தி.மு.க-வுக்குத் தாவுகிறாரா செந்தில்பாலாஜி? – பரபரக்கும் கரூர் அரசியல்!

.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவப் போகிறார் செந்தில்பாலாஜி’ என்பதுதான் இப்போது கரூர் பரபரப்பு. டிசம்பர் 9-ம் தேதி இரவு தன் ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட, விவகாரம் விறுவிறுப்பாகிறது.

 

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார் செந்தில் பாலாஜி. முன்னாள் அமைச்சரான இவர், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்நிலையில், ‘அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மறுபடியும் எம்.எல்.ஏ ஆகியே தீருவது’ என்று தொகுதியில் பம்பரமாகச் சுற்றி வருகிறார் செந்தில்பாலாஜி. அவரின் அரசியல் எதிரியான போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, ‘இந்த முறை செந்தில்பாலாஜியை ஜெயிக்க விடக் கூடாது’ என்ற முனைப்பில் இருக்கிறது. இந்நிலையில்தான், ‘செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குத் தாவப்போகிறார்’ எனத் தகவல் பரவி, கரூர் அரசியலைச் சூடாக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். “சில சம்பவங்களைக் கூர்ந்து பார்த்தால், அவர் கட்சி மாறுவது உறுதி எனத் தெரிகிறது. சமீபத்தில் திருச்சியில் அன்பில் மகேஷும் செந்தில்பாலாஜியும் சந்தித்துப் பேசியதாகச் சொல்கிறார்கள். எல்லா விஷயங்களையும் ஆடம்பரமாகப் பண்ணும் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க சார்பில் சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவு ஊர்வலத்தில்கூட பங்கேற்கவில்லை. ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டுக்கான காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பார். இந்த வருடம் அதுவும் தரவில்லை. ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையிலும் ஜெயலலிதா நினைவு நாள் விளம்பரம் கொடுக்கவில்லை. கடந்த 9-ம் தேதி மாலை ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள  அலுவலகத்தில் தன் ஆதரவாளர்களுடன், ‘டி.டி.வி.தினகரன் எதிர்பாராத முடிவை அறிவித்தால் நாம் என்ன முடிவெடுப்பது?’ எனப் பேசியிருக்கிறார். அதனால், அவர் கட்சி மாறுவது உறுதி’’ என்றார்கள்.
அ.ம.மு.க தரப்பில், “கரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க-வைச் சிறப்பாக வளர்த்து வெச்சுருந்தார். ஆனா, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கத் தீர்ப்புக்குப் பிறகு, எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. சோர்ந்துபோன அ.ம.மு.க-வினர் பலர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்து வருகிறார்கள். இப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் கட்சியை வலுவாக்கிவருகிறார். இந்தச் சூழலில், அ.ம.மு.க., அ.தி.மு.க இணைப்பும் முக்கிய அஜெண்டாவாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இணைந்தால், எம்.ஆர்.விஜய பாஸ்கரை மீறி செந்தில்பாலாஜியால் கரூரில் அரசியல் செய்யவே முடியாது. எனவே, தி.மு.க-வுக்கே செல்லலாம் என நினைக்கிறார். முன்னாள் அமைச்சரும் தி.மு.க-வின் விவசாய அணி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி மூலமாகவே பேச்சுவார்த்தை நடக்கிறதாம்” என்றனர்.
தி.மு.க-வினரோ, “கரூர் மாவட்ட தி.மு.க-வைப் பலமாக வைத்திருந்தது கே.சி.பழனிச்சாமிதான். ஆனால், அவருக்கு வியாபாரத்தில் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம். கிட்டத்தட்ட அவர் அரசியல் துறவறம் பூண்டு விட்டார். தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக இருக்கும் நன்னியூர் ராஜேந்திரனால் பணரீதியாகவோ, சமுதாய ரீதியாகவோ சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால், செந்தில்பாலாஜி மாதிரியான ஆள் வந்தால் நல்லது என்றும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி நினைக்கிறார். தன் ஆதரவாளர்களிடமும், ‘செந்தில்பாலாஜிக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறாராம்” என்றார்கள்.
இதுபற்றி, செந்தில்பாலாஜியைச் சந்தித்துப் பேச முயன்றோம். ஆனால், அவர் மௌனத்தையே பதிலாகத் தந்தார். அவரின் ஆதரவாளர்களோ, “அவர் தி.மு.க-வுக்கு செல்லமாட்டார். இந்த வதந்தியைக் கிளப்பியதே அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பும் கரூர் மாவட்ட தி.மு.க-வின் ஒரு பிரிவினரும்தான். அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி தொகுதி வேலைகளைப் பக்காவாகச் செய்து கொண்டிருக்கிறார். இது அ.தி.மு.க தரப்புக்குக் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் கிளப்பிவிடுகிறார்கள்” என்றார்கள்.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் கேட்டால், “அரசியல் நாடகம் நடத்துவதில் செந்தில்பாலாஜி கைதேர்ந்தவர். இது, அவரே கிளப்பிவிட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க-வுக்குத்தான் செல்வாக்கு. அ.ம.மு.க-வைச் சேர்ந்த பலரையும் அண்ணன் இழுத்து வருகிறார். அந்தப் பதற்றத்தில்தான் இப்படி, அவரே செய்தி பரப்பியிருக்கிறார்’’ என்றார்கள்.
சின்னச்சாமியிடம் பேசினோம். “நானும் இந்த விஷயத்தை பேப்பரில் பார்த்துத்தான் தெரிஞ்சுகிட்டேன். எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.
தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பிலோ, “அப்படி செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு வருவது பற்றிக் கட்சித் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். வந்தால் மாவட்டக் கழகம் சார்பாக வரவேற்கத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
செந்தில்பாலாஜி மௌனம் கலைத்தால்தான் பரபரப்புகள் அடங்கும்!

%d bloggers like this: