Advertisements

ஜெ மரண மர்மம்… ஆத்திரத்தில் அப்போலோ! – சிக்கலில் சசிகலா!

ரபரப்பாக நுழைந்த கழுகார், “அரசுத் துறைச் செயலாளர்மீது, அமைச்சர் ஒருவரே புகார் கிளப்பியிருக்கிறார்… பின்னணியில் ஏகப்பட்ட திருப்பங்கள்…” என்று இறக்கைகளைப் படபடத்தார்.
“சி.வி.சண்முகம் பேட்டி பற்றித்தானே… சொல்லும் சொல்லும்’’ என்று ஆவலானோம்.‘‘அதேதான். ‘ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையை ஆட்டிப் படைத்த சக்தி எது? நாடே சந்தேகப்பட்ட ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது’ என்றெல்லாம்

கொதித்துள்ளார். ஜெயலலிதா மரண மர்மம் பற்றி விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சமீபநாட்களாக நடைபெற்றுவரும் விசாரணைகளின் போக்கு, தற்போது சி.வி.சண்முகம் திடீரென்று அதிரடியாகத் தந்திருக்கும் பேட்டி இதையெல்லாம் கவனிக்க வேண்டும். ஆணையத்தின் புதிய வழக்கறிஞராக ஜபருல்லா கான் நியமிக்கப்பட்டு இருபது நாட்களில், ‘சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக விசாரிக்க வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தபோதே பிரச்னை வேறு திசையை நோக்கி நகர்கிறது என்கிற பேச்சு எழுந்தது. அதை நிரூபிக்கும் விதத்திலேயே சி.வி. சண்முகம் கருத்துத் தெரிவித்துள்ளார்.”
“பிரச்னை நகரும் திசை என்னவோ?”
“ராதாகிருஷ்ணன் மற்றும் ராம மோகன ராவ் மீது ஆணையத்தில் பல்வேறு சாட்சிகள் குற்றம்சாட்டியிருக் கிறார்கள். இந்நிலையில்தான், எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்று ஆணையத்தின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வது குறித்து அமைச்சரவைக்கு நான் பரிந்துரை செய்தேன். அவர்கள் அதுகுறித்துப் பதில் அளிக்கவில்லை’ என்று ராம மோகன ராவ் வாக்குமூலத்தில் சொல்லியிருந்தது குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால், ‘அப்படி ஒரு கோப்பு அமைச்சரவைக்கு வரவில்லை’ என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மறுத்திருப்பது, ராம மோகன ராவ் மீது கேள்விக் கணைகளைத் தொடுக்க வைத்துள்ளது. அதேபோல, ‘ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் கூறியும் அதைப் புறந்தள்ளியுள்ளனர். இதன் பின்னணியில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இருக்கிறார்’ என்கிற குற்றச்சாட்டும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.”
“கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லக்கூடாதா?’’
“ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், ஜெயலலிதா சிகிச்சை பற்றி மட்டுமே பேசப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்வது குறித்து விவாதிக்கப்படவில்லையாம். இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பிலிருந்து அமைச்சரவைக்கு நோட் எதுவும் வைக்கப்படவில்லையாம். இதுதான் ராம மோகன ராவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ‘அவர் எப்படி அமைச்சரவைக்கு நோட் வைத்தாகச் சொன்னார்?’ என்பதையும் சி.வி.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.”

“ஓகோ!”
“சிகிச்சைக்காக ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லவில்லை? என்கிற ஆணையத்தின் கேள்விக்கு, ‘அவரை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்வது இந்திய மருத்துவத் துறையை அவமதிக்கும் செயல். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் இங்கே அவருக்குத் தரப்பட்டன’ என்று தன்னுடைய சாட்சியத்தில் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது என் தாயார் மறைந்துவிட்டார். அந்தத் துக்க நிகழ்வுக்குச் சென்ற நான், எங்கள் சமூக வழக்கத்தையும் மீறி, மூன்றே நாள்களில் மீண்டும் அப்போலோ வந்துவிட்டேன். எனது தாய்க்கு பதினாறாம் நாள் காரியம்கூடச் செய்யச் செல்ல முடியவில்லை’ என்று தழுதழுத்துள்ளார் ராதாகிருஷ்ணன்.”
“இப்படிப்பட்ட ஒருவரை ஏன் தெருவில் இழுத்து விடுகிறார் சி.வி.சண்முகம்?”
“அன்றைக்கு அப்போலோவில் முடிவெடுக்கும் இடத்தில் மூவர் மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் சசிகலா, அடுத்தது ராம  மோகன ராவ், மூன்றாவதாக ராதாகிருஷ்ணன். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தினம் தினமுமே ஆவணங்கள் உருவாகிக் கொண்டே இருந்தன. இதில் சசிகலாவும், ராம மோகன ராவும் இருபது ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள். எக்மோ கருவி அகற்றும் ஆவணத்தில் மட்டும் ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தை சசிகலாவுக்கு எதிரான அம்பாக மாற்றவேண்டும் என்றால், இவர்கள் இருவரையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்தால் போதும். அதற்காகவே திட்டமிட்டு இவர்களைக் குறிவைத்து எதிர்மனுவைத் தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்தே அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அடுத்தடுத்து நெருக்கடிகளைக் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.”
“அப்போலோவை ஏன் நெருக்க வேண்டும்?”
“ஆஞ்சியோகிராம் சிகிச்சைச் செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார். அதைச் செய்யவிடாமல் ஆட்டிப்படைத்த சக்தி யார்?’ என்கிற சி.வி.சண்முகத்தின் கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் அப்போலோவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, அப்போலோவை நோக்கி ஆணையம் கடுமைகாட்டப் பல காரணங்கள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு இதய நோய் இருந்தது என்பது அவர் அனுமதிக்கப்பட்ட போதே மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவருக்கானச் சிகிச்சைகளை மேற்கொள்ளப் பல்வேறு சிறப்பு மருத்துவக்குழுக்களை நியமித்த அப்போலோ நிர்வாகம், இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் யாரையும் நியமிக்கவில்லை என்கிறார்கள்.”
“இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் இல்லாமலே ஜெயலலிதாவுக்கு எவ்வாறுச் சிகிச்சை தரப்பட்டது?’’
“அதைத்தான் ஆணையத்தின் தரப்பிலும் அப்போலோ நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்கள். அதற்கு, ‘இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் கிரிநாத்தை நாங்கள் அழைத்து வந்தோம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. உடனே கிரிநாத்தை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். கிரிநாத் சாட்சியத்தில், ‘நான் ஜெயலலிதாவை நேரடியாகப் பார்க்கவில்லை. ஒருமுறை மட்டுமே அப்போலோவுக்கு சென்றேன். அங்கே ஜெயலலிதா சிகிச்சைத் தொடர்பான ஆவணங்களை மட்டுமே பார்த்தேன்’ என்று சொல்லியுள்ளார்.  ‘அதற்குக் கட்டணம் ஏதும் அப்போலோ நிர்வாகம் வழங்கியதா?’ என்று கேட்டதற்கு, ‘இல்லை’ என்றிருக்கிறார். ஆனால், அப்போலோ அளித்த செலவுப் பட்டியலில் கிரிநாத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வழங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். அந்த ஆவணத்தைப் பார்த்த கிரிநாத் அதிர்ந்துவிட்டாராம்.”

 

“இட்லி கணக்குப் போலவே அதிர வைக்கிறதே!”

“தெரியவில்லை. இன்னொரு தகவலையும் சொல்கிறேன் கேளும். ‘சசிகலாதான் ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம்’ என்பதையே சிலர் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். உண்மையில் இதய அறுவைச் சிகிச்சையில் புகழ்பெற்ற மருத்துவர் ஷமீம் ஷர்மாவை, அப்போலோ மருத்துவமனைக்கு சசிகலா வரவழைத்துள்ளார். ஜெயலலிதாவைச் சோதித்து விட்டு, ‘உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யவேண்டும். நானே இன்று அவருக்குச் செய்துவிடுகிறேன்’ என்று சொன்னாராம் ஷர்மா. அதற்கு, ‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் கேட்டுவிட்டுதான் முடிவெடுக்க முடியும்’ என்று அப்போலோ தரப்பில் சொல்லப்பட்டதாம். அதன்படியே அவரிடம் கேட்டபோது, ‘தேவை இல்லை’ என்று சொல்லிவிட்டாராம். ஆனால், ‘அவர், அதிதீவிர சிகிச்சை மற்றும் தொற்றுநோய்ப் பிரிவு நிபுணர் மட்டுமே. அவரிடம் எதற்காக இதயச் சிகிச்சை பற்றி ஒப்புதல் கேட்க வேண்டும்’ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். தனது பேச்சு, அப்போலோ நிர்வாகத்திடம் எடுபடாமல் போனதால் மருத்துவர் ஷர்மா திரும்பிச் சென்றுவிட்டார். ‘ஜெயலலிதாவுக்குத் தொற்றுவியாதிகள் இருந்ததால் ஆஞ்சியோ செய்வது ரிஸ்க்’ என்று அப்போலோ தரப்பில் காரணம் சொல்லியுள்ளார்கள். ஜெயலலிதா மரணம் அடையட்டும் என்று சசிகலா நினைத்திருந்தால், அவர் எதற்காக இதயச் சிகிச்சை நிபுணரை அழைத்து வந்திருக்கவேண்டும் என்ற கேள்வியும் இப்போது எழுகிறது.”
“சரி, அப்போலோ தரப்பு என்ன நினைக்கிறது?”
“கொஞ்சம் கூட நன்றியே கிடையாதா என்று கடும் ஆத்திரத்தில் இருக்கிறதாம் அப்போலோ. ‘எங்கள் மருத்துவமனை வரலாற்றிலேயே மிகச் சிறப்பான சிகிச்சையை ஜெயலலிதாவுக்கு அளித்தோம். ஏற்கெனவே தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் சிகிச்சை விவகாரத்தில் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தன. அதனால் இப்படிப் பட்ட வி.ஐ.பி விஷயங்களில் ஒதுங்கியிருக்கத்தான் நினைத்தோம். ஆனால், ஜெயலலிதா ஒரு மாநிலத்தின் முதல்வர்; மிகப் பெரிய தலைவரும்கூட. அப்படித் தவிர்ப்பது மருத்துவ தர்மமும் இல்லை என்பதால் சம்மதித்தோம். ஆனாலும், சிகிச்சை அளிக்கும்போது பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் ஏற்பட்டன. மருத்துவர்களைச் சுயமாக முடிவு எடுக்கவிடவில்லை. வெளியேயிருந்து மருத்துவர்களைக் கூட்டிவந்து சிகிச்சையில் குறுக்கீடு செய்தார்கள். கேமராக்களை அணைத்து வைக்கச் சொன்னதையும் வேறு வழியில்லாமல் செய்தோம். இப்போதும் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட உணவுக் கட்டண ரசீதுகளை வேண்டும் என்றே வெளியே கசியவிட்டு, அப்போலோவின் பெயரைக் கெடுக்க திட்டமிடுகிறார்கள்’ என்று பொங்கி வெடிக்கிறார்கள் மருத்துவமனை தரப்பில்.’’
‘‘அய்யோ பாவம்.’’
‘‘ஆஞ்சியோகிராம் சிகிச்சை ஏன் அளிக்கவில்லை என்று ஆணையம் கேள்வி கேட்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு அதற்கான தேவையே ஏற்படவில்லை. மருத்துவக் குழுவில் ஒரே ஒரு மருத்துவர்தான், ‘ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்ய வேண்டும்’ என்றார். மற்ற அனைவரும், ‘இப்போது தேவை யில்லை’ என்றுதான் கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவர்களும் அதையேதான் சொன்னார்கள். ஆணையத்தின் விசாரணையில் நிறையத் தவறுகள் இருக்கின்றன. அதன் ஆவணங்களிலும் மருத்துவச் சிகிச்சை பெயர் விவரங்கள் தவறாகப் பதியப் பட்டிருக்கின்றன. தவிர, ஆணையத்தில் இருப்பவர்கள் சட்ட நிபுணர்கள் மட்டுமே. அவர்கள் எப்படி இதுபோன்ற சிக்கலான சிகிச்சை முறைகளைப் பற்றி விசாரிக்க முடியும். மருத்துவக் குழு ஒன்றுதான் இதைச் செய்ய வேண்டும். எங்கள்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபாண்டமானது; ஆதாரமற்றது. அவற்றை எல்லாம் திரும்பப் பெறவேண்டும்’ என்றெல்லாம் கொந்தளிக்கிறதாம் அப்போலோ தரப்பு!”
“இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆளும் தரப்பு என்ன நினைக்கிறது?”
“அடுத்த வாரம் ஆணையத்தில் அனல் பறக்கப்போகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆஜர் ஆவார்கள். லண்டன் மருத்துவர் பீலே, காணொளி மூலம் ஆஜராகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இரு அமைச்சர்கள் தரப்பில் சசிகலா வுக்கு நெருக்கடி தரும்படியான தகவல்கள் முன்வைக்கப்படலாம் என்கிறார்கள். சசிகலா தரப்பும் பன்னீருக்குக் குடைச்சல் கொடுக்கத் தயாராக இருக்கிறதாம். இன்னொரு பக்கம் ராதா கிருஷ்ணன் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ஒருமுறைகூட ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று என்னிடம் கேட்கவில்லை’ என்று சொல்லியுள்ளார். ஆனால், தர்மயுத்தத்தின்போது, ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது’ என்று சொன்னார். ‘பன்னீர் சொன்னதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு பெரிய விஷயம் இல்லாமல் அவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. அநேகமாக அந்த மர்மத்தை பன்னீர்செல்வம் தரப்பு உடைத்து, சசிகலாவுக்குச் சிக்கல் ஏற்படுத்தலாம்’ என்றும் ஆளும்தரப்பில் சொல்கிறார்கள். இதற்கான முன்னோட்டம்தான் ‘மருத்துவமனையை ஆட்டிப்படைத்த சக்தி எது’ என்கிற சி.வி.சண்முகத்தின் பேட்டி.”
“தினகரன் தரப்பை ஒதுக்கும் முடிவுக்கு சசிகலா தரப்பு வந்துவிட்டது என்றும் ஒருபேச்சு ஓடுகிறதே?”

“எதுவும் நடக்கலாம் என்கிறார்கள். திவாகரன் தனிக் கட்சியைத் தொடங்கினாலும், ‘நேரம்வரும்போது பிரிந்துகிடப்பவர்களை எல்லாம் ஒன்று சேர்த்துக்கொண்டு அ.தி.மு.க-வில் இணைவேன்’ என்று கூறிவருகிறார். அதேபோல் ஆளும் தரப்பும் திவாகரனுடன் தொடர்பில் இருக்கிறது. அவர், பி.ஜே.பி-யுடனும் நல்ல தொடர்பில் இருக்கிறார் என்கிறார்கள். சசிகலா தரப்பும் தனக்கான குடைச்சல்கள் தீர மத்திய அரசிடம் சமாதான மாகப் போக நினைக்கிறது. தற்போது அ.தி.மு.க மற்றும்- அ.ம.மு.க இணைப்பில் பி.ஜே.பி-யை விரும்பாத ஒரே நபர் தினகரன் மட்டுமே. இதை எல்லாம் முன்வைத்துப் பேசுபவர்கள், தினகரன் தரப்பை சசிகலா தரப்பு எந்நேரமும் கழற்றிவிடலாம் என்று அரசியல் ஆருடம் சொல்கிறார்கள்.”
“கஜா நிவாரணத்தை மத்திய அரசு அறிவித்துவிட்டதே?”
“கேட்டது 15 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது ஒதுக்கியிருப் பது 1,146 கோடி ரூபாய். அதுவும் மோடியின் தமிழக வருகையை யொட்டிதான் இந்த அறிவிப்பு என்கிறார்கள். பிரதமர் பேசுவதற்கு சாதகமாக ஏதேனும் செய்தி வேண்டும் அல்லவா’’ என்ற கழுகார்,
‘‘20 தொகுதிகள் காத்திருக்க, திருவாரூரில் மட்டும் தேர்தல் தேரோட்டத்துக்கு நாள் குறித்துள்ளது மத்திய தேர்தல் ஆணையம். ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான போஸ் மரணமடைந்துவிட்டதால் தொகுதி காலியாக இருக்கிறது. ஆனால், தி.மு.க வேட்பாளராக அங்கே போட்டியிட்ட சரவணன், ‘தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்காக பொதுச் செயலாளர் என்கிற முறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் இருந்த ஜெயலலிதா கைரேகை தொடர்பாகச் சர்ச்சை கிளப்பினார். அதனால் போஸின் வெற்றி செல்லாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார். அது நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளும் காலியாகத்தான் உள்ளன. ஆனால், டெக்னிக்கல் காரணங்களை முன்வைத்து அந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை” என்று சொன்னதோடு, ஒரு பூச்செண்டைக் கையில் திணித்துவிட்டு ‘‘புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்று சொன்னபடி பறந்தார்!

Advertisements
%d bloggers like this: