தள்ளிப்போடாதே… குழந்தைக்கு வெல்கம்!

திருமணக் கோலத்தில் நிற்கும் மணமக்களை ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என்று வாழ்த்துவது வழக்கம். பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம். திருமண வாழ்க்கையைப் பூரணமாக்குவதும், அதற்கு அர்த்தத்தைப் புகட்டுவதும் குழந்தைகள்தாம். ஆனால், இப்போது குழந்தையின்மைப் பிரச்னை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.

குழந்தையின்மை தொடர்பான அத்தனை  கேள்விகளுக்கும் விரிவான பதில்களைத் தருகிறார், மகளிர் நோயியல் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் கற்பகாம்பாள் சாய்ராம்.

“குழந்தையின்மைப் பிரச்னை என்பது ஆண்டாண்டு காலமாக இருப்பதுதான். தற்போது விழிப்பு உணர்வு அதிகமாகிவிட்டதால், `சிகிச்சை எடுத்தாவது குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்ற எண்ணம் உருவாகிறது. நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்னைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பம். பொருளாதாரரீதியாகத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதமாகிவிடுகிறது.

நாம் எந்தக் காரணத்துக்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போட்டாலும், நமது உயிரியில் கடிகாரம் நேரத்தைக் கடத்திக்கொண்டே இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை ’பயலாஜிக்கல் கிளாக் இஸ் டிக்கிங்’ (Biological clock is ticking) என்று சொல்வோம். 30 வயதுக்கும் குறைவானவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பெண்களுக்கு 45 வயதுக்கு மேல், ஆண்களுக்கு 50 வயதுக்கு மேல்  குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.

ஒரு பெண்ணுக்கு 23 வயதிலேயே திருமணம் நடந்துவிட்டால், இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்கூட எடுத்துக்கொள்ளலாம். அதுவே 28 வயதில் திருமணம் நடந்தது என்றால், ஓராண்டு அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆறு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். முதல் திருமண நாளைக் கொண்டாடிவிட்டு அதற்குப் பின்னர் மருத்துவரிடம் செல்லுங்கள்.  உடல்பருமனும் குழந்தையின்மைக்கு முக்கியக் காரணம். திருமணத்துக்குப் பிறகு நிறைய பெண்கள் குறுகிய நாள்களில் எடை அதிகரித்துவிடுகிறார்கள். வெளிநாடுகளில் பாடி மாஸ் இண்டெக்ஸ் (பிஎம்ஐ) 30-க்கும் கீழே இருந்தால்தான் குழந்தையின்மை சிகிச்சைக்கு நோயாளிகளை உட்படுத்துவார்கள். நீர்க்கட்டிப் பிரச்னைக்கு எடை அதிகரிப்பும் காரணம். அவர்கள் எடையைக் குறைத்தாலே எளிதில் கர்ப்பம் தரிக்க முடியும். சர்க்கரைநோய் குழந்தையின்மைக்கு காரணம் இல்லை என்றாலும், சர்க்கரை கட்டுக்குள் இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். 45 நிமிட உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுப் பழக்கம் நமது உடலை ஃபிட்டாகவைத்திருக்க உதவும்.

சரியான வயதில் திருமணம் செய்துகொண்டவர்கள், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, ஓராண்டு கழித்து, குழந்தைக்குத் திட்டமிடுவது தவறு கிடையாது. அப்படித் திட்டமிடுவோரில் பெரும்பாலானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும். மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனக் கடும் பணிச்சூழலில் உள்ளவர்கள், வீடு செல்வதற்கே தாமதமாகிவிடுகிறது. வீடு சென்றவுடன் சாப்பிட்டுத் தூங்கத்தான் தோன்றும். மறுநாள் மீண்டும் காலை வேலைக்குச் செல்ல வேண்டும். இது போன்ற பரபரப்புச் சூழலில் தாம்பத்யம் என்பதே மாதத்துக்கு ஒரு நாள் என்ற அளவில் குறைந்து போய்விட்டது. குழந்தை பாக்கியத்துக்கும், தம்பதியருக்குள் அந்நியோன்யத்தை அதிகரிக்கவும் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையாவது தாம்பத்யம் இருக்க வேண்டும். குறைந்தது வார இறுதி நாள்களிலாவது சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை மறந்து, தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும்.

ஆலோசனைகள் தேவை!

திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டாலே பார்ப்பவர்கள் எல்லாம் ‘இன்னும் விசேஷம் ஒண்ணும் இல்லையா?’ என்று கேள்விக் கணைகளால் துளைக்க ஆரம்பித்துவிடுவார்கள். தேவையற்ற ஆலோசனைகள் தேடி வரும். அவையெல்லாம்  அழுத்தத்தை ஏற்படுத்தும். விளைவு, மருத்துவர்களிடம் சென்று உடனே குழந்தை வேண்டும் என்பார்கள். குழந்தையின்மைக்குச் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் என்றாலே அதற்கு முன்னர் குறைந்தது ஓராண்டாவது தம்பதியினர் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

காரணங்கள் என்னென்ன?

கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள். நார்த்திசுக் கட்டிகள் 20, 30 சதவிகிதம் பேருக்கு காணப்படும். சிறிய அளவிலான கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை. கர்ப்பப்பையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான கட்டிகள் இருந்து, கர்ப்பப்பை பெரிதாக இருந்தால், அவை கர்ப்பத்தை பாதிக்கும். அவற்றை அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னை பரம்பரையாக வரக்கூடும். அம்மாவுக்கு நார்திசுக்கட்டிகள் இருந்திருந்தால், மகளுக்கும் வரக்கூடும். கர்ப்பப்பையை அடைத்துக் கொண்டிருக்கும் கட்டிகளை நீக்கினால்தான் குழந்தை தங்கும்.

மற்றொரு பொதுவான பிரச்னை ‘ஓவரியன் சிஸ்ட்’ எனப்படும் சாக்லேட் கட்டிகள். மாதவிடாய் சுழற்சியின்போது வெளியேறும் ரத்தத்தின் சில துளிகள் கர்ப்பப்பையின் முன்னாலும் பின்னாலும் தேங்கிவிடும். அந்த ரத்தம் உறைந்து, பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு சாக்லேட் நிறத்தில் இருக்கும். அதனால்தான் `சாக்லேட் கட்டி’ என்கிறோம். சிலருக்கு இந்தக் கட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிதாக ஆகிவிடும். பக்கத்திலிருக்கும் பகுதிகளுடன் ஒட்டிக்கொள்வதால், கருக்குழாய் தடைப்படும். இந்தக் கட்டிகளால் சிலருக்கு தாம்பத்யமே வலி நிறைந்ததாக மாறிவிடும். கருக்குழாய் அடைப்பு, கர்ப்பப்பைக்குள் சிறிய சதை வளர்தல், கருக்குழாய் சூலகம், அதிலுள்ள சிறிய ரத்தக்குழாய்கள் என ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை குடிப்பழக்கம், தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளுதல், சிறிய வயதில் அம்மைக்கட்டு வந்தவர்கள், ஹெர்னியா அறுவை சிகிச்சை, விரைப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை,  பந்து போன்ற பொருள்களால் ஏற்படும் காயங்கள், விந்தணுக்கள் வெளியேறும் பாதைகளில் அடைப்பு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதிக நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக நேரம் தோல் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர்கள், சுரங்கங்கள், உலைகள், கொதிகலன்களில் பணியாற்றுபவர்கள், தொடர்ந்து அடுப்பருகில் நின்று சமைப்பவர்களுக்கு விந்தணுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

இவை தவிர ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை ஹார்மோன் பிரச்னைகள். தைராய்டு குறைபாடு, மூளையிலிருந்து சுரக்கும் `புரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைப்படும். இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருந்தால், சிலருக்கு மார்பில் நீர் கசியும். புரோலாக்டின் சுரப்பு அதிகரித்தால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும். அதன் காரணமாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வருவது கடினமாகிவிடும். ஆண்களுக்கும் தைராய்டு குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்திக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருக்கலாம். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளை எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

சுயஇன்பத்துக்கும் குழந்தையின்மைக்கும் தொடர்பில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று விந்தணுக்கள் உருவாவதும் சுழற்சிதான். விந்தணுக்கள் சிறிய அளவில் உருவாகி முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். அப்படி முதியர்ச்சியடையும்போது பழைய விந்தணுக்கள் வெளியேறி, புதியவை உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும்.

சிகிச்சைகளின் படிநிலைகள்

குழந்தையின்மைப் பிரச்னைக்காக வருபவர்களுக்கு முதல்கட்டமாக ஆலோசனைகள் வழங்க வேண்டும். புதிதாக ஒரு தம்பதி சிகிச்சைக்காக வந்தால், மருத்துவர் 45 நிமிடங்களையாவது செலவழித்து, அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு பெண்ணுக்கு மாதவிடாய் சரியான இடைவெளியில் வருகிறதா, கருமுட்டைகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி, கணவரின் விந்தணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பரிசோதிப்போம். இதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். இந்தச் சிகிச்சையை, ‘எளிய சிகிச்சை’ (சிம்பிள் ட்ரீட்மென்ட்) என்கிறோம்.

அதன் பிறகு கணவரின் விந்தணுக்களில், மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் விந்தணு, பெண்ணின் கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியாகும் நேரத்தில் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சைக்கு `இன்ட்ராயூடெரின் இன்செமினேஷன்’ (Intrauterine Insemination) என்று பெயர். இந்தச் சிகிச்சையை ஆறு முறை செய்யலாம். அதற்கு அடுத்தகட்டம், `ஐவிஎஃப்’ (IVF) எனப்படும் செயற்கை முறை கர்ப்பம் தரித்தல். பெண்ணின் கருமுட்டை, கணவரின் விந்தணு இரண்டையும் வெளியே எடுத்து, கருவூட்டம் செய்ய வேண்டும். பிறகு ஆரோக்கியமான கரு தேர்ந்தெடுக்கப்பட்டு கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும்.

குழந்தையைத் தாங்க முடியாத அளவுக்குக் கர்ப்பப்பை பலவீனமாக இருத்தல், பிறவியிலேயே கர்ப்பப்பை உருவாகாமல் இருத்தல், கர்ப்பப்பையில் பாதிப்பு, கர்ப்பப்பை அமைப்பே சரியாக உருவாகாமல் இருப்பது போன்ற பிரச்னை உடையவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். குழந்தையின்மைப் பிரச்னைக்கான  ஏராளமான தொழில்நுட்பங்களை யாருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நோயாளிகளைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் முடிவெடுக்க வேண்டும்.

குழந்தையின்மைப் பிரச்னையைப் பொறுத்தவரை, 30 சதவிகிதம் ஆண்களின் பிரச்னை, 30 சதவிகிதம் பெண்களின் பிரச்னை, 30 சதவிகிதம் இருவரும் இணைந்த பிரச்னை இருக்கும். மீதம் 10 சதவிகிதம் ‘எதிர்பாராத மலட்டுத்தன்மை’ (Unexplained Infertility) என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும். ஆனால், கருத்தரிக்க மாட்டார்கள்.     15 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கும். இது போன்றவர்கள் மிகவும் மனஅழுத்தத்துக்கு ஆளாவார்கள். மாதவிடாய் சுழற்சி சரியாக இருந்து, அடிக்கடி தாம்பத்ய உறவில் ஈடுபட்டால்கூட 100 பேரில் 15 பேர்தான் கர்ப்பம் தரிப்பார்கள். அதாவது, ஒரு மாதவிடாய் சுழற்சியின் வெற்றி விகிதம் அவ்வளவுதான்.

இரண்டாம்நிலை குழந்தையின்மை

ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கிறது. அடுத்த குழந்தை வேண்டும் என்று நினைத்தால் கருத்தரிக்கவில்லை. மேலே சொன்ன அனைத்துக் காரணங்களினாலும் இரண்டாவது முறை கருத்தரிக்க முடியாமல் போகும். அதை `இரண்டாம்நிலை குழந்தையின்மை’ (Secondary Infertility) என்கிறோம். இரண்டு குழந்தை பிறந்துவிட்டதால், குடும்பக் கட்டுப்பாடு செய்தவர்கள் ஏதேனும் காரணங்களால்  மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கருக்குழாயை அடைத்திருப்பார்கள். அடைப்பை நீக்கிவிட்டால், குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். சுனாமி பேரழிவில் தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் பலர் சிகிச்சைகள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.

குழந்தையின்மைக்கான காரணம் எளிய சோதனைகளிலேயே கண்டறியப்படாவிட்டால், காரணத்தைக் கண்டறிவதற்கான சோதனைகளை அடுத்தடுத்து செய்துகொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் என்ன பாதிப்பு என்று கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்கவே மூன்று மாதங்கள் ஆகிவிடும். இந்த நீண்ட செயல்முறைகளால் சிலருக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். பணம் செலவழிகிறதே என்பதைவிட தொடர் சிகிச்சைகளும் பரிசோதனைகளும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும்.

அதனால் மருத்துவர்கள் பரிந்துரைச்சீட்டில் வரிசையாகப் பரிசோதனைகளின் பெயர்களை எழுதிக்கொடுத்து அனுப்பாமல், ‘ஒவ்வொன்றும் எதற்காகச் செய்யப்படுகிறது’ என்பதை நோயாளிகளுக்கு விளக்க வேண்டும். வெளிப்படையாக அனைத்தையும் விளக்கிச் சொல்லும்போதுதான் அவர்களுக்குப் புரியும். சிலர் சிகிச்சைக்கான காலம் அதிகரிப்பதால் தீவிர மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும். இதுவரை மேற்கொண்ட சிகிச்சையே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களிடம் உண்மை நிலவரத்தைக் கூறி, சிகிச்சையைத் தொடரவைக்க வேண்டும். முதலில் நோயாளிகளிடமிருக்கும் குறைகளைச் சொன்னால் தளர்ந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்குச் சாதகமான நேர்மறை விஷயங்களைச் சொல்லிவிட்டு, பிறகு பிரச்னைகளை எடுத்துக்கூற வேண்டும். அழுத்தம் திருத்தமாக பாசிட்டிவ் விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

குழந்தையின்மைக்கான எளிய சிகிச்சை முறைகளில் வெற்றி வாய்ப்பு 15 – 20 சதவிகிதம் தான் இருக்கும். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் 50 சதவிகிதம். சிகிச்சைக்குச் சென்றால் நிச்சயம் குழந்தையின்மைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் வருபவர்களுக்கு இது ஏமாற்றத்தைக் கொடுக்கும். இதற்கும் மருத்துவரின் ஆலோசனைதான் சிறந்த மருந்து. சிகிச்சைக்கு வரும்போது கணவரை உடன் அழைத்து வருவதே சிறந்தது. இது ஒருவருக்கொருவர் மனதளவில் ஆறுதலை அளிக்கும்.

`குழந்தையின்மைச் சிகிச்சைகள் மிகவும் செலவுமிக்கவை’ என்று ஓர் எண்ணம் உண்டு. எளிய சிகிச்சைகள், பரிசோதனைகளால் அதிகம் பொருள் செலவு ஏற்படாது. செயற்கைக் கருத்தரிப்பு முறையில் கருமுட்டை வளர்வதற்குத் தினமும் ஊசிகள் போடவேண்டியிருக்கும். அந்த ஊசிகளின் விலை அதிகம். அதனால்தான்  லட்சக்கணக்கில் செலவு ஆகிறது’’ என்கிறார் டாக்டர் கற்பகாம்பாள்.

பார்வையில் குறைபாடு இருந்தால் கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்துகொள்வதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் ஒரு பெண், தானாகக் கருத்தரிக்கவில்லை என்றால், ஒரு பாவப்பட்ட ஜீவனாக இந்தச் சமுதாயம் பார்க்கிறது. கண்களைப்போல கர்ப்பப்பையும் ஓர் உறுப்புதான். அதிலும் சிறிய சிறிய பிரச்னைகள் வரலாம். அதற்கான தீர்வுகளும் ஏராளம் உண்டு என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும்.

%d bloggers like this: