உங்கள் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்கு நேரடித் தகவல் அனுப்பலாம்… எப்படி?

இந்த முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன்மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக்கூட உருவாக்கமுடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர்.

உங்கள் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்கு நேரடித் தகவல் அனுப்பலாம்... எப்படி? #BrainNet

ரு நபரும் இன்னொரு நபரும் தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் எப்படியெல்லாம் பரிமாறிக் கொள்ளமுடியும்? பேச்சுவார்த்தையில் அதைச் செய்யலாம்; இல்லை எழுத்துகள் மூலம் பரிமாறலாம். எதுவுமே முடியாதென்றால் சைகைகள் மூலமாவது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இது எதுவுமின்றி நேரடியாக ஒருவர் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்குத் தகவல்களை எடுத்துச்செல்லும் தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து வருகின்றனர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதை `BrainNet’ என்று அழைக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சிந்தனையின் போது மூளையில் நடக்கும் மாற்றங்களைக் கண்டறிந்து நமக்குக் காட்டும் சாதனங்கள் பலவற்றை வடிவமைத்துள்ளனர் மருத்துவர்களும், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களும். இந்த முன்னேற்றங்களால்தாம் நேரடியாக மூளையிலிருந்து மூளைக்குத் தகவல்கள் அனுப்பும் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமாகியுள்ளது. 

இந்தச் சாதனங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று Electro Encephalograms (EEGs) மற்றொன்று Transcranial Magnetic Stimulator(TMS). இதில் EEG மூளையில் நடக்கும் மாற்றங்களைப் பதிவுசெய்யும். TMS அந்தத் தகவல்களை இன்னொரு மூளைக்குக் கொண்டுசெல்லும்.

EEG

2015-ம் ஆண்டே, ஆண்ட்ரியா ஸ்டாக்கோ மற்றும் அவரது குழுவினர் இந்தச் சாதனங்களை கொண்டு இரண்டு நபர்களின் மூளையை கனெக்ட் செய்தனர். பின்பு இதன்மூலம் இருவரும் 20 கேள்விகள் கொண்ட வினா-விடை விளையாட்டு ஒன்றை ஆடினர். இதன் பின்பு இரண்டுபேர் என்றில்லாமல் பலரையும் இந்த நெட்ஒர்க்கில் இணைத்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இப்படிப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று உலகின் முதல் நேரடியாக மூளையிலிருந்து மூளைக்குத் தகவல்கள் அனுப்பும் நெட்ஒர்க் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர் ஆண்ட்ரியா ஸ்டாக்கோ மற்றும் அவரது குழுவினர். 

இந்த BrainNet நெட்ஒர்க் மூலம் கனெக்ட் செய்யப்பட்ட மூவரை டெட்ரிஸ் (tetris) என்ற கேம்மின் சிம்பிளான வெர்ஷன் ஒன்றை ஆட வைத்துள்ளனர். இந்த கேம் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். மேலே இருந்து பல வடிவங்களில் ப்ளாக்குகள் கீழே வரும். அதைச் சரியாகத் திருப்பி கீழே சேர்த்து அதை நீக்கிக்கொண்டே வரவேண்டும். இதை ஆடும்போது BrainNet-ல் உள்ள ஒருவருக்கு இந்த கேமின் மேற்பகுதி மட்டும் தெரியும், மற்ற இருவருக்கும் முழு கேமும் தெரியும். ஆனால், முழுவதும் தெரிபவர்களிடம் கேம் ஆடும் கன்ட்ரோல் இருக்காது. அவர்கள் அனுப்பும் தகவல்களைப் பெற்று மற்றொருவர்தான் வரும் ப்ளாக்கை 180 டிகிரி திருப்பவேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யவேண்டும். BrainNet மூலம் இந்த சிம்பிள் கேம்மை வெற்றிகரமாக இந்த மூவரால் ஆடமுடிகிறது. 

டெட்ரிஸ்

“இந்த முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன்மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக்கூட உருவாக்கமுடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர். 

இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணி மிகவும் சாதாரணமானதுதான். ஒவ்வொரு சிந்தனையின் போதும் மூளையில் மின்னணு மாற்றங்கள் ஏற்படும். முன்பு கூறிய EEGs எலெக்ட்ரோடுகள் கொண்டிருக்கும். இதைத் தலையில் மாட்டிவிடுவர். இது மின்னணு மாற்றங்களைக் கண்காணிக்கும். 15Hz சக்தியுள்ள ஒளியைக் காணும்போது ஓர் அளவிலும், 17Hz சக்தியுள்ள ஒளியைப் பார்க்கையில் ஓர் அளவிலும் மின்னணு மாற்றங்கள் நிகழுமாம். இதை EEG-யால் சரியாக வேறுபடுத்திக் காட்டமுடியும்.

மூளை 2 மூளை

TMS சாதனம் மூளையில் ஏற்படும் சிந்தனைகளை கட்டுப்படுத்தவல்லது. மின்னணு மாற்றங்களைக் காந்த சக்தியின் உதவியுடன் இது மூளையில் இருக்கும் occipital cortex என்னும் பகுதியில் செலுத்தும். இது மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு ஒளியைப் பார்த்த உணர்வை அவருக்குத் தரும். ஏற்கெனவே இதில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஸ்டாக்கோவின் குழுவினர் இப்போது செய்ததைப் போல மூவர் கொண்ட ஒரு நெட்ஒர்க்கை யாரும் உருவாக்கியதில்லை. இது மூவரைத் தாண்டியும் செயல்படுத்தமுடியும் அதற்கான எண்ணிக்கையில் சாதனங்கள் இல்லாததால்தான் அதைச் செய்யமுடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போதைக்கு ஒளியைப் பார்ப்பதன் மூலம் ஒரே ஒரு தகவல்களைத்தான் இதன்மூலம் அனுப்பமுடிகிறது. கம்ப்யூட்டர் மொழிகளில் கூறவேண்டும் என்றால் ஒரு bit தான் சென்றுசேருகிறது. இதை இன்டர்நெட்க்கு எடுத்துச்செல்வதன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மூளையையும் இன்னொரு மூளையுடன் கனெக்ட் செய்யமுடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளது அந்தக் குழு. ஏற்கெனவே எலான் மஸ்க்கின் மூளையின் மூலம் சாதனங்களை கனெக்ட் செய்யும் `Neurolink’ திட்டம் போன்ற பல ஆராய்ச்சிகள் இதைச்சுற்றி நடந்துவருகின்றது. எல்லாமே தற்போது தொடக்கக் கட்டத்தில்தான் உள்ளது. இந்த ஆராய்ச்சிகள் இன்னும் பல முன்னேற்றங்களைக் காணும்போது மூளையைப் பற்றி நாம் அறியாத நமக்குப் புதிராக இருக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் வரப்போகும் சாதக பாதகங்களும் என்னவென்றும் அப்போதுதான் தெரியும். எது எப்படியோ பல சுவாரஸ்மான அறிவியல் கண்டுபிடிப்புகளை வரும்காலங்களிலும் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி!

%d bloggers like this: