எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு? – தி.மு.க எடுத்த சர்வே

நாடாளுமன்றத் தேர்தல்குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். தி.மு.க. கூட்டணியில் போட்டியிட உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகுறித்த பேச்சுக்களும் நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியலை ஜெயலலிதாவைப் போல முதலில் வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாகக் கூறியிருக்கிறார். கூடவே, எந்தெந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் இடம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகனை களமிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். 

இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் தலா ஒரு சீட்டை வழங்கும் எண்ணத்தில் உள்ளது தி.மு.க தலைமை. இதில், கடந்த காலங்களைப் போல 2 தொகுதிகளையாவது கேட்டுப் பெறும் முடிவில் அவர்கள் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், தி.மு.க கூட்டணியில் இணைந்தால், காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஒரு தொகுதியை கமலுக்குக் கொடுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். ம.தி.மு.க -வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம், முதற்கட்ட நேர்காணல் ரகசியமாக நடந்துள்ளது. போட்டியிட விரும்புவர்களுக்குத் தொகுதியில் உள்ள செல்வாக்கு குறித்து ரகசிய சர்வேயும் நடத்தப்பட்டுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக ஒரு பொதுத்தேர்தலை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சந்திக்க உள்ளது. இதனால் ஸ்டாலின் தனித்துவத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் உள்ளதால், 40-க்கு 40 என்ற வெற்றிக் கணக்கில் கூட்டணிக்கான கூட்டல் கழித்தல் கணக்கை போட்டுவருகிறார். டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ. ராசா போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி-க்களில் சிலருக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கொங்கு ஈஸ்வரனுக்கு பொள்ளாச்சியைக் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். தி.மு.க கூட்டணியில் சரத்குமாரின் ச.ம.க-வும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. 

வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, தூத்துக்குடி உட்பட்ட சில தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுவது முடிவாகிவிட்டதாம். காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய தொகுதிகள் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ளதாம். திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

%d bloggers like this: