2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – கும்பம்

கும்பம்

ங்கள் ராசிக்குப் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர் களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வருடம் பிறக்கும்போது, செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.
12.2.19 வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். ஆனால், ராகு 6-ல் இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது நிகழ்ச்சி களில் கௌரவிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

13.2.19 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ல் இருப்பதால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வருடம் முழுவதும் சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கவும், புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு, வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு ராசிக்கு 10-ல் இருப்பதால், அதிக வேலைகளால் உடல் அசதி உண்டாகும். மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கல்வியாளர் களின் நட்பால் தெளிவு அடைவீர்கள். அவர்கள் மூலம்  முன்னேற்றம் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு  இடமாற்றம் ஏற்படும்.

மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப்பிரிவில் சேர சிபாரிசு தேவைப்படும்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவம் மற்றும் சமயோசித அறிவால் பெரும் வெற்றிகளைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: கோவை மாவட்டம், வடவள்ளி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டு விநாயகரை, சதுர்த்தி திதி நாளில் தரிசித்து வழிபடுங்கள்; சங்கடங்கள் நீங்கும்.

%d bloggers like this: