2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 3-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். ராசிக்கு 5-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பிரபலங்களின் தொடர்பு பயனுள்ளதாக அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர் களும் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதப்போக்கு மாறும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்.

12.2.19 வரை ராசிக்கு 6-ல் கேது இருப்பதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்வீர்கள். மகான்கள், ஆன்மிக அறிஞர்களின் சந்திப்பும் அவர்களுடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆனால், ராசிக்கு 12-ல் ராகு இருப்பதால், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கடந்த கால ஏமாற்றங்களை எண்ணி அடிக்கடி வருந்துவீர்கள்.
13.2.19 முதல் வருடம் முடியும் வரை, கேது 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உற்சாகமூட்ட முயற்சி செய்யவும். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், ராகு 11-ல் இருப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும். மக்களுக்குச் சேவை செய்வீர்கள்.
வருடம் முழுவதும் சனி 5-ல் இருப்பதால், அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளை களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் தாமதமாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டாம்.
ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்கும்போது வருடம் பிறப்பதால், உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 4-ல் இருப்பதால், வேலைச்சுமை இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 5-ல் அமர்ந்தும் திகழ்வதால், மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும். வருமானத்தை உயர்த்திக்கொள்ள புது வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில், இழந்த செல்வாக்கு திரும்பக் கிடைக்கும்.
வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிக்கவும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரிசி, மலர்கள், எலெக்ட்ரிகல்ஸ், வாகன உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! பிப்ரவரி 13-ம் தேதி முதல் ராகு சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதல் பணிகளை ஒப்படைப்பார்கள். சலித்துக் கொள்ளாமல் முடித்துக்கொடுப்பது நல்லது. உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு தள்ளிப்போகும். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! படிப்பில் முழுமையான கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பொறுப்பு உணர்ந்து படித்தால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.
மொத்தத்தில், இந்தப் புது வருடத்தின் தொடக்கம் அலைச்சலைத் தருவதாக அமைந்தாலும், ஜூன் – ஜூலை மாதம் முதல் முன்னேற்றம் மற்றும் ஆதாயம் தருவதாக அமையும்.
பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை, சஷ்டி திதி நாளில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

%d bloggers like this: