2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – தனுசு

தனுசு

ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும்.

பாதியில் நின்றுவிட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்பு ஏற்படும். அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.

12.2.19 வரை ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனம் தெரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். கண், காது, பல் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை, ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். தூக்கம் குறையும். கணவன் – மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.  
 
வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், அடிக்கடி பழைய கசப்பான நிகழ்ச்சிகளை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறான விமர்சனங் களை மறக்கப் பாருங்கள். படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர், கண் பரிசோதனை செய்ய வேண்டியது இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசவேண்டாம். வழக்குகளால் கவலை ஏற்பட்டு நீங்கும்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பது அவசியம். சிலருக்குத் தூக்கமின்மை, படபடப்பு, கனவுத்தொல்லை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும்.கும்பாபிஷேக வைபவங்களில்  கௌரவம் கிடைக்கும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு உங்கள் ராசியில் ஜன்ம குருவாகத் திகழ்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறு வந்து நீங்கும். உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.

வியாபாரிகளே! லாபம் சுமாராகத்தான் இருக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாள்களால் சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படக்கூடும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும், ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! அலுவலகப் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், ஜன்மச் சனி தொடர்வதால், மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு இருந்தபடி இருக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அவ்வப்போது தூக்கம், மறதி ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர அதிக செலவு செய்யவேண்டி வரும்.

கலைத்துறையினரே! உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடக்கும் உங்களின் படைப்பு வெளியாக முக்கியப் பிரமுகர்கள் உதவி செய்வார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மையை அளிப்பதுடன், அதன் மூலம் வெற்றபெற வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசரபேஸ்வரரை, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசித்து வழிபடுங்கள்; மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

%d bloggers like this: