Advertisements

கஜா நிவா‘ரணம்’ – வீதிக்கு வந்த மக்கள்… விருது வாங்கிய எடப்பாடி!

றுகிப்போன முகத்துடன் வந்தார் கழுகார். “டெல்டா மாவட்டங்களில் மக்களின் துயரங்களைப் பார்க்கும்போது, நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. கடைக்கோடி கிராமங்களில் மாற்று உடைகூட இல்லாமல் மக்கள் ஒரு வாரமாகத் தவிக்கிறார்கள். நிவாரணப் பணிகள் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் இன்னும் பல கிராமங்களில் குடிநீருக்குக்கூட வழியில்லை. மின்சாரம் மீண்டும் வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.
வி.ஏ.ஓ-க்கள் கூட பல கிராமங்களில் எட்டிப் பார்க்கவில்லை…” என்று படபடத்தார்.

“முதலில் தண்ணீரைக் குடியும்” என்று சற்றே அவரை ஆசுவாசப்படுத்திய பின்பு, “முதல்வரின் டெல்லி பயணம் எப்படி இருந்தது? பிரதமர் சந்திப்பில் என்ன பேசப்பட்டதாம்?” என்றோம்.
“புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிதியுதவிப் பட்டியலைக் கையோடு எடுத்துச் சென்றுள்ளார் முதல்வர். இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடியும், நிரந்தரப் பணிக்காக ரூ.15,000 கோடியும் கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பிரதமர் தரப்பில், ‘நிவாரணப் பணிகளை வேகப்படுத்துங்கள். மத்திய அரசு வேண்டிய உதவிகளைச் செய்யும். மத்திய அரசின் குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த பின்பு உதவிகள் குறித்து அறிவிக்கப்படும்’ என்று வழக்கமான வார்த்தைகளையே சொன்னார்களாம். அதைத் தாண்டி சில அரசியல் பேச்சுகளும் நடைபெற்றுள்ளன.”
“என்னவாம்?”
“பி.ஜே.பி தரப்பில் ‘தினகரனுடன் சேருவது குறித்துப் பரிசீலனை செய்யுங்கள்’ என்று சொல்லப்பட்டதாம். உடனே முதல்வருக்கு முகம் இறுகிப்போனாலும், ‘பரிசீலிக்கிறோம். போதுமான அவகாசம் தேவை’ என்று மட்டும் சொன்னாராம். யாரோ பி.ஜே.பி தரப்பில் பற்ற வைத்திருக்கிறார்கள் என்கிற கோபத்துடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் முதல்வர்.
“ஓஹோ…”
“ஆனால், முதல்வர் டெல்லி சென்றதையே தமிழக மக்கள் கோபத்துடன் பார்க்கிறார்கள்… ‘பாதிக்கப்பட்டவர்கள் நாம். அவர்கள்தான் முதலில் வந்து நம்மைப் பார்த்திருக்க வேண்டும்… விசாரித்திருக்க வேண்டும். அதன் பின்பே நம் முதல்வர் டெல்லிக்குச் சென்று நிதி கேட்டிருக்க வேண்டும். அம்மாவின் வழியில் நடைபெறும் ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய, ஜெயலலிதா வழியில் துணிவாக எந்த முடிவையும் இந்த அரசால் எடுக்க முடியவில்லை. டெல்லிக்குச் சென்று பவ்யம் காட்டுவது மட்டுமே இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக உள்ளது’ என்று மக்கள் நினைக்கிறார்கள்.”
“தனியார் நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்துகொண்டிருக்கிறாரே?”

“ஆமாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண உதவிகளைக் கேட்பதற்காகத்தான் டெல்லி சென்றார் என்று தமிழக மக்களும் அரசியல் கட்சியினரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் பிரதமரைச் சந்தித்த பின்பு மதியம் மூன்று மணிக்கு, தாஜ் மான்சிங் ஓட்டலில் நடந்த ‘இந்தியா டுடே’ பத்திரிகையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிறுவனம் சிறந்த சட்டம் ஒழுங்கு, சுற்றுலா, ஒட்டு மொத்த வளர்ச்சி என்று மூன்று பிரிவுகளுக்கான விருதுகளைத் தமிழகத்துக்கு வழங்கியது. விருதுகளைத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்க, முதல்வர் பெற்றுக்கொண்டார். இதுவும் தமிழக எதிர்க்கட்சிகளிடம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது…”
“என்ன சொல்கிறார்கள்?”“ ‘விருது வாங்கியது தவறில்லைதான். அது, தமிழகத்துக்குப் பெருமையும் கூட. ஆனால், ‘இடம், பொருள், ஏவல் என்று சூழல் அறிந்து முதல்வர் செயல்பட்டிருக்க வேண்டாமா? புயல் பாதித்த மாவட்டங்கள் போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன. வீடுகளை இழந்த மக்கள் வீதிக்கு வந்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில், இந்த விருது வாங்கும் விழா அவசியமா?’ என்று கேட்கிறார்கள் அவர்கள். அதுமட்டுமல்ல… ‘புயல் வீசிய நாள்களில், முதல்வர் தனது சொந்த மாவட்டமான சேலத்தில், அரசு விழாக்களைச் சிறப்பித்தார். அதன் பின்பும் சாலை மார்க்கமாக வராமல் ஹெலிகாப்டரில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார். அப்போதாவது, பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் முழுமையாகப் பார்வையிட்டிருக்கலாம். ஆனால், பெயருக்கு சில இடங்களை மட்டுமே பார்வையிட்டவர், அவசரமாகப் பாதியிலேயே சென்னைக்குத் திரும்பினார். இதுவே, அந்தப் பகுதி மக்களை மட்டுமல்லாமல், டெல்டா பகுதி எம்.எல்.ஏ-க்களையும் அமைச்சர்களையும் டென்ஷன் ஆக்கியிருந்தது. இந்தச் சூழலில், தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருது வாங்கி விழாவைச் சிறப்பிப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் அவர்களின் கோபம். ஆனால், முதல்வர் தரப்பிலோ, ‘தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பே தேதி கொடுத்தாகிவிட்டது.  நவம்பர் 22-ம் தேதி முதல்வர் டெல்லி செல்வது என்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவான பயணத் திட்டம். முதல்வர் பதவி என்பது ஒட்டுமொத்த மாநில மக்களுக்கான பிரதிநிதித்துவம் கொண்டது. மக்கள் சார்பில் விருது வாங்கியதில் என்ன தவறு…’ என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.”

“தி.மு.க தரப்பில் முதல்வரைச் சந்தித்திருக்கிறார்களே?”
“தி.மு.க-விலிருந்து கஜா புயலின் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்திருந்தார் கட்சித் தலைவர் ஸ்டாலின். அந்தத் தொகையை வழங்குவதற்காக முதல்வரின் வீட்டுக்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகனும், எம்.எல்.ஏ சேகர்பாபுவும் சென்றுள்ளார்கள். இருவரும் வருவது முன்கூட்டியே முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குச் சென்றவர்களை வரவேற்று அமரவைத்து காபி கொடுத்துள்ளார் முதல்வர். அப்போது, முதல்வரே துரைமுருகனிடம் பேச்சை ஆரம்பித்துள்ளார். ‘அரசாங்கம் துரிதமாக எல்லாப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறது. உங்கள் தலைவரிடம் சொல்லி அரசாங்கத்திற்கு இந்த நேரத்தில் ஒத்துழைப்பைக் கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். பதிலுக்கு துரைமுருகன், ‘ஒத்துழைப்பு கொடுக்கத்தானே ஒரு கோடி ரூபாயுடன் வந்துள்ளோம். இனி எங்கள் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் வேறு இருக்கிறது. அதையும் தருகிறோம்’ என்று தனக்கே உரிய பாணியில் சொன்னதும், முதல்வர் சிரித்துவிட்டாராம். ‘சரி, செக்கை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று துரைமுருகன் கூறியுள்ளார். கைலி அணிந்திருந்த முதல்வர், ‘இருங்கள்…’ என்று எழுந்து சென்று வேட்டி அணிந்துவந்து, செக் வாங்கும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.”
“20 தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து உளவுத்துறை ஒரு சர்வே எடுத்துள்ளது தெரியுமா?”
“ஆமாம்! கடந்த சில நாள்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறையினர் தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் ரகசிய ஆய்வு ஒன்றைச் செய்துள்ளனர். அந்த முடிவு ஆளும் அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம். ‘ஆளும் அ.தி.மு.க தரப்பு இப்போது தேர்தலைச் சந்தித்தால் ஒற்றை இலக்கத் தொகுதிகளைக்கூட கைப்பற்றுவது கடினம். தி.மு.க இந்த ரேஸில் முதலிடத்தில் இருக்கும்’ என்றும் சொல்லியுள்ளார்கள். குறிப்பாக, ‘தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை தினரகன் பெறுவார். சில தொகுதிகளில் தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் நபராக தினகரன் இருப்பார்’ என்றும் சொல்லியுள்ளார்கள்.”

 

“ஓஹோ!”
“இதை முறியடிக்கவும் ஆளும்கட்சி வசம் ஒரு திட்டம் இருக்கிறதாம். மத்திய அரசு கஜா புயலுக்கு தரப்போகும் நிவாரண நிதியை வைத்து ஓர் ஆட்டம் காட்ட இருக்கிறார்கள். புயல் பாதித்த தொகுதிகளில் நிவாரண நிதி என்கிற பெயரில் ஓட்டுக்கு இதுவரை இல்லாத வகையில் வாரி வழங்கினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.”
“தேர்தல் வேலையை அ.தி.மு.க தரப்பு ஆரம்பித்துவிட்டது போலவே?”
“20 தொகுதிகளிலும் சுவர் விளம்பரங்களை ஆரம்பிக்கச் சொல்லியுள்ளார்கள். டிசம்பர் மாதம் அறிவிப்பு வந்துவிடும். ஜனவரியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்ற தகவல் ஆளும்கட்சி வட்டாரத்தில் வலம்வருகிறது. குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையரும், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது’ என்று சொல்லியிருப்பதால், இனியும் தேர்தலைத் தள்ளிப்போட முடியாது என்று பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள்” என்ற கழுகார், “புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் துயர் துடைக்க நிறைய வேலைகள் இருக்கின்றன. அலைபேசியில் தொடர்பில் இரும்…” என்றபடி பறந்தார்.

Advertisements
%d bloggers like this: