Advertisements

எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்!

ரபரப்பாக வந்த கழுகார், “நிவாரணப் பணிகளுக்காக நிறைய வேலைகள் இருக்கு… மடமடவெனக் கேளும்…” என்றபடித் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார். “15-ம் தேதி நள்ளிரவில் புயல். 22 மாவட்டங்களில் பாதிப்பு என்றாலும் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு. புயலால் மக்கள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அரசு விழாக்களில் பிஸியாக இருந்தார். கட்சியின் முக்கிய அமைச்சர்களும் நிர்வாகிகளும் போனில் எவ்வளவோ சொல்லியும், சொந்த ஊரில் விழாக்களை முடிக்காமல் வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால், டெல்டா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முதல்வர் மீது கடும் அதிருப்தியாம். ‘இங்கே மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்… அமைச்சர்களை மக்கள் ஓட ஓடத் துரத்துகிறார்கள்…  முதலமைச்சரோ, விழாக்களில் கலந்துகொண்டு ஆளுயர மாலை அணிந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்’ என்று முதல்வருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்களே வருத்தத்துடன் கமென்ட் அடித்திருக்கிறார்களாம். இதைத்தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வருக்கு இருப்பது இதயமா? இரும்பா?’ என்று கேட்டுள்ளார்.“நியாயம்தானே?”

“தினகரனுக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பித்து விட்டது. இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி காவல்துறை கொடுத்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தக் குற்றப் பத்திரிக்கையில் தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பி.ஜே.பி தரப்பில் சொல்லப்பட்ட சில நிபந்தனைகளுக்கு அவர் தலையாட்டவில்லை என்பதே நெருக்கடிக்குக் காரணமாம்…”

“ஓஹோ…”
“அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயலலி தாவின் புதிய உருவச்சிலைக்குக் கடந்த வாரம் திறப்பு விழா நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில், புதிய சிலையை வெள்ளைத் துணியால் போர்த்திவைத்திருந்தனர். ‘ஏற்கெனவே திறந்த சிலையை மீண்டும் திறப்பது நல்லதல்ல’ என்று நாமக்கலைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் எடப்பாடியிடம் சொல்லியுள்ளார். அதனாலேயே திரைச்சீலை மூலமாகத் திறப்பு விழா நடத்தாமல் சிம்பிளாக முடித்துவிட்டார்கள்.

எதிர் முகாமில் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடை பெறுகின்றன. அறிவாலயத்தின் உட்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் அண்ணா சிலையை அகற்றிவிட்டு, அதனுடன் கருணாநிதி சிலையையும் சேர்த்து அறிவாலயத்துக்குச் சொந்தமான இடத்திலேயே  வைக்க தி.மு.க. திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. விழா மேடையும் அறிவாலயத்தின் முன்பே அமைக்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் கடந்த வாரம் உறுப்பினர் அட்டை வழங்கும் பணிகளையும் தி.மு.க-வில் ஆரம்பித்துவிட்டனர். கடந்த முறை ஒரு கோடியே பத்து லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதைத் தாண்டி இப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை சென்றுவிட்டதாம்”“அடேங்கப்பா…”
“சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி சென்னையில் 15 நாள் பரோலில் இருந்துவிட்டு பெங்களூரு சென்ற அன்றைய தினம், இளவரசியின் மகன் விவேக் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது என்கிறார்கள். கடந்த 8-ம் தேதி சம்பவம் நடந்திருந்தாலும் பலநாள்கள் கழித்தே போலீஸுக்குப் புகார் போயிருக்கிறது. போலீஸார் செய்த விசாரணையில், ‘நவம்பர் 8-ம் தேதி இளவரசி பரோல் முடிந்து பெங்களூரு சிறைக்குச் சென்ற பின்னர், விவேக்கின் மனைவி மதியம் 3 மணிக்கு அண்ணாநகரில் உள்ள அவரின் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். விவேக்கும் அன்றைய தினமே குடும்பத்துடன் வெளியூர் சென்றதாகத் தெரிகிறது. சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3 மணிக்கு நேபாளத்தைச் சேர்ந்த வாட்ச்மேன் கோனாக் என்பவர், வீட்டில் காவலுக்கு இருந்துள்ளார். அதன்பின் அவரைக் காணவில்லை” என்று தெரிந்திருக்கிறது.

“வேறு சில விஷயங்களையும் சொல்கிறார்களே…”
“பொறுமையாகக் கேளும்… காவல் துறை மட்டுமல்லாமல், உளவுத்துறையும் இந்தத் திருட்டை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. சசிகலா தரப்பிலிருந்து இடைத்தேர்தலுக்காகப் பணத்தை வெளியே எடுக்கவிருக்கிறார்கள் என்பதான பேச்சுகள் அடிபடும் நிலையில் அவர்கள் குடும்பத்திலிருந்தே இப்படி ஒரு தகவல் கிளப்பிவிடப்படுகிறதோ என்கிற சந்தேகம் ஆளும் தரப்பினருக்கு இருக்கிறது. ஏனெனில், இளவரசி குடும்பத்திலிருந்தே காவல் துறையிடம் ‘ரகசியமாக விசாரியுங்கள்’ என்று கேட்டார்களாம். ஆனால், காவல்துறை மறுத்துவிட்டது. அதேசமயம், இதைத் திருட்டு வழக்காக மட்டுமில்லாமல் வேறு கோணத்திலும் உளவுத் துறை தோண்டிக்கொண்டிருக்கிறது” என்ற கழுகார் இறக்கைகளை விசிறிக்கொண்டே பறந்தார்.

Advertisements
%d bloggers like this: