இனி சபரீசன்…! " – கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்

திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம், கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால் தான்.

சோனியா காந்தி, சரத் பவார் ஆகியோருடனான சந்திப்புக்குக் கனிமொழி ஏற்பாடு செய்திருந்தாலும், டெல்லியின் புதிய முகமாக ஸ்டாலின் மருமகன் முன்னிறுத்தப்படுவது அரசியல்ரீதியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. ` களநிலவரம் தெரியாமல் அவரை முன்னிலைப்படுத்துவது நல்லதல்ல’ எனக் குரல் எழுப்புகின்றனர் தி.மு.க முன்னணி நிர்வாகிகள்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைகளைத் திறந்து வைப்பதற்காக வரும் 16-ம் தேதி வரவிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. இதற்கான அழைப்பிதழைக் கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் சந்தித்துக் கொடுத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின்போது தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது உற்சாகமான மனநிலையில் இருந்தார் ஸ்டாலின். கூடவே, தலைவர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது ஸ்டாலின் மருமகன் சபரீசனும் நடுநாயகமாக நிற்க வைக்கப்பட்டார். இந்தக் காட்சிகள் தி.மு.க சீனியர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. `டெல்லி அரசியலில் கோலோச்சி வருபவர்களுக்குச் செக் வைக்கும் வகையிலேயே மருமகனை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின்’ என்ற குரல்களும் அறிவாலய வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. 

“ ஒவ்வொரு காலகட்டத்திலும் தி.மு.க-வின் டெல்லி முகமாக சிலர் முன்னிறுத்தப்படுவது வாடிக்கையானது. முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என ஒவ்வொரு சீசனுக்கும் சிலர் முன்னிறுத்தப்பட்டனர். அதேநேரம், சோனியாவுடனான சந்திப்பில் வெளிப்படையாக சபரீசன் முன்னிறுத்தப்படுவது சரியான ஒன்றாகத் தெரியவில்லை. டெல்லி அரசியலில் முன்பு கோலோச்சிய சிலர், தற்போது செல்வாக்கில்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. டெல்லி விசிட்டில் அவர்களில் சிலர் புறக்கணிக்கப்பட்டதை முக்கியமான இன்டிகேஷனாகப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சபரீசன் முன்வரிசைக்கு வருவதை அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ` தங்களுக்கு நேரம் வரும்’ என அவர்கள் காத்திருக்கிறார்கள். இதை பேலன்ஸ் செய்வதற்காகத்தான் டெல்லி பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கனிமொழி மூலமாகச் செய்ய வைத்தார் ஸ்டாலின். சோனியா காந்தி, சரத் பவார் ஆகியோருடனான சந்திப்புகளுக்கு அவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். 

மேக்கே தாட்டூக்காக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம், திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம், கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால்தான். இந்தமுறை வெளிப்படையாகவே சபரீசன் முன்னிலைப்படுத்தப்பட்டதை சீனியர்கள் யாரும் ரசிக்கவில்லை. நம்பிக்கைக்குரியவராக கட்சிக்குள் அவரைக் கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்துகளைப் புறம்தள்ளிவிட்டு அவரைக் கொண்டு வருவது நல்லதல்ல. அவர், ஸ்டாலினுக்கு நம்பிக்கையாக இருந்து சில காரியங்களைச் செய்து கொள்ளட்டும். அதில் தவறில்லை. இப்படி பகிரங்கமாக வெளிப்படுத்துவதன் மூலம், `இனி அவர்தான் எல்லாம்’ எனத் தொண்டர்களுக்குக் கூறுவதுபோல டெல்லி சந்திப்பு அமைந்துவிட்டது. அனைவரையும் அனுசரித்துச் செல்பவராக சபரீசன் இருந்திருந்தால், டெல்லி சந்திப்பை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். 

கட்சியின் மூத்த நிர்வாகிகளைப் புறம்தள்ளிவிட்டு சபரீசன் செய்யும் சில விஷயங்களால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் பொறுப்பாளர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். இவர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலையே தயார் செய்துவிட்டார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோல மற்ற தொகுதிகளில் இவர்கள் தேர்வு செய்தவர்கள்தான் போட்டியிட இருக்கிறார்கள். இதனால் மூத்த நிர்வாகிகள் மத்தியில் புகைச்சல் கிளம்பியுள்ளது. அதேநேரம், ஸ்டாலின் தன்னை முன்னிலைப்படுத்தத் தொடங்கியிருப்பதால், சபரீசனும் தன்னுடைய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மூத்த தலைவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பது எனச் செயல்பட்டால் நல்லது. அரசியல் என்பது இணையதளம், சமூக வலைதளம் மட்டும் கிடையாது. அங்கு கள அனுபவம் என்பதுதான் பிரதானமாகப் பார்க்கப்படும். இதில் சபரீசனுக்கு ஒரு சதவிகித அனுபவம் கூட கிடையாது. அதனால்தான், `சீனியர் லீடர்களை கன்சல்ட் செய்யுங்கள்’ என்கிறோம். இன்டர்நெட் மட்டும் உதவாது என்பதற்கு உதாரணமாக, ஸ்டாலின் நடைப்பயணம் சென்றும் தி.மு.க தோற்றதைச் சொல்லலாம். 

எடப்பாடி பழனிசாமி அரசு கவிழாமல் இருப்பதற்கும் சபரீசனைத்தான் காரணமாகச் சொல்கின்றனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஒரு பெரிய தலைவராக கோலோச்சுவதால், தமிழக அரசியலின் பக்கம் கனிமொழி உள்ளிட்டவர்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே இடம் டெல்லி மட்டும்தான். அங்கேயும் மருமகனைக் கொண்டு வந்து ஸ்டாலின் நிறுத்துகிறார் என்றால், தி.மு.க-வில் பூசல் வெடிப்பதைத் தவிர்க்க முடியாது” என்றார் ஆதங்கத்துடன்.

%d bloggers like this: