கவலை தீர்க்க டைரி போதும்!

வலை… எல்லோரையும் எப்போதும் ஏதாவது ஒருவிதத்தில் வாட்டிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், `பெரும்பாலான நேரங்களில் உங்கள் கவலை தேவையற்றது’ என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 85 சதவிகிதக் கவலைகள் நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. மீதமுள்ள 15 சதவிகித கவலைகளைக் கையாண்டவர்களில் 79 சதவிகிதம் பேர், நினைத்ததைவிட அவற்றைத் திறமையாகக் கையாண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தினமும் உங்கள் கவலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் செலவிடுங்கள் போதும் என்கிறது ஓர் ஆய்வு.

கவலைகளைக் கையாள்வது எப்படி?


நேரத்தைத் தீர்மானியுங்கள்!

கவலைப்பட ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் போதுமானவை. உங்கள் டைரியில் அதற்கென நேரத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் மாலைப் பொழுதையே தேர்ந்தெடுங்கள், அப்போதுதான் பகல் முழுக்கப் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்காமல் இயங்க முடியும். இரவு உணவுக்குப் பிறகு, குழந்தைகள் உறங்கச் சென்றதும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

கவலைக்கு டைரி!

பகல் நேரங்களில் கவலைகள் உங்கள் நினைவுக்கு வரும்போது அவற்றை குறித்துவைத்துக்கொண்டு, அதை `பிறகு டீல் செய்கிறேன்’ என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்வதால், அந்தக் கவலையை நீங்கள் அலட்சியம் செய்யவில்லை என்ற எண்ணம், உங்களைச் சற்று ஆசுவாசப்படுத்தும் அல்லது கவலைப்படுவதற்கான நேரம் வருவதற்குள் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடலாம்.  
 
தேவையற்ற பயத்தை நீக்குங்கள்!

கவலைப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் குறித்துவைத்திருப்பவற்றைப் படியுங்கள். முடிவுக்கு வந்தவற்றை உடனே அடித்துவிடுங்கள். இது பிரச்னைகள் குறித்த தேவையற்ற பயத்தை நீக்கும்.

கவலைகளை ‘டீல்’ செய்யுங்கள்!

டைரியில் குறித்துவைத்திருக்கும் கவலைகளின் பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு பிரச்னையையும் படித்து, `அதற்காகக் கவலைப்படுவது அவசியம்தானா?’ என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ‘இல்லை’ என்று தோன்றினால் அதை அடித்துவிடுங்கள். ‘ஆம்’ என்ற பதில் தோன்றினால், அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வழிமுறைகளைப் பட்டியலிட்டு, அதைச் செயல்படுத்தத் தொடங்குங்கள். வழிமுறைகளை செயல்படுத்தத் தொடங்கினால், உங்கள் டைரியில் கவலைகளின் பட்டியலும் குறையத் தொடங்கும்.

%d bloggers like this: