புண்ணியம் மிகுந்த புனர்பூசம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

லகையே தன் புன்னகையாலும், தியாகத்தாலும், சத்தியத்தாலும் தன் வசப்படுத்திய ஸ்ரீராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், ஒழுக்கசீலர்களாகத் திகழ்வீர்கள். 

நட்சத்திர மாலை, ‘நெய்யொடு பால் விரும்பும், நிரம்பிய கல்வி கற்கும், பொய்யுரையொன்றுஞ் சொல்லான், புனர்பூச நாளினானே…’ என்கிறது. அதாவது பால், மோர், நெய் ஆகியவற்றை விரும்பி உண்பவர்களாகவும் எப்போதும் உண்மையே பேசுபவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பொருள். ‘தாந்தஸுகி…’ என்று தொடங்கும் பிருகத்ஜாதகப் பாடல், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடலைப் பாதுகாப்பவராகவும் சாத்வீகக் குணம் உடையவராகவும் இருப்பார்கள் என்கிறது.

ஜாதக அலங்காரம், ‘திருந்திய சொல் சாதுர்யன்… விசால புயன், சிக்கனத்தான், பரிந்தருண புத்திமான், பொய் சொல்லான், பித்தமுளன், பலருக்கு நேயன்…’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்தமாகப் பேசுபவர்கள்; பருத்தத் தோள்களை உடையவர்கள்; அதிக தூரம் நடப்பவர்கள் என்று பகர்கிறது.

தனகாரகன், புத்திகாரகன், புத்திரக்காரகன், வேதவித்தகன் என்றெல்லாம் அழைக்கப்படும் குருவின் சாரம் பெற்றுள்ளது இந்த நட்சத்திரம். இதில் பிறந்த நீங்கள், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வீர்கள். உங்களிடம் தெய்விகம் நிறைந்திருக்கும். இரக்கக் குணம் கொண்டிருப்பீர்கள். ஆனால், எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உலகமே மாறினாலும் நீங்கள் மாறமாட்டீர்கள். தன்மானச் சிங்கங்கள். இலவசமாக எதையும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். பட்டினி கிடக்க நேர்ந்தாலும் சத்தியம் பிறழ மாட்டீர்கள்.

மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்துகொண்டே இருப்பீர்கள். ஆனால், செய்த உதவியை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள். அன்னதானம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள் நீங்கள். வாக்கு சாதுர்யத்தால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே நல்லவரா, கெட்டவரா, அவருடைய நோக்கம் ஆகியவற்றை எடைபோட்டுவிடும் ஆற்றல்மிக்கவர்கள் நீங்கள்.

முதல் மூன்று பாதம் மிதுன ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் வரும். கடக ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் உயரமாகவும் நண்டைப் போல் வேகமாக ஓடுபவர்களாகவும் இருப்பார்கள்; திட்டமிட்ட செயல்களை தக்கநேரத்தில் செய்து முடித்துவிடுவார்கள். மற்றவர்களை நம்பவே மாட்டார்கள். ஆதலால் எல்லாவற்றையும் தாங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையுடன் கம்பீரமாக வாழ்வார்கள். பித்த சரீரமாக இருப்பதால், எப்போதும் உடல்நலத்தில் ஏதாவது சின்னஞ்சிறு குறைகள் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு, சிறு வயதில் முடக்கு வாதம் ஏற்பட்டு பின் சரியாகும். நீங்கள், உழைப்பதற்குச் சலிப்பவர்கள் அல்லர். ஆகவே ஓய்வாக உட்காராமல் சுறுசுறுப்புடன் எதையாவது செய்துகொண்டே இருப்பீர்கள். சிக்கனமானவர்கள். தேவை ஏற்பட்டால் செலவு செய்யத் தயங்கமாட்டீர்கள். மனைவி, மக்களின் உணர்வுகளையும் ஆசைகளையும் அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்வீர்கள்.

சிந்தனா சக்தி அதிகம் கொண்டவர்கள் நீங்கள். சிலர், மக்களுக்குப் பயன்படும் சாதனங்களைக் கண்டுபிடிப்பார்கள். தாமஸ் ஆல்வா எடிசன், மைக்கேல் ஃபாரடே இருவரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். 

நீங்கள், பெண் குழந்தைகள், பெண் தெய்வங்களை அதிகம் விரும்புவீர்கள். கூட்டத்தில் இருந்தாலும் உங்களின் மனம் தனியாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும். வலியச் சென்று யாரிடமும் பேசமாட்டீர்கள். பொதுவாக மௌனமாகவே இருப்பீர்கள். அதனால் அவ்வப்போது சித்தரைப் போல் தனிமையை விரும்புவீர்கள். பெற்றோருக்காகவும் உடன்பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வீர்கள்.

ஏட்டறிவு, எழுத்தறிவு ஆகியவற்றைக் காட்டிலும் அனுபவ அறிவு உங்களிடம் அதிகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களைவிட, தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் உங்களில் அதிகம்பேர். தெரியாது என்று கூறாமல், எந்த வேலையையும் முழு கவனத்துடன் கற்றுக்கொண்டு செய்து முடித்துவிடுவீர்கள். 37 வயதிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வீர்கள்.

முதல் பாதம் (குரு + புதன் + செவ்வாய்)

முதற் பாதத்துக்கு அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்களுக்குச் சற்றே சிவந்த, உள்ளடங்கிய கண்கள் இருக்கும். உண்மைக்காகப் போராடுவார்கள். பூர்வீகச் சொத்தை அடைவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். தந்தை வழி உறவினர்களால் மதிக்கப்படுவார்கள். உறவினர்களை ஒருங்கிணைத்துக் கொள்வார்கள். சகோதரர்களுக்காக எதையும் விட்டுக்கொடுப்பார்கள்.

கல்வியில் ஆர்வம் இருக்கும். ஆசிரியரை மிகவும் நேசிப்பார்கள். சிறு வயதில் இரு சக்கர வாகனத்தால் காலில் காயங்கள் உண்டாகும். சளி, வயிற்றுக்கோளாறு ஆகியவற்றால் பள்ளிப் பருவத்தில் சிரமப்படுவார்கள். தயிர், பழம் ஆகியவற்றை விரும்பி உண்பார்கள். நாட்டைப் பற்றி ஒரேயடியாகக் கவலைப்படமாட்டார்கள் என்றாலும் அவ்வப்போது ஆர்வம் காட்டுவார்கள்.

தாய்ப் பாசம் அதிகம் இருக்கும், ஆதலால் அவரின் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். பல், கண், குழந்தை நலம் ஆகிய மருத்துவத் துறையிலும், மண்ணியல், புவியியல், தாவரவியல், சட்டம் ஆகிய ஏதாவது ஒன்றிலும் கல்வி அமையும். தனிமையை விரும்பாமல், எப்போதும் கூட்டத்தில் இருக்கவே விரும்புவார்கள். புராணக்கதைகளை விரும்பி கேட்பார்கள். குடும்பத்தை இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். 28 வயது முதல் இவர்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

பரிகாரம்: விருத்தாசலம் அருகில் மணவாள நல்லூரில் வீற்றிருக்கும் ஸ்ரீகொளஞ்சியப்பரை உத்திர நட்சத்திர நாளில் வணங்கி வருவது நலம்.

இரண்டாம் பாதம் (குரு + புதன் + சுக்கிரன்)

தில் பிறந்தவர்கள் பரந்த மனது உடையவர்கள். புன்னகை பூத்த முகத்துடன் எப்போதும் தோற்றமளிப்பார்கள். ஆடை, அலங்காரம், வாசனைத் திரவியங்களை விரும்புவார்கள். உணவை ரசித்து, ருசித்து உண்பார்கள். உயர் ரக வாகனங்களின்மீது கொள்ளைப்பிரியம் வைத்திருப்பார்கள்.

எதிரியிடமும் கைகுலுக்கத் தயங்கமாட்டார்கள், ஆதலால் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். இனிப்பு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் விளையாட்டு, கலைப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பதக்கமும் பெறுவார்கள். ஆடிட்டிங், மானேஜ்மென்ட், அனிமேஷன், கலை ஆகியவற்றில்  ஏதாவது ஒன்றில் தனி முத்திரை பதிப்பார்கள். இவர்கள் வாழ்க்கை சீராகச் செல்லும் என்றாலும், இவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கவலைப்படுவார்கள்.

சொத்துக்காகவோ, இழந்த பணத்துக்காகவோ நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் வரும். வேற்று மொழி நபர்கள், வேற்று மதத்தினர் இவர்களுக்கு ஆதரவு தருவார்கள். மனைவி, மக்களை மிகவும் நேசிப்பார்கள். சிலர், தங்கள் பிள்ளைகளை அயல்நாட்டில் கல்வி கற்கவைப்பார்கள். 30 வயது முதல் முன்னேறுவார்கள்.

பரிகாரம்
திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானை பூச நட்சத்திர நாளில் வணங்கி வருவதால் நலம் உண்டகும்.

மூன்றாம் பாதம் (குரு + புதன் + புதன்)

தில் பிறந்தவர்கள், பார்த்தால் பூனை பாய்ந்தால் புலியாக இருப்பார்கள். கதை, நாவல், துணுக்கு, கவிதைகளை விரும்பிப் படிப்பார்கள். பலவற்றை ஒப்பிட்டு ஆராய்வார்கள். இவர்களிடம் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் எப்போதும் காத்திருக்கும். இவர்களுக்குள் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும். இயற்கையின் ஆற்றலை உணரும் சக்தி இருக்கும். சுயநலக்காரர்கள், குறுகிய புத்தி உடையவர்களை இவர்கள் தவிர்ப்பது நல்லது.

உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் இருப்பார்கள். உடலநலனைப் பேணுவது அவசியம். எல்லோருக்கும் அறிவுரை கூறும் இவர்கள், தங்கள் விஷயத்தில் அதைக் கடைப்பிடிக்கமாட்டார்கள். அலட்சியமாக இருப்பார்கள்.

கற்ற கல்விக்கு சம்பந்தமில்லாத வேலையில் சேர்வார்கள். போதுமான அளவுக்கு மேலேயே செல்வம் சேரும். ஆனால் கூடாநட்பால் சேமிப்பு கரையும். மனைவி, பிள்ளைகள் மீது நீங்கா பாசம் வைத்திருப்பார்கள். ஆனாலும் அவர்களைப் பிரிந்து சில காலம் அயல்நாட்டில் வசிக்க வேண்டிவரும். 32 வயது முதல் புதிய பாதை தெரிந்தாலும் 41 வயதிலிருந்துதான் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம் மதுரை ஸ்ரீசொக்கநாதர், மீனாட்சியம்மையை புதன்கிழமையில் வணங்கி வழிபடுவதால் சிறப்பு உண்டு.

நான்காம் பாதம் (குரு + புதன் + சந்திரன்)

ந்தப் பாதத்துக்கு அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் இயற்கையை அதிகம் நேசிப்பார்கள். ஆகவே அதில் லயித்துவிடுவார்கள். தடாகம், கானகம், நந்தவனம் போன்ற இடங்களுக்குச் சென்றால் திரும்பிவரவே மனமிருக்காது. கவிதை, காவியங்களை இயற்றவும் செய்வார்கள்; விமர்சனமும் செய்வார்கள். கலா ரசிகர்கள். குழந்தை மனம் இவர்களுக்கு, ஆதலால் வெளுத்ததெல்லாம் பால்தான். வட்டமான முகமும், சுழன்று வட்டமடிக்கும் கண்களும் உள்ளவர்கள். காண்பவர்களை சுண்டியிழுப்பார்கள். சற்று குள்ளமான உருவம் கொண்டவர்கள் என்றாலும், உயரமானவர்களைவிட வேகமான நடையைப் பெற்றிருப்பார்கள்.

தெய்வ பக்தி மிகுந்தவர்கள். பாத யாத்திரை செல்லும் பக்த கோடிகளுக்காக அன்னம், தண்ணீர் ஆகியவற்றை அளிப்பார்கள். தங்குமிடம் அமைப்பார்கள். மற்றவர்களை மதிக்கும் இவர்கள், மதியாதார் தலைவாசலை மிதிக்கவும் மாட்டார்கள்.

குடும்பத்தினர் மீது தீராத பாசம் கொண்டு, அவர்களுடைய வருங்காலத்துக்காக சொத்து சேர்ப்பார்கள். அரசாங்கத்தில் பெரிய பதவி வகிப்பார்கள். சிலர், கடல் கடந்து வியாபாரம் செய்ய வாய்ப்பு உண்டு. 33 வயதிலிருந்து அசுர வளர்ச்சி இருக்கும்.

பரிகாரம்
கர்நாடக மாநிலம், கொல்லூரில் அருள்பாலிக்கும் அன்னை மூகாம்பிகையை, திங்கள்கிழமையில் வணங்கி வழிபடுவதால் விசேஷ பலன்கள் உண்டாகும்.

‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்


புனர்பூச  நட்சத்திரத்தில்…

சீமந்தம், கிரகப்பிரவேசம், புதிய ஆபரணம் வாங்குதல் – அணிதல், பூ முடித்தல், விவாகம், பெயர் சூட்டுதல், பந்தக்கால் நடுதல், வியாபாரம் தொடங்குதல், வியாதியஸ்தர்கள் மருந்துண்ணல், யாத்திரை செல்லுதல், மாடு வாங்குதல், ஊஞ்சல் இடுதல், ஆயுதப் பயிற்சி, வாகனங்கள் வாங்க – சவாரி செய்ய, அதிகாரப் பதவிகளை ஏற்றுக்கொள்ள, வேதசாஸ்திரம் கற்க ஆகியவற்றை புனர்பூசத்தில் தொடங்கினாலோ, தொடர்ந்தாலோ நல்ல பலனும் வெற்றியும் கிட்டும்.

பரிகார ஹோம மந்திரம்

புனர்நோ தேவ்யதிதி: ஸ்ப்ருணோது புனர்வஸூந: புனரேதாம் யஜ்ஞம்
புனர்நோ தேவா அபியந்து ஸர்வே புன: புனர்வோ ஹவிஷா யஜாம:
ஏவா ந தேவ்யதிதிரனர்வா விச்வஸ்ய பர்த்ரீ ஜகத: ப்ரதிஷ்ட்டா புனர்வஸூ ஹவிஷா வர்த்தயந்தீ ப்ரியந் தேவானாமப்யேது பாத:


நட்சத்திர தேவதை: புனர்வசுதேவி எனும் பெயருடைய அதிதி.

வடிவம்    : ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட வில் வடிவ நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள்    : கே, கோ, ஹ, ஹி.

ஆளும் உறுப்புகள்    :
1, 2, 3-ம் பாதங்கள் – காது, தொண்டை, தோள், மார்பு. 4-ம் பாதம் – நுரையீரல், மார்பு, வயிறு, கல்லீரல்.

பார்வை    : சமநோக்கு.

பாகை    :
80.00 – 93.20

நிறம்    : மஞ்சள்.

இருப்பிடம்    : பட்டினம்.

கணம்    : தேவ கணம்.

குணம்    : சாத்விகம்.

பறவை    : அன்னம்.

மிருகம்    : பெண் பூனை.

மரம்    : பாலில்லாத மூங்கில் மரம்.

மலர்    : மல்லிகை.

நாடி    : தட்சிண பார்சுவ நாடி.

ஆகுதி    : தேன், நெய்.

பஞ்சபூதம்    : நீர்.

நைவேத்யம்    :
வெல்ல சாதம்.

தெய்வம்    : ஸ்ரீராமபிரான்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸீதா வல்லபாய தீமஹி
தன்னோ ராம: ப்ரசோதயாத்

அதிர்ஷ்ட எண்கள்    :
1, 3, 7.

அதிர்ஷ்ட நிறங்கள்    : பொன்னிறம், ஆரஞ்சு.

அதிர்ஷ்ட திசை        : வடக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள்:  வியாழன், ஞாயிறு.

அதிர்ஷ்ட ரத்தினம்    : கனக புஷ்பராகம்.

அதிர்ஷ்ட உலோகம்    : தங்கம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

ஸ்ரீராமன், வசிஷ்ட மகரிஷி, ஸ்ரீமுதலியாண்டார், ஸ்ரீஎம்பெருமாள், குலசேகராழ்வார்.

%d bloggers like this: