அதிக உணவுக் கட்டுப்பாட்டால் உடல் எடை அதிகரிக்கும்’ – அச்சுறுத்தும் ஆய்வு

மெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் நடந்த ஒரு ஆய்வில், உணவுக் கட்டுப்பாட்டில் அதிக ஆர்வமாக இருப்பவர்களுக்கு, அளவுக்கதிகமாக சாப்பிடும் ‘உணவு சார்ந்த ஒழுங்கின்மைப் பிரச்னை’ (Binge-eating Disoder) யும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், அவர்களின் உடல் எடை (Obesity) அதிகரிக்கிறது என்றும், மனநலம், உடல்நலம் சார்ந்த சில பாதிப்புகளும் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உணவு ஒழுங்கின்மை சார்ந்து செயல்படும் சர்வதேச பத்திரிகை (International Journal of Eating Disorders) என்ற தளத்தில், இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், மொத்தம் 1,250 பேர் பங்குபெற்றனர். அவர்களில், ஆரோக்கியமான எடையுள்ளவர்கள், உணவு சார்ந்த ஒழுங்கின்மைப் பிரச்னை (Binge-eating Disoder) மற்றும் உடல் பருமன் உடையவர்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு  ஆய்வு நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு அவர்களின் உணவு முறை ஒரு வருடத்துக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.  இதில், உணவு சார்ந்த ஒழுங்கின்மைப் பிரச்னை மற்றும் உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள், தங்களின் உணவு அளவைக் குறைத்தும், சில நேரங்களில் உணவையே தவிர்த்தும் உள்ளனர். குறிப்பாக, ஆரோக்கியமான எடையுள்ளவர்களைவிடவும் இவர்கள் குறைவான அளவே சாப்பிட்டுள்ளனர். 

இதுகுறித்து ஆய்வாளர்களில் ஒருவரான ஜானட் கூறும்போது, “சுய உணவுக் கட்டுப்பாடு உடையவர்கள், அதிக அளவு சாப்பிடுவார்கள் என்பது மட்டுமே இதுவரை நம்பப்பட்டு வந்த உண்மை. அவர்களைப்போலவே, உணவு முறையில் மிகக் கவனமாக இருப்பவர்களும்கூட அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.இப்படி அதிகமாகச் சாப்பிடும் பழக்கமே, காலப்போக்கில் உணவு சார்ந்த ஒழுங்கின்மைப் பிரச்னைக்கு வழிவகுக்கும். அந்த ஒழுங்கின்மை அதிகரிக்கும்போது, உடல் பருமன் ஏற்படக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

%d bloggers like this: