2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – மிதுனம்

மிதுனம்

புது வருடம் பிறக்கும்போது ராசிக்கு 5-ல் சந்திரனும் சுக்கிரனும் இருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கிடைக்கும்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 10-ல் இருப்பதால் புதுப் பொறுப்பும் பதவியும் தேடி வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாய்வழி உறவுகளின் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

சூரியனும் ராசிநாதன் புதனும் 7-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்டநாள் பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். 

12.2.19 வரை ராசிக்கு 2-ல் ராகு மற்றும் 8-ல் கேது இருப்பதால், எதிலும் பிடிப்பற்ற போக்கு காணப்படும். பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வழக்குகளில் தீர்ப்பு தாமதமாகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், மற்றவர்களிடம் அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தி உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். 
 
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை ராசிக்கு 6-ல் குரு இருப்பதால், வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய ஃபைல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கவும் இருப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். தள்ளிப் போன திருமணம் கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள்.

வருடம் முழுவதும் சனி 7-ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பணப் பற்றாக்குறை இருந்தபடி இருக்கும்.

வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.  உங்களில் சிலர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருப்பவர்களின் உதவியுடன் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி – இறக்குமதி, காய்கறி, ஹார்ட்வேர்ஸ் வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் தொலை நோக்குச் சிந்தனைகள் பலராலும் பாராட்டப்படும். அதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். பதவி உயரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாறுதல் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கலை, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கலைத்துறையினரே! உங்கள் கலைத்திறன் வளரும். பாராட்டுகளுடன் பரிசுகளும் கிடைக்கும்; மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புது வருடம், உங்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.

பரிகாரம்:
கடலூர் மாவட்டம், நஞ்சைமகத்துவாழ்க்கை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாளியம்மனை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபடுங்கள்; வசதி வாய்ப்புகள் பெருகும்.

%d bloggers like this: