நம்மைச் சிதறடிக்க வாய்ப்பு கொடுக்கலாமா? – துரைமுருகனிடம் கடுகடுத்த ஸ்டாலின்!

ட்சிராஜா வந்திருக்கேன்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
“ ‘2.O’ பாதிப்போ… சரி, தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதே?’’
‘‘கூட்டணிப் பிரச்னை எழுந்திருக்கும் நேரத்தில், இந்தக் கூட்டத்தை தி.மு.க கூட்டியுள்ளது. ‘தி.மு.க-வுடன் இணைந்துத் தேர்தலைச் சந்திப்போமா என்ற சந்தேகத்தில் இருந்த கட்சிகள், இந்தக் கூட்டத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளன.’’
‘‘திருமா, வைகோ இருவருமே ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்களே?’’

‘‘அவர்களின் வருத்தத்தை ஏற்கெனவே நாம் சொல்லியிருந்தோம். இந்த நிலையில், முதல்நாள் திருமாவளவனும் மறுதினம் வைகோவும் ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்கள். துரைமுருகன் பேச்சுக்குப் பின்பு, திருமா தரப்பிலிருந்துதான் ஸ்டாலின் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளார்கள். ஸ்டாலின் நேரம் கொடுத்ததுடன் அந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, துரைமுருகன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். திருமா உள்ளே நுழைந்ததும் எடுத்த எடுப்பில் ஸ்டாலின், ‘நீங்கள் எங்கள் அணியில்தான் இருக்கிறீர்கள்’ என்று சொல்லியதும் சிரித்துள்ளார் திருமா.’’

“ஓஹோ.”
“அதுமட்டுமல்ல, அருகில் இருந்த துரைமுருகனிடம், ‘நீங்கள் பேசியதால் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்தீர்களா?’ என்று கொஞ்சம் காட்டமாகக் கேட்டாராம். மேலும், திருமாவை வைத்துகொண்டே, ‘பேட்டி கொடுக்கும்போது பார்த்துக் கொடுங்கள். நம்மைச் சிதறடிக்க வேலைகள் நடக்கின்றன. அதற்கு நாமே வாய்ப்பு கொடுக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளார். பின்பு திருமாவிடம், ‘நம்பிக்கையாக இருங்கள், தேர்தல் நேரத்தில் சீட் குறித்துப் பேசிக்கொள்ளலாம்’ என்று ஸ்டாலின் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர்-10-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் ‘தேசம் காப்போம்’ மாநாட்டுக்கு வருவதாகவும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.’’
“வி.சி.க தரப்பு என்ன சொல்கிறது?”
“தி.மு.க கூட்டணியில் கடந்த முறை போன்று இம்முறையும் இரண்டுத் தொகுதிகளை வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சிதம்பரம், திருவள்ளூரைக் குறிவைத்திருக்கிறார்கள்”
“சரி, வைகோ – ஸ்டாலின் சந்திப்பு?”
“வைகோ அறிவாலயம் வந்தபோது, சில சுவாரஸ்யங்கள் நடந்தனவாம். துரைமுருகனும் வைகோவும் கல்லூரி நண்பர்கள். இருவரும் நேரில் சந்தித்தால் ஒருமையில் பேசிக்கொள்வது வழக்கம். அறிவாலயத்துக்குள் வைகோ வந்தபோது, அவரை வரவேற்க துரைமுருகன் நின்றுள்ளார். அவரைப் பார்த்த வைகோ, ‘நீ பேசினதுதான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னதும், துரைமுருகன், ‘அதை விடுப்பா’ என்று தோள்மீது கைபோட்டு அழைத்துவந்தார். இருவரும் பேசியதைக் கண்டு ஸ்டாலின் சிரிக்க, அவரிடம் வைகோ, ‘கல்லூரியில் படிக்கும்போதே இப்படித்தான். ஏதாவது சொல்லிப் பிரச்னையை உருவாக்குவதுதான் இவனோட பழக்கம்’ என்று சொல்ல, அந்த இடம் இறுக்கம் குறைந்து கலகலப்பாக மாறியது. பிறகு ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார் வைகோ. எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்கிறார்கள்.’’

“தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டதாம்?”
“ஒன்பது கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டன. அனைத்துமே தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளே. ‘மேக்கேதாட்டூ பிரச்னையில் மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. அதை அ.தி.மு.க அரசும் வேடிக்கைப் பார்க்கிறது. இதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று ஸ்டாலின் சொல்லியுள்ளார். இதற்காக, பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சொல்லியுள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.”
‘‘தமிழகத்தில் இடைத்தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறதே?’’
‘‘எடப்பாடிக்கு யோகம்தான். இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற இருந்த தேர்தல் ரெட் அலெர்ட் பிரச்னையால் தள்ளிப்போனது. இப்போது 20 தொகுதிகளுக்கான தேர்தலும் தள்ளிப்போகும் என்கிறார்கள். சமீபத்தில் தேர்தல் ஆணையம், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும்’ என்று அறிவித்திருந்தது. இதனால், ஆளும்கட்சியினரே தீவிரமாக வேலைப் பார்த்தார்கள். ஆனால், புயல் பாதிப்பால் இப்போது தேர்தல் அறிவிக்க முடியாத நிலை உள்ளது. ஜனவரி மாதம் மழை இருக்கும் என்று வானிலை மையம் சொல்லியுள்ளதால், அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடும் என்கிறார்கள்.’’
“காங்கிரஸில் ஏதேனும் தகவல்?”
“சோனியா வரும் டிசம்பர் 16-ம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வருகிறாராம். பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதைக் குறைத்து வந்த சோனியா, கருணாநிதிக்காக வருவது கதர்ச் சட்டைக்காரர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.”

‘‘முதல்வரைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றி இப்போது சர்ச்சை எழுந்துள்ளதே?’’
‘‘லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பம்தானே. ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்திலே அவர் இருக்க முடியாத அளவுக்கு மார்ட்டினுக்கு நெருக்கடிகள் இருந்தன. திடீரென அவரின் மனைவி, மகன், மருமகள் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து நிவாரண நிதி வழங்கியுள்ளார்கள். ‘அம்மாவுக்குக் கடைசிவரை ஆகாதவர்களாக இருந்தவர்கள், இப்போது முதல்வரை எப்படிச் சந்திக்க முடிந்தது? ஏற்கெனவே லாட்டரியைத் தமிழகத்துக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மிகப்பெரிய லாபி நடைபெற்று வருகிறது’ என்றெல்லாம் கட்சியினரே முணுமுணுக்கிறார்கள். முதல்வர் தரப்பிலோ, ‘மார்ட்டின் குடும்பத்தினரைச் சந்தித்தது நிவாரணத் தொகையைப் பெற மட்டுமே. வேறு நோக்கம் இல்லை’ என்கிறார்கள்’’ என்றபடி பறந்தார்.

%d bloggers like this: