இரட்டை இலக்கத் தொகுதிகள்… இலையுடன் கூட்டணி! – பா.ம.க ‘பலே’ பார்முலா

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பா.ம.க., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட கட்சியுடனே கூட்டணி வியூகத்தை அமைக்க இருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இதற்கான ஆலோசனைகள் நடந்துவருகின்றன. விரைவில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை” என்கிறார்கள் பா.ம.க-வின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி – தே.மு.தி.க தலைமையிலான கூட்டணி, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று பா.ம.க களம் இறங்கியது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி மட்டுமே வெற்றிபெற்றார். சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட பா.ம.க வெற்றிபெறவில்லை. ஆனாலும், சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பா.ம.க பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பெற்ற

அனுபவத்தைக்கொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் களமிறங்கக் கூடாது என்ற முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அ.ம.மு.க-வுடன் கூட்டணி சேரலாம் என்று பா.ம.க தரப்பில் ஆலோசனை எழுந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் அப்போது நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், ‘நாம் கட்சி ஆரம்பித்து 30 ஆண்டுகளாகிவிட்டன. நமக்கென்று வாக்கு வங்கி இருப்பதை, கடந்த தேர்தல்களில் நிரூபித்துள்ளோம். தமிழக அரசியலில் சீனியராக இருக்கும் நாம், இப்போது ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை’ என்று ராமதாஸ் தெளிவாகச் சொல்லிவிட்டாராம். இதனால், அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்துதான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியிருக்கின்றன” என்றார்கள்.

பா.ம.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “அன்புமணி மாநிலம் முழுவதும் சென்று இளைஞர்கள், முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து பா.ம.க-வுக்கு ஆதரவு கேட்டுவருகிறார். பி.ஜே.பி தரப்பிலிருந்தும் எங்களிடம் கூட்டணிக்குப் பேசிவருகிறார்கள். ஆனால், இந்த முறை தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் நல்லது என்று கட்சித் தொண்டர்கள் நினைக்கிறார்கள். இதுதவிர, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி மூலம் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி பேசப்பட்டது. தி.மு.க தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பா.ம.க-வுக்கும் சில தொகுதிகள் பெறலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.  ஆனால், தி.மு.க – காங்கிரஸ் ‘கூட்டணிக்குள் கூட்டணி’ என்கிற முறையை ராமதாஸ் மறுத்துவிட்டார். இந்தச் சூழலில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க தரப்பிலிருந்து பா.ம.க-விடம் சிலர் பேசியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தைலாபுரத்துக்கு அழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், ‘தி.மு.க-வுடன் நேரடியாகக் கூட்டணி வைத்தால் நான்கு முதல் ஐந்து தொகுதிகளைப் பெறுவதே பெரிது. மேலும், தேர்தலின்போது அவர்கள் நமக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. கொங்கு மண்டலத்திலும் நாம் கணிசமான செல்வாக்குடன் உள்ளோம். அந்தியூர், பவானி சட்டமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டே தலா நாற்பதாயிரம்  வாக்குகள் வாங்கியுள்ளோம். அதனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால், பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க தரப்பு நாம் சொல்வதைக் கேட்கவும் செய்யும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, ஆளும் கட்சித் தரப்பினரும் பா.ம.க-வுடன் கூட்டணிக்குப் பேசிவருகிறார்கள். இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் பேசியவர்கள், “முதல்வருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனும், கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரும் பா.ம.க-வுடன் பேசிவருகிறார்கள். ‘நீங்கள் கூட்டணிக்கு வந்தால் வட மாவட்டங்களில் வலுவான வெற்றியைப் பெறலாம். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் தரத் தயாராக உள்ளோம். பி.ஜே.பி தரப்புடன் இப்போதுவரை கூட்டணி உறுதியாகவில்லை. தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம். பி.ஜே.பி-யுடன் கூட்டணி ஏற்பட்டாலும் உங்களுக்கான தொகுதி எண்ணிக்கையைக் குறைக்க மாட்டோம்’ என்று அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டுள்ளது” என்றார்கள்.
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோற்ற இடங்களில், அ.தி.மு.க-வுக்கும் நமக்கும் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை.  இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அ.தி.மு.க அணியே நமக்குச் சாதகமாக இருக்கும். தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, அ.தி.மு.க-வுடன் இணைவதே நல்லது” என்றும் பா.ம.க நிர்வாகிகள் சிலர் ராமதாஸிடம் சொல்லியுள்ளார்கள்.
கோவையில் கடந்த டிசம்பர் 27, 28 ஆகிய நாள்களில் நடந்த பொதுக் குழுவிலும் இதுகுறித்து ஆலோசிக்கப் பட்டது; ‘இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் எடுப்பார்’ என்கிறார்கள் பா.ம.க நிர்வாகிகள்.

%d bloggers like this: