மருந்தாகும் உணவு – கொள்ளு தால் மக்னி

தினமும் உணவில் சேர்க்கவேண்டிய அளவுக்கு, மிகச் சிறந்த தானியம் கொள்ளு. ரசம், துவையல், சுண்டல், தால் எனச் செய்து சாப்பிடலாம். ரத்தம் உறைதல், சினைப்பை நீர்க்கட்டி, பித்தப்பைக் கல் பிரச்னைகளுக்கு கொள்ளு சிறந்த தீர்வு.

தேவையானவை:

கொள்ளு : அரை கப்

ராஜ்மா : 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் : ஒரு டீஸ்பூன்

தோல் நீக்கிக் கழுவி

நறுக்கிய இஞ்சி : ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் : 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய்    :
ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகம் : ஒரு டீஸ்பூன்

நறுக்கிய பூண்டு : 6 பல்

பெரிய வெங்காயம் : ஒன்று

பச்சை மிளகாய் : 2

தக்காளி :  ஒன்று

கரம் மசாலாத்தூள் : ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை :    சிறிது

உப்பு : தேவையான அளவு

செய்முறை: கொள்ளு, ராஜ்மா இரண்டையும் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சிறிது இஞ்சி, சிறிது உப்பு, ஒரு பச்சை மிளகாய் போட்டு 7 முதல் 8 விசில் வரும்வரை மிதமான தீயில் வேகவிடவும். குக்கரை  அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய்விட்டு உருகியதும், எண்ணெய் ஊற்றவும். இதில் சீரகம் போட்டுத் தாளித்து, மீதமுள்ள நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த கொள்ளு, ராஜ்மா இரண்டையும் சேர்த்துக் கிளறவும். கொள்ளு-ராஜ்மா வெந்த தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு (கொள்ளு, ராஜ்மா வேகும்போது உப்பு சேர்த்துள்ளோம் கவனம்) சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பலன்கள்: பொதுவாக இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை ஓர் உணவில் சேர்த்தால், அது அந்த உணவிலுள்ள முக்கியமான மற்ற பொருள்களின் தன்மையை அதிகரிக்கும். அந்த வகையில், இதில் கொள்ளின் தன்மை அதிகரிக்கப்படுகிறது. கொள்ளு, இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் என அனைத்துமே உடல் உஷ்ணத்தை அதிகரிப்பவை. அதற்காகத்தான் ரெசிபியில் குளிர்ச்சிமிக்க உணவுப்பொருளான ராஜ்மா மற்றும் வெண்ணெய் சேர்க்கப்பட்டிருக்கிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண் இருப்பவர்கள், அடிக்கடி புளித்த ஏப்பம்விடுபவர்கள், நெஞ்செரிச்சல், கண்ணெரிச்சல், வயிற்றுப் பகுதியில் எரிச்சல் உணர்வு, ஆசனவாயில் வலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், கொள்ளு சேர்த்த உணவைத் தவிர்த்துவிடவும்.

%d bloggers like this: