சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங்! – அணி திரளும் அமைச்சர்கள்

ழையில் நனைந்து வந்திருந்த கழுகார், “நெல் ஜெயராமன் மறைவு, இயற்கை விவசாயத்துக்கே பேரிழப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். கடைசி மூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார். அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் போய் மலர்வளையம் வைத்து மரியாதை செய்துள்ளனர். ஆனால், அவரது எண்ணப்படி இயற்கை விவசாயத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று சொன்ன கழுகார், சில நிமிடங்கள் மவுனம் காத்துவிட்டுத் தொடர்ந்தார். “சக அமைச்சர்கள் சிலரே தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது தெரிந்து, ஆடிப்போயிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எப்போதும் இல்லாத அளவுக்குச் சாதிரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டனவாம். சமீபத்தில் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமான பிரமுகர்கள் சிலர், சென்னையில் ஒரு பங்களாவில் சந்தித்தனர். ‘கரன்சி கொட்டும் முக்கியத் துறைகள் எல்லாம், முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம்தான் இருக்கின்றன. இதை இப்படியே விட்டால் நமக்கு எதிர்காலமே இருக்காது’ என்று ஆரம்பித்து, அந்தக் கூட்டத்தில் எதிர்ப்புப் புயல் கடுமையாக வீசியதாம்”

‘‘அடேங்கப்பா!’’
“முதல்வர் மற்றும் அவரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கைகள்தான் ஆட்சி பரிபாலனத்தில் ஓங்கியுள்ளதாம். குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூன்று பேரின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. முன்பு தத்தமது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அவர்கள், இப்போது மற்றவர்களின் துறைகளிலும் தலையிடுகின்றனராம். இந்த அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வலம்வரும் சிலர்தான், மாவட்ட அளவில் நடக்கும் மொத்த ஒப்பந்தப் பணிகள், பணி நியமனங்கள், பணி மாறுதல்களை முடிவு செய்கிறார்களாம். இதற்கு அதிகாரிகளும் முழு அளவில் ஒத்துழைப்புத் தருகிறார்களாம். ‘சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணிகளில்தான் ஏதாவது தேறும். அதையும்கூட விடாமல் சட்டியை வழித்து எடுத்ததுபோல, கோட்டையிலேயே எல்லாவற்றையும் முடிவுசெய்கிறார்கள். இதனால், வருமானம் போகிறது என்பதுடன் கட்சிக்குள்ளும் சொந்த மாவட்டத்திலுமே மரியாதை இல்லை. நாம் எல்லாம் இந்த இடத்துக்குச் சும்மா வந்துவிடவில்லை. கோடிகளை இறைத்துத்தான் வந்திருக்கிறோம். இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலையில், அதையெல்லாம் எப்போது திருப்பியெடுப்பது?’ என்று கொந்தளித்திருக்கிறார்கள்!”

“விவகாரம் சூடாக இருக்கிறதே… மேலும் சொல்லும்.”
‘‘ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விவகாரங்களில் பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்கள்தான், துறை அமைச்சர்களிடம் நேரடியாகப் பேசுவதற்கு வருவார்களாம். இப்போது, அவர்களின் பவர் புரோக்கர்களே சாதாரணமாகக் கோட்டையில் புழங்குகிறார்களாம். ஆனால், மரியாதை நிமித்தமாகக்கூட அந்த புரோக்கர்கள் அமைச்சர்களைச் சந்திப்பது இல்லையாம். சமீபத்தில் இலவச சைக்கிள்களை அமைச்சர் ஒருவரின் கையால் விநியோகிக்கச் சொன்னார்கள். அது கர்நாடக அரசால் நிராகரிக்கப்பட்ட தரம் குறைந்த சைக்கிள். அதைத் தமிழக அரசு சார்பில் வாங்கி விநியோகித்துள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது என்று, விஷயம் ஊடகங்களில் செய்தியாக… சம்பந்தப்பட்ட அமைச்சர் ‘எனக்கே தெரியாமல் எப்போது சைக்கிள் வாங்கினார்கள்?’ என்று முதல்வர் அலுவலகத்துக்கே சென்று சாமியாடித் தீர்த்துவிட்டாராம்.”
“ஓஹோ…”
“பதிவுத்துறையில் சிலபல பணியிட மாற்றங்களுக்கான திட்டமிடல்களை வைத்திருந்தாராம் துறை சார்ந்தவர். ஆனால், திடீரென்று கடந்த மாதம் தொடர்பே இல்லாமல் சில பணியிட மாற்றங்கள் நடைபெற்றன. ‘யாரது, நமக்கே தெரியாமல் நமது துறையில் ஆட்களை மாற்றுவது?’ என்று விசாரித்ததில் மூவர் அணியில் முக்கியமானவர் என்று தகவல் வந்ததாம். வரிந்துகட்டிக்கொண்டு முதல்வர் அலுவலகத்துக்கே சென்றவர், ‘அவரது துறையில் நான் தலையிடுகிறேனா? எதற்காகத் தேவையில்லாமல் எனது துறையில் அவர் தலையிடுகிறார்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டாராம்.
“அப்புறம்…”
“இன்னும் இருக்கிறது கேளும்… ஐ.டி துறையின் சார்பில் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்க முடிவு செய்தார்களாம். டெண்டருக்கு பல கம்பெனிகள் போட்டிபோட்டன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 80 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாகச் சொல்லி, ‘பிளாக்’ செய்துவைத்த ஒரு கம்பெனிக்கு அந்த டெண்டரை கொடுக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் கம்பெனிக்காரர், மும்பை முகவரியுடன் திடீரென்று போட்டியில் குதித்தாராம். மிரண்டுபோன ஐ.டி துறைக்காரர், ‘அந்தக் கம்பெனிக்குத் தரக்கூடாது’ என்று வாதிட்டதுடன், தலைமைச் செயலாளரிடம் சென்று, அந்த கம்பெனி பற்றிய பழைய முறைகேடு வரலாறுகளைச் சேகரித்து, கடிதமாகவே புகார் கொடுத்திருக்கிறார்.’’
“நடவடிக்கை எடுத்தார்களா?”
‘‘ஐ.டி துறைக்காரரின் ஃபைலைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டார்களாம். அது மட்டுமல்ல, செட்டாப் பாக்ஸ் டெண்டருடன் கூடுதலாக அதே துறையில் அறிவிக்கப்பட்ட 15 லட்சம் மடிக்கணினிகள் வாங்குவதற்கான மூவாயிரம் கோடி ரூபாய் புது டெண்டரையும் அந்த கம்பெனிக்கே கொடுக்கவும் கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார்களாம். ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஐ.டி துறைக்காரர், ‘டெண்டர் மட்டும் அந்தக் கம்பெனிக்குப் போகட்டும்… நான் யார் என்று காட்டுகிறேன்’ என்று சபதம் எடுத்திருக்கிறாராம்”
“ஏன், இப்போதே யார் என்று காட்ட வேண்டியதுதானே!”
“அதையும்தான் ரகசியக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள். ‘கடைசியாக ஒருமுறை தலைமையிடம் பேசிப்பார்ப்போம். நிலைமை மாறவில்லையென்றால், கையும் களவுமாக ஊடகங்களில் சிக்க வைப்போம். எந்த டெண்டர் விவகாரமானாலும் அது தொடர்பான எதிர்ப்புகளை அந்தந்த ஃபைல்களில் அழிக்கமுடியாத இங்க் பேனாவால் ‘நோட்’டாக பதிவுசெய்யுங்கள். அதுதொடர்பான ஆவணங்களின் நகல் எடுத்தும் சாஃப்ட் காப்பிகளைச் சேகரித்தும் பத்திரப்படுத்தி வையுங்கள். கூடிய விரைவில் நாம் யாரென்று புரியவைப்போம்’ என்று முடிவுசெய்துவிட்டுக் கலைந்தார்களாம்!”
‘‘முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைத் தவிர்த்த மற்ற அமைச்சர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா?’’
‘‘ம்க்கும்… அவர்களும் பொங்கிக்கொண்டுதான் உள்ளனர். முதல்வர் வசமுள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இரண்டையும் பிரித்துத் தரவேண்டும் என்று கேட்கிறார்களாம். அதேபோல, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வலுவான துறைகளை வைத்துள்ள அமைச்சர்களிடமிருந்தும் துறைகளை வாங்கி, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாருக்காவது தரவேண்டும் என்றும் போர்க்கொடி தூக்குகிறார்களாம்.”
“இதற்கெல்லாம் மூவர் தரப்பில் ரியாக்‌ஷன் என்னவோ?”
“இன்ஜினுக்கு ஆயில் போடுவதைப் போல, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களையும் கவனிக்கிறோம். இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் வருகின்றன. அதற்கான செலவுகளை யார் பார்ப்பார்கள்? டெல்லியையும் கவனிக்க வேண்டும். டெல்லியைக் காட்டி உருட்டி மிரட்டும் உள்ளூர் பூ பார்ட்டிகளையும் கவனிக்க வேண்டும், ‘ஒப்பினீயன் மேக்கர்’களையும் குளிர்விக்க வேண்டும். இதை எல்லாம் செய்வதால்தான் ஆட்சியே நீடிக்கிறது. இதையெல்லாம் புரியாமல் ரகசியக் கூட்டம் போட்டுச் சதி செய்கிறார்கள். பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுத்துவிட வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்’ என்று எதிர்ப்பாளர் களின் ஆதரவாளர்களிடம் உரிமையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம் அந்த மூவரும்.”

‘‘வேறு ஏதும் விஷயம்?’’
“ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டத்துக்கு அன்றைய தினம் காலை 10 மணியைக் கடந்தும், அ.தி.மு.க தரப்பில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதனால் முதல்வரும், துணை முதல்வரும் வீட்டிலிருந்து கிளம்பவில்லை. கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்து ஆள்பிடித்து வந்தார்களாம். இதனால் 10.45 மணிக்கு முதல்வர், துணைமுதல்வர் வந்த பிறகே ஊர்வலம் தொடங்கியது. சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். இதைச் சுட்டிக்காட்டுபவர்கள், ‘விரைவில் அவர் வழி தனி வழி’ என்று பஞ்ச் அடிக்கிறார்கள்!”
“அ.தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?”
“மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்குரல் ஒலித்தது என்கிறார்கள். ஆனால், கூட்டத்தில் நடந்ததை எல்லாம் கேட்கும்போது அப்படித் தெரியவில்லை. ‘மேக்கேதாட்டூவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும்’ என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, ‘மத்திய அரசுடன் இணக்கமாகப் போவது வேறு; மாநில நலன்களைக் காப்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்’ என்று சொன்னபோது, ‘இவர் நேரடியாக மத்திய அரசை எதிர்த்து அறிக்கை விடமாட்டாரா’ என்று எம்.பி-க்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. கூடவே, ‘புயல் நிவாரணத்துக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு உங்களுடையது’ என்றும் முதல்வர் சொன்னபோது, ‘இதுக்குத்தானா இவ்வளவு பில்ட் அப்’ என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டாராம் மூத்த எம்.பி ஒருவர்”
“சரி, தி.மு.க தரப்பில் உற்சாகம் அதிகமாகத் தெரிகிறதே?’’
“சிலைத் திறப்புவிழா, பொதுக்கூட்டம், டெல்லி பயணம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிஸியாக இருக்கிறார். டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ள சிலைத் திறப்புவிழாவுக்கு வரும் சோனியா, விழாவை முடித்துவிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்தக் கூட்டத்தையே தேர்தல் பிரசாரக் கூட்டமாக ஆரம்பித்துவிடும் திட்டமும் தி.மு.க-வில் உள்ளது.”
“டெல்லி பயணம்?”
“டிசம்பர் 10-ம் தேதி ராகுல் இல்லத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதற்காக 9-ம் தேதி டெல்லி செல்கிறாராம் ஸ்டாலின். அன்று சோனியாவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு நேரடியாக வாழ்த்துச் சொல்லி அசத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”
“சட்டமன்றச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டதே?”
“கவர்னர் ஒப்புதலுடன் மட்டுமே சட்டமன்றக் கூட்டம் நடைபெற முடியும் என்பதால், சிறப்புக் கூட்டத்துக்கு கவர்னரிடம் அனுமதி கேட்டுள்ளார்கள். கவர்னர் காரணம் கேட்டபோது, மத்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் போடப்போவதாக தமிழக அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. சில நிமிடங்கள் யோசித்த கவர்னர், பின்னர் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், அதன்பிறகு சில காய்நகர்த்தல்கள் நடந்திருக்கின்றன. அதையடுத்துதான் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல், ‘மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. மேக்கேதாட்டூ உட்பட காவிரியில் எந்த இடத்திலும் அணை கட்டக் கூடாது’ என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.”
“குட்கா ஊழல் வழக்கு விவகாரத்தில் ஃபாலோ அப் இருக்கிறதுதானே?”
“அது இல்லாமலா… சி.பி.ஐ-யின் பிடி இறுகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் பெயரும் இருந்தது. மாதவராவிடம் அவர்தான் பேச்சுவார்த்தை நடத்தியாக சி.பி.ஐ தரப்பு சொல்லிவந்தது. இதனால், சரவணனை விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கெனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டுமுறையும் அவர் ஆஜராகவில்லை. அவர் டிசம்பர் 7-ம் தேதி அன்று ஆஜராக வேண்டும் என மூன்றாவது சம்மனை அனுப்பியிருக்கிறது சி.பி.ஐ. இந்த விவகாரத்தை தி.மு.க-வும் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது” என்ற கழுகார் விர்ரெனப் பறந்தார்.

%d bloggers like this: