வாய் மற்றும் பற்களை ஈஸியா எப்படி சுத்தம் செய்யலாம்?

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு

தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துர்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு.

பற்கள் சுத்தத்தின் அவசியம்

ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும். அது மாதிரியான டூத் பிரஷ்களை மட்டுமே வாங்க வேண்டும். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும்.60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.

மஞ்சள் கறை

என்னதான் பல் தேய்த்தாலும் சிலருக்கு பற்களில் மஞ்சள் கறை படியும். பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இயற்கையான வழிகள் உள்ளன. பற்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழ தோலைக் கொண்டு பற்களை துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால் கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.

ஆரஞ்சு பழ தோல்

இரவு உறங்கும் முன் ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும். இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது.

சாம்பல் பேஸ்ட்

சாதாரண சாம்பலை பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். உங்கள் பல் மருத்துவரை வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை சந்தியுங்கள். இது உங்கள் பற்களை சிறந்த முறையில் பாதுகாக்க உதவும்.

பளிச் பற்கள்

சமையல் சோடா பற்களை வெண்மையாக்கும். பல் துலக்க மாதம் ஒருமுறையாவது சமையல் சோடாவை பயன்படுத்தலாம்.

ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும், இது உங்கள் பற்கள் இயற்கையாகவே சுத்தமாகும். உதவுகிறது. இந்த வழியில், உங்கள் பல்லிடிக்கில் துணுக்குகள் தங்காது. ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் இரத்தப்போக்கு தடுப்பு ஆகிய நன்மைகள் உண்டாகும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. இயற்கையான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும் வாயை நன்றாக சுத்தம் செய்தால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உங்க பளிச் சிரிப்பை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

%d bloggers like this: