்குச் சிக்கலை உண்டாக்கி, கட்சியைப் பலவீனமாக்க பி.ஜே.பி திட்டம் போட்டது. இதை அறிந்த ஸ்டாலின் தரப்பு கொதித்துவிட்டதாம். அப்போது, ‘ராஜகுரு’வைச் சந்தித்து அவரை ஆஃப் செய்தது, சாட்சாத் அந்தக் குடும்பப் புள்ளிதானாம். அதன்பிறகு, பல்வேறு கட்டங்களில் இருவரும் தனியாகச் சந்தித்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சில மூத்த பி.ஜே.பி தலைவர்களையும் அந்தக் குடும்பப் புள்ளி சந்தித்தார். இந்தச் சந்திப்புகள் அனைத்தும் ‘ராஜகுரு’ ஆலோசனையின் பேரிலே நடந்தன என்கிறார்கள்.’’
ஒருபுறம் ஸ்டாலின் பி.ஜே.பி-க்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கிறார்… மறுபுறம் அவரின் குடும்பப் புள்ளி பி.ஜே.பி நபர்களிடம் நட்பு பாராட்டுகிறார்… ஒரே குழப்பமாக உள்ளதே…”
“இதைத்தான் ராஜதந்திரம் என்பார்கள். என்னதான் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கீரியும் பாம்புமாக இருந்தாலும் உள்ளே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் ஓடுகிறது என்கிறார்கள்தானே… அப்படிதான் இது. அரசியலில் இதெல்லாம் காலம் காலமாக நடப்பவைதானே. அந்தக் குடும்பப் புள்ளியின் தொடர்புக்குப் பின்புதான் கருணாநிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் நிதின் கட்கரி பங்கேற்றார். பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை என்றாலும் பி.ஜே.பி-யை முழுவீச்சாக எதிர்க்க வேண்டாம் என்பது ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் மனஓட்டமாக இருக்கிறது. அதற்கு பல காரணங்கள். ‘பவர்ஃபுல் லேடியான மாயாவதியையே சத்தீஸ்கர் தேர்தலில் பணியவைத்துவிட்டது பி.ஜே.பி. ‘நாமும் இப்போது பி.ஜே.பி-யைத் தொடர்ந்து தாக்கினால் நம்மையும் அவர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள். தொழில், முதலீடுகள் தொடங்கிப் பலவகைகளில் சிக்கல் ஏற்படும் என்று குடும்பம் பதறுகிறதாம். அதனாலேயே அந்தக் குடும்பப் புள்ளி மூலம் பி.ஜே.பி தரப்பை பேலன்ஸ் செய்கிறார்கள். அடுத்த ஆண்டு, தமிழகத்துக்கான ராஜ்யசபா எம்.பி பதவிகளில் இரண்டு காலியாகப் போகின்றன. அவற்றில் ஒன்று தி.மு.க போட்டியிட உள்ளது. குடும்பப் புள்ளி அந்த இடத்துக்கு நிறுத்தப்பட்டாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.”
“அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”
“பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவேண்டும் என்று கே.சி.பழனிசாமி மேல்முறையீடு செய்ய உள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி திருச்சியில் அ.தி.மு.க தொண்டர்களை ஒருங்கிணைத்து மாநாட்டை நடத்த உள்ளார். அதன்பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர் தேர்தலை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தவேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக இருக்குமாம். வரும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க உள்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது இந்த விவகாரங்கள் வெடிக்கலாம்.”
“தினகரன் தரப்பும் தேர்தல் கணக்கை ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறதே?”
“தேர்தல் கூட்டணி வேலைகளில் பிஸியாக உள்ளார் தினகரன். குறிப்பாக, பா.ம.க தரப்புடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதேநேரம், அ.தி.மு.க தரப்பிலிருந்தும் அன்புமணிக்கு தூது விடப்பட்டுள்ளது. ஆனால், அன்புமணியின் சாய்ஸ் டி.டி.வி- தானாம். ‘அப்பாவிடம் நான் பேசுகிறேன். டிசம்பர் இறுதியில் சந்திக்கலாம்’ என்று தினகரனிடம் சொல்லியுள்ளார். வடமாவட்டங்களில் கணிசமாக இருக்கும் வன்னியர் வாக்குகளை பா.ம.க மூலம் அறுவடை செய்ய வேண்டும் என்பது தினகரனின் திட்டம்.’’
“பலே பலே…’’
“ஏற்கெனவே, பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்களை ஒன்றிணைத்து சில கூட்டங்களையெல்லாம் நடத்தியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். தமிழகத்தைப் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்று சூளுரையெல்லாம் செய்திருக்கிறார். அந்த வகையில், தினகரனுக்கு முக்குலத்தோர் இன ஏரியாக்களில் செல்வாக்கு இருப்பதால், பெரும்பான்மையான சாதிகளில் இரண்டும் கைகோத்து ஒரு கை பார்க்கலாம் என்றுகூடச் சிலர் உசுப்பேற்றிக் கொண்டுள்ளனராம்” என்ற கழுகார் ஜிவ்வெனப் பறந்தார்!

Advertisements
%d bloggers like this: