சசிகலா, எடப்பாடிக்கு செக்?! – ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை…

ழக்கத்தைவிட, வேகமாக வந்த கழுகார், ‘‘விகடன் விருது நிகழ்ச்சிகளுக்காக நிறைய மீட்டிங் இருக்கிறது’’ என்றபடியே அவசர அவசரமாகத் தகவல்களை அடுக்கினார்.
‘‘சாராய ஆலை பணம், சுவிஸ் வங்கி ஆவணங்களில் மன்னார்குடி குடும்பம்… குறிப்பாக, சசிகலா பெயர் மீண்டும் அடிபடுகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதை மனதில் வைத்தே வருமானவரித் துறை மூலமாக அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.’’‘‘விளக்கமாகச் சொல்லும்.’’

“முதலில் சாராய ஆலை விஷயத்தை விளக்கிவிடுகிறேன். ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி-யான சுப்பிராமி ரெட்டி தமிழகத்தில் ஏகப்பட்ட பிஸினஸ்களை செய்துவந்தார். அவருடைய தம்பிகள் சுதாகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோர் இதையெல்லாம் முழுமையாகப் பார்த்து வந்தனர். சத்யம் சினிமாஸ், தற்போது ஹயாத் ரெசிடென்சி இருக்கும் ராமி மால், மதுபான ஆலை என்று அவர்களுடைய சொத்துகள் சென்னையில் நிறையவே உண்டு. இதில் சிலவற்றைத் தற்போது விற்றும் விட்டனர். ஆனாலும் பல நிறுவனங்களை சுதாகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோரின் குடும்பத்தினர் நிர்வகித்துவருகின்றனர்.’’

‘’ஓ தெரியுமே… சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சுதாகர் ரெட்டியும், மதுபான ஆலை உள்ளிட்டவற்றை சீனிவாச ரெட்டியும் நிர்வகிக்கின்றனர். இதில் சுதாகர் ரெட்டியை மிரட்டித்தான் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் இருந்த சத்யம் சினிமா தியேட்டர்களை இளவரசியின் மகன் விவேக் வாங்கினார் என்றுகூடக் குற்றச்சாட்டுகள் இருந்தனவே.’’ 
‘`ம்… நிறையவே தெரிந்து வைத்துள்ளீர். சீனிவாச ரெட்டியின் குடும்பம் நிர்வகித்துவரும் பூந்தமல்லியில் இருக்கும் என்ரிகா மதுபான ஆலை (பழைய பெயர் பாலாஜி டிஸ்டிலரீஸ்) உள்பட பல இடங்களில் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் 55 கோடி ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மதுபான ஆலையில் இந்தத் தொகை சிக்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், ரெய்டின் பின்னணியே வேறாம்!’’

‘‘அது என்னவோ?’’
‘‘சுப்புராமி ரெட்டி உயிரோடு இருக்கும்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். தொழில் உள்படப் பலவற்றிலும் இவர்களுக் குள் தொடர்பு உண்டு என்று அப்போதே பேச்சுக்கள் உண்டு. சுப்புராமி ரெட்டி மறைந்தபிறகு அவருடைய தம்பி சீனிவாச ரெட்டியும் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு வேண்டிய வராகத்தான் இருந்தார். இவருடைய நிறுவனத்திலிருந்து டாஸ்மாக்குக்கு ஏராளமான சரக்குகள் வாங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு, திடீரென அது நிறுத்தப்பட்டது. இதனால், மதுபானத்தொழிற்சாலையையே மூடிவிட்டார்கள். பேரங்கள் நடைபெற்ற பிறகுதான், பாலாஜி குழுமத்தின் மதுபான ஆலையின் பெயர் மாற்றப்பட்டு, என்ரிகா என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்துள்ளது. தற்போது இந்த ஆலையிலிருந்து டாஸ்மாக்குக்கு சரக்குகள் தாராளமாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன.’’
“செய்யட்டும்..’’
‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்த நேரத்தில், இந்த ஆலைத் தரப்பினருக்கும் அ.தி.மு.க முக்கியப் புள்ளிகள் தரப்புக்கும் இடையே பெரும் தொகை பரிமாறப்பட்டதாம். அதைக் கணக்கு போட்டுத்தான், இப்போது சீனிவாச ரெட்டியின் நிறுவனங்களைக் குறிவைத்து ரெய்டு நடப்பதாகச் சொல்கிறார்கள். ரெட்டியின் சகோதரி மகன் ஒருவர், ஏற்கெனவே  தி.மு.க-வுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். தி.மு.க ஆட்சியில் அவர் செய்துவந்த தாதுமணல் தொழில், அ.தி.மு.க ஆட்சியில் முடக்கப்பட்டது. அவரிடமும் ஏதோ முதலீடுகள் குவிந்திருக்கிறதாம். அதனாலும் இப்படி ஒரு ரெய்டு என்கிறார்கள்.”
‘‘அது சரி… சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் நெருக்கடி தருவதாகச் சொல்கிறார்களே?’’
‘‘ஆம், அ.தி.மு.க-வை மட்டும் நம்பி நாடாளு மன்றத் தேர்தலைச் சந்திக்க பி.ஜே.பி தயார் இல்லை. அ.தி.மு.க-வுடன் அ.ம.மு.க-வை இணைத்துவிட்டால், தி.மு.க-வுக்கு கடுமையான சவாலை உருவாக்கலாம் என்று திட்டமிடுகிறது பி.ஜே.பி. இதற்கு தினகரன் தரப்பு ஒத்துழைப்பு தராது என்பதால் முதலில் சசிகலாவுக்கு ‘செக்’ வைத்துவிட்டு, அடுத்து தினகரனை மடக்கலாம் என்று திட்டமிடு கிறார்களாம். இப்போது பாலாஜி குழும அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தொகையை வைத்து, ரெட்டியை விசாரிக்க ஆரம்பிப்பார்கள். இதில் சசிகலா தரப்பு முதலீடுகள் குறித்தும் நிறையத் தகவல்கள் கிடைக்கும் என்கிறார்கள். இது சசிகலா, தினகரனுக்கு வைக்கப்படும் நெருக்கடி மட்டு மல்ல… அ.தி.மு.க-வுக்கு விடப்படும் மறைமுக மிரட்டல் என்றே ஆளும் கட்சியினர் பொங்குகின்றனர்.’’

‘‘வருமானவரித் துறையினர் என்ன சொல்கிறார்கள்?’’
‘‘அவர்கள் சொல்வது, வேறு கோணம். ‘சில நாட்களுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இரண்டுபேரும் ரெவின்யூ இன்டலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினர். ஏழு கிலோ தங்கக் கட்டிகள், கணக்கில் வராத 11 கோடி ரூபாய் சிக்கியது. விசாரணையில் அந்தத் தொழில் அதிபரின் இரண்டு கூட்டாளிகள், சென்னையில் ஹவாலா முறையில் பரிமாற்றங்களைச் செய்யும் கும்பல் பற்றிய விவரங்களைச் சொன்னார்கள். அந்த வகையில், கடத்தல் தங்கத்தை தென்கொரியர் களிடமிருந்து வாங்கி, இங்கே கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணமாக மாற்றி கொடுக்கும் நெட்வொர்க்கை சேர்ந்தவர்தான் அந்தத் தொழில் அதிபர் என்பதையும் சொன் னார்கள். அவர்கள் கொடுத்த சில விவரங்களின் அடிப்படையில்தான், பாலாஜி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த சுமார் 40 இடங்களை முற்றுகையிட்டோம். 55 கோடி மற்றும் 110 கோடி அளவில் கணக்கில் வராத சொத்துகள் பற்றிய விவரங்கள் கிடைத்தன. இந்தச் சோதனைக்கு வேறு எந்த அரசியல் பின்னணியும் இல்லை’ என்கிறது வருமானவரித் துறை வட்டாரம்.’’
டி.வி சேனலில் விஜய்மல்லையா பற்றிய செய்திகளைக் கவனித்த கழுகார், ‘‘ஜெயலலிதா இருந்தபோது, விஜயமல்லையா தரப்புக்கு நட்பு ரீதியில் பெரும் தொகை தரப்பட்டதாம். அப்போது மீடியேட்டராக இருந்தவர், பிரபலத் தொழில்அதிபர் ஒருவர். மல்லையா இந்தியாவை விட்டுத் தப்பி ஓடியதும், அந்தத் தொகை முடங்கிப்போனது. அதைத் திருப்பித்தரும்படி மீடியேட்டருக்கு மிரட்டல் விடப்பட்டது. அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லியிருக் கிறார். உடனே அந்தத் தொழிலதிபர் தமிழகத்தில் நடத்திவந்த தொழிலை முடக்க ஆரம்பித்தார். ஆனால், ஜெயலலிதா இறந்த பின்பு, இப்போது வீரநடை போட்டு வருகிறார் அவர். இவருடைய நிறுவனத்தையும் ரெவின் இன்டலிஜென்ஸ் பிரிவு, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை அதிகாரிகள் தோண்டித் துருவி வருகின்றனர்.’’
‘‘அந்தத் தொழில் அதிபர் யார்?’’
‘‘கத்திரிக்காய் முற்றியதும் தானாக கடைக்கு வரும்.’’  
‘‘அது வரும்போது வரட்டும்… இணைப்பு விஷயத்தில் தினகரன் தரப்பைச் சரி கட்டும் அதேநேரம் எடப்பாடியை எப்படி வழிக்குக் கொண்டுவருவார்கள்?’’
‘‘அது சுவிஸ் வங்கி விவகாரம். ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க-வின் பணப் பரிமாற்றங்களைக் கச்சிதமாகச் செய்து வந்தது, ‘முழுமுதலான’ ஒரு எண்டர்பிரைஸஸ் நிறுவனம்தானாம். ரியல் எஸ்டேட் துறையில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்ற இந்த நிறுவனத்தின் முதலீடு, அ.தி.மு.க தலைமையிலிருந்து வழங்கப்பட்டது என்று அப்போதே பேச்சுக்கள் கிளம்பின. இந்த நிறுவனத்தின் மூலம் அ.தி.மு.க-வுக்குச் சொந்தமான பெரும் நிதி, பல இடங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். சசிகலாதான் அறிமுகப்படுத்தினார் என்று கூறப்பட்டாலும் ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையாக மாறிப்போன இந்த நிறுவனம், அவருக்குப் பெரும் உதவியாக இருந்துள்ளது. சசிகலாவை வெளியேற்றிய காலத்தில், இந்த நிறுவனத்துடனான கொடுக்கல், வாங்கலை அமைச்சரவையில் முக்கியமாக இடம்பெற்றிருந்த ‘நால்வர் அணி’தான் கவனித்தது என்கிறார்கள்.’’
“யாரந்த நால்வர்?’’
‘‘ம்… சொல்கிறேன். இன்றைக்கு இருக்கும் முக்கிய மான அமைச்சர், முக்கியமற்று இருக்கும் அமைச்சர், உட்கட்சி மோதலால் தோற்கடிக்கப்பட்ட சோழநாட்டுப் பிரதிநிதி, ஜெயலலிதாவால் கடந்த தேர்தலின்போது ‘ஷாக்’ கொடுக்கப்பட்ட திண்டுக்கல்காரர் ஆகியோர்தான். இவர்களால் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் கோடிகள் பற்றிய தகவல்கள் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளதாம். இதையெல்லாம் வைத்து எடப்பாடி தரப்பையும் இதற்குள் இழுப்பதுதான், பி.ஜே.பி-யின் பிளான். ஏற்கெனவே, எடப்பாடி மீது நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பான  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் சுவிஸ் வங்கி கணக்கின் பட்டியல் என்று எதையாவது வெளியிட்டால் தனக்கும் சிக்கலாகும் என்று நினைக்கிறதாம் முதல்வர் தரப்பு. இப்படி நினைக்கவேண்டும் என்பதுதான் மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் பிளான்!’’
‘‘இணைப்பு என்று கிளப்புகிறார்களே…’’
‘‘இணைப்பு குறித்து தங்க.தமிழ்ச்செல்வன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லையாம். அ.தி.மு.க-வுடன் இணைப்பு நடந்தால், ‘அது, தான் முதல்வராக வந்தால் மட்டுமே நடக்கும்’ என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார் தினகரன்.’’
‘‘அ.தி.மு.க மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தில் ஏதாவது பேசினார்களா?’’
‘‘தேர்தல் குறித்துப் பேசுவதற்கான கூட்டம் என்றார்கள். அதோடு அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. அதையும் நடத்த வேண்டியுள்ளது. அதைப் பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.’’
‘‘ஸ்டாலின் டெல்லி விசிட் பற்றி?’’
‘‘கூட்டணி உறுதி. சீட் எண்ணிக்கை உறுதியாக வில்லை. பத்து தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், ஒற்றை இலக்க எண்ணில்தான் ஒதுக்க முடியும் என்று தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டணி கட்சிகள் பலருக்கும் சீட் வழங்க வேண்டும் என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். சோனியா சந்திப்புக்குப் பிறகு சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் இருவரையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் ஸ்டாலின்… அதற்கு ஏற்பாடு செய்தது, கனிமொழி.’’

‘‘சென்னைக்கு சோனியா வருகிறாரே?’’
‘‘ஓராண்டாக மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால் வெளிநிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. அவருக்குப் பலமான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் சொல்லியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நூறு பேருக்குத்தான், தி.மு.க தலைமை அழைப்பிதழ் கொடுத்துள்ளதாம். இதில் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் அப்செட்டில்தான் உள்ளனர்.’’
‘‘நீர் சொன்னதைப் போலவே, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்து விட்டாரே?’’ என்று நாம் சொன்னதற்கு, “அவர் மட்டுமா பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான சுர்ஜித் பல்லாவும் ராஜினாமா செய்திருக்கிறார்”என்ற வேகமாகப் பறந்தார் கழுகார்.

%d bloggers like this: