புது அம்மாக்கள் கவனத்துக்கு!

பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா.

தாய் சாப்பிடும் உணவு


பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட சில உணவு களைச் சாப்பிட்டால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அம்மாக்கள் சாப்பிடும் உணவு செரித்த பின்னர், அதன் சத்துகள்தாம் தாய்ப்பாலின் மூலமாகக் குழந்தைக்குச் சென்றடையும் என்பதால், குழந்தையின் செரிமானத்துக் கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாலூட்டும் பெண்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். மலக்கட்டுப் பிரச்னையை ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட்ஸ், பிஸ்கட், பிரெட் போன்ற உணவுகளைப் பிரசவம் முடிந்த முதல் 15 நாள்களுக்குத் தவிர்த்துவிடுவது நல்லது. நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் அருந்துவது பால் சுரப்பைச் சீராக வைத்திருக்கும்.

பருத்தி உடை
தளர்வான பருத்தி ஆடைகளே பாலூட்டும் தாய்க்கு நல்லது. வேலைப்பாடுகள்கொண்ட ஆடைகள் குழந்தையைத் தூக்கும்போது, அதன் மென்மையான சருமத்தை உரசிப் பதம்பார்க்கும். ஃபீடிங் நைட்டி, வெளியே செல்லும்போது ஃபீடிங் குர்தி என அணிவது பாலூட்ட வசதியாக இருக்கும்.

குழந்தையுடன் சேர்ந்து உறங்கவும்
இரவெல்லாம் விழித்திருந்து குழந்தைக்குப் பாலூட்டுவது, தொட்டில் ஆட்டுவது, டயப்பர் மாற்றுவது போன்ற பொறுப்புகளால் தாயின் தூக்கம் பறிபோகும். உறக்கமின்மையால் கோபம், பசியின்மை போன்றவை ஏற்படும். அடுத்தகட்டமாக ஸ்ட்ரெஸ்கூட ஏற்படலாம் என்பதுடன், ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகப் பால் சுரப்பு குறையலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க, குழந்தை உறங்கும்போதெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தையை இப்படிக் கையாளவும்

குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையைத் தூக்குவதை, கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சுவதை, முத்தம் கொடுப்பதை எல்லாம் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தையை ஒருவரின் கைகளில் தர நேர்ந்தால், முன்னதாக அவர் கைகழுவ, ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்த வைக்கவும். வீட்டில் இருக்கும் நேரங்களில் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தையின் உடைகளை நன்கு அலசி, வெயிலில் உலரவைத்துப் பயன்படுத்தவும்.

அம்மாக்களின் ஆரோக்கியமும் அவசியம்

பிரசவத்துக்குப் பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக் காவது டாக்டர் பரிந்துரைத்த கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். குழந்தை பிறந்த 15 நாள்களுக்குப் பின்னர், மகப்பேறு மருத்துவரிடம் ஒரு செக்கப் செய்துகொள்ளவும். மன அழுத்தத்துக்குள்ளானால், கவுன்சலிங் பெறுவது நல்லது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு தாம்பத்யத்தைத் தவிர்க்கவும்.

%d bloggers like this: