ஒரே இரவில் ஸ்டாலினால் சாதிக்க முடிந்தது!’ – சசிகலாவிடம் ஆதங்கப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள்

இப்படித்தான், `கர்நாடகாவில் ஒரு ஜட்ஜ்மெண்ட்’ எனச் சொல்லி, கவர்னர்கிட்ட எங்களை மனு கொடுக்க வைத்தீர்கள். ஒவ்வொரு தடவையும் ஜட்ஜ்மெண்ட் உதாரணங்களைச் சொல்கிறீர்கள். ஒரு வழக்கிலாவது ஜெயித்துக் காட்டியிருக்கிறீர்களா..’ எனக் கோபப்பட்டார் அந்த நிர்வாகி.
நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக வைத்துச் செயல்படத் தொடங்கியுள்ளனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள். `இடைத்தேர்தலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. டெல்லியில் நமக்கான செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், பத்து எம்.பி தொகுதிகளை இலக்காக வைத்து முன்னேறுவோம்’ என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர் அக்கட்சி நிர்வாகிகள்.

 

மத்தியில் பா.ஜ.க ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள கட்சிகளுடன் தேசியக் கட்சிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டன. பீகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துவிட்டார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. தமிழகத்தில் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க, வி.சி.க, முஸ்லிம் லீக், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அணி சேர்ந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ` தி.மு.க-வில் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை’ எனக் கூறினார். தேர்தல் நெருங்குவதற்குள் தொகுதிப்பங்கீட்டில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக, சில கட்சிகள் அ.தி.மு.க-வுக்குள் வந்து சேரலாம் எனவும் அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், தினகரனின் அ.ம.மு.க நிர்வாகிகளோ, ` 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என நம்புகிறார் தினகரன். இதை தகுதிநீக்கத்துக்கு ஆளானவர்கள் யாரும் ரசிக்கவில்லை. எம்.பி தேர்தலை இலக்காக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் சசிகலாவிடம் சில நிர்வாகிகள், தன்னிச்சையாகப் பேசியதிலும் தினகரனுக்கு உடன்பாடில்லை எனவும் சொல்கின்றனர் அ.ம.மு.க-வினர்.  

அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “தினகரனின் தன்னிச்சையான செயல்பாடுகளால்தான், கரூரில் செந்தில் பாலாஜியை இழக்க நேர்ந்தது. இப்போதும் அ.தி.மு.க-வில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சசிகலா மீதான விசுவாசம் காரணமாகத்தான் இன்றளவும் அ.ம.மு.க-வில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முந்தைய காலங்களில், `சின்னம்மாவை சந்திக்க வேண்டும்’ என நாங்கள் வேண்டுகோள் வைத்தபோது, அதையெல்லாம் தினகரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சந்திப்புக்கான அனுமதியே வழங்கப்படவில்லை. தீர்ப்புக்குப் பிறகு, வேறு கட்சிகளுக்குச் சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தார். செந்தில் பாலாஜி சென்ற பிறகு, கடந்த 17-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய தகுதிநீக்கத்துக்கு ஆளான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், `இடைத்தேர்தலில் எங்களைப் போட்டியிடச் சொல்கிறார் டி.டி.வி. எங்களால் நிச்சயமாக போட்டியிட முடியாது. அப்படிப் போட்டியிட்டாலும்கூட, எங்களின் மனுவைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள். இதற்காக மறுபடியும் நீதிமன்றம் சென்று போராட முடியாது’ எனக் கூறியிருக்கிறார்.  

இதற்குப் பதில் சொன்ன தினகரன், ` நாம் போட்டியிடலாம். இதேபோல் ஆந்திராவிலும் ஒரு வழக்கு..’ எனத் தொடங்க, கடுப்பான அந்த நிர்வாகி, ` அடப்போங்க. இந்த மாதிரி `ஒரு வழக்கு.. ஒரு வழக்கு’ என சொல்லிச் சொல்லியே தான் 18 பேர் வாழ்க்கையும் வீதிக்கு வந்து நிற்குது. இப்படித்தான், `கர்நாடகாவில் ஒரு ஜட்ஜ்மெண்ட்’ எனச் சொல்லி, கவர்னர்கிட்ட எங்களை மனு கொடுக்க வைத்தீர்கள். ஒவ்வொரு தடவையும் ஜட்ஜ்மெண்ட் உதாரணங்களைச் சொல்கிறீர்கள். ஒரு வழக்கிலாவது ஜெயித்துக் காட்டியிருக்கிறீர்களா..’ எனக் கோபப்பட்டார். இதனால் கொதித்துப் போன தினகரன், அந்த அறையை விட்டு வெளியில் போய் நின்றுகொண்டார். இதன்பிறகு தொடர்ந்து பேசிய அந்த நிர்வாகி, ` இவர் பணமும் கொடுக்க மாட்டார். எதிர்த்துப் போட்டியிட்டால் வேட்புமனுவும் தள்ளுபடி ஆகிவிடும். இதுவரைக்கும் ஒரு வழக்காவது நாம் ஜெயிச்சிருக்கிறோமா சின்னம்மா. பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவைக் கையில் வைத்திருந்தபோது 15 நாள்களாக நம்மைப் பதவியேற்கவிடாமல் இழுத்தடித்தார்கள். அப்போதே நாம் நீதிமன்றத்துக்குப் போயிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டோம்.கருணாநிதி சமாதி விஷயத்தில் ஒரே இரவுக்குள் தீர்ப்பை வாங்கிக்கொண்டு வந்தார் ஸ்டாலின். அன்று பெரும்பான்மை பலம் நம் கையில் இருந்தது. எம்.பி-க்களும் நம்முடன் இருந்தார்கள். பல லட்சம் நிர்வாகிகளின் அபிடவிட்டும் கையில் இருந்தது. ஆனாலும், நம்மால் என்ன சாதிக்க முடிந்தது. நீதிமன்றத்தின் மூலமாக சாதிப்போம் என்பதையெல்லாம் ஏற்க முடியாது. அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. இன்னொரு விஷயம், இடைத்தேர்தலை நடத்துவார்கள் என்பதையும் ஏற்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலையே இத்தனை நாள்களாக இவர்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள். தினகரன் தான், `இடைத்தேர்தல் நடக்கும்’ எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

நம்முடைய இலக்கு எம்.பி தேர்தலை நோக்கி இருக்க வேண்டும். 10 தொகுதிகளை டார்கெட் செய்து உழைத்தால் போதும். சென்ட்ரலில் நமக்கு செல்வாக்கு வேண்டும்’ எனக் கூற, ` இதைப் பற்றி தினகரனிடம் பேசுகிறேன்’ எனக் கூறியிருக்கிறார் சசிகலா. அப்போது உள்ளே வந்த தினகரன், ` இன்னுமா நீங்கள் பேசி முடிக்கவில்லை’ எனக் கோபப்பட்டார். தினகரன் அருகில் இல்லாமல் சசிகலாவிடம் பேசக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அந்த நிர்வாகி, சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார் தினகரன்” என்றார் விரிவாக.

%d bloggers like this: