Advertisements

திருவாரூர் தேர்தல் டெஸ்ட்! – குஷி… பிஸி… அதிர்ச்சி

தேர்தலோ… தேர்தல்!” சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தால், கழுகார்! நம் ஆச்சர்ய ரியாக்‌ஷனைக் கவனிக்காதவராக, “சட்டசபை செய்திகளில் இருந்தே தொடங்குகிறேன்” என்றபடி, செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘கவர்னரை வைத்தே மத்திய அரசுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி கொடுத்துள்ளார் என அ.தி.மு.க-வினர் சிலாகித்துப் பேசுகிறார்கள். கடந்த ஆண்டு கவர்னர் உரையில், மத்திய அரசைத் தாஜா செய்யும்படியான வார்த்தைகள் அதிகம் இருந்தன. இந்தமுறை, அதே கவர்னர் உரை மூலமாக மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிவு வந்துவிட்டது. ஜி.எஸ்.டி வரி வருவாயில், தமிழக அரசுக்கான 14 சதவிகிதப் பங்கான ரூ.7 ஆயிரம் கோடி மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பது முக்கியமான விஷயம். இதை கவர்னர் உரையில் சேர்த்தது எடப்பாடி வித்தை’ என்று குதூகலத்துடன் சொல்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.’’

“சரி, தி.மு.க வெளிநடப்பின் பின்னணி என்னவோ?’’
‘‘கஜா புயல் நிவாரணம், ஜெயலலிதா மரணம் குறித்த சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டு, குட்கா விவகாரம் உள்ளிட்ட விவரங்கள் கவர்னர் உரையில் உள்ளனவா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்ப, தனது உரை முடிந்த பிறகு இதைப் பற்றி பேசலாம் என்று கவர்னர் தெரிவித்தார். உடனே, தி.மு.க உறுப்பினர்களுடன் வெளியேறிவிட்டார் ஸ்டாலின்.’’
‘‘அன்றைய தினமே அறிவாலயத்தில் கூட்டம் நடத்தினார்களே?’’
‘‘திருவாரூர் தேர்தலைப் பற்றியே விரிவாகப் பேசியுள்ளனர். ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அறிவிப்பு அதிர்ச்சியைத்தான் தந்துள்ளது. முழுக்க முழுக்க தி.மு.க-வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று திட்டமிட்டே மத்திய அரசு காய்நகர்த்த ஆரம்பித்துள்ளது. சமீபகாலமாக பி.ஜே.பி-க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் தி.மு.க-வைப் பலவீனப்படுத்த வேண்டுமென்று டெல்லி பி.ஜே.பி தரப்பில் விவாதித்துள்ளனர். அதற்குத் தோதாக, இடைத்தேர்தல் விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி.’’

‘‘ஓ… பெரிய பிளான்தான் போல.’’
‘‘மொத்தம் 20 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால், சட்டசிக்கல், மரபு போன்ற சொத்தைக் காரணங்களை வைத்து மற்ற தொகுதிகளுக்கான தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பி.ஜே.பி இருக்கிறது என்று பலமாக நம்புகிறது தி.மு.க தரப்பு. அதனால்தான், ‘இடைத்தேர்தல் அறிவிப்பே மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் சதி’ என்று கடுமையாக அவர் விமர்சித்துள்ளார்.’’
‘‘கருணாநிதியின் சொந்த ஊரிலேயே இடைத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தயக்கம் காட்டுகிறதா?’’
‘‘ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய பிறகு, ஸ்டாலினின் இமேஜ் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாஸிட் போனதுபோல, திருவாரூரிலும் தோல்வி ஏற்பட்டால், அது இமேஜைப் பாதிப்பதுடன், கூட்டணியிலும் கட்சியிலுமே சலசலப்பை உண்டாக்கும் என்று நினைக்கிறாராம் ஸ்டாலின்.’’
‘‘தோல்வியடையும் அளவுக்குக் காரணங்கள் இருக்கின்றனவா?’’
‘‘கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படாவிட்டால்… திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் பூண்டி கலைவாணன் நிறுத்தப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, தொகுதியைக் கவனித்துக்கொண்டவர், கலைவாணன்தான். அதனால், தொகுதி முழுக்கவே இவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. 2014 தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றிவாகைச் சூடியதற்கு இவரும் ஒரு காரணம். இதெல்லாம் ப்ளஸ் பாயின்ட்களாக இருந்தாலும், கருணாநிதி மீதான மரியாதை வேறு… கலைவாணன் மீதான பார்வை வேறு. எனவே, அவ்வளவு எளிதாக வெற்றிபெற்றுவிட முடியாது என்று திருவாரூர் தி.மு.க-வில் உள்ள ஒரு தரப்பினர் செய்திகளைப் பரப்புகிறார்களாம்.’’
‘‘அதற்குக் காரணம்?’’
‘‘எல்லாம் உள்குத்து வேலைகள் தான். கலைவாணன், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை வேட்பாளராக நிறுத்தினால், பிற இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்பது அவர்களின் வாதம். அதனால், தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளர் தேவாவைக் கொம்பு சீவி விடுகிறார்கள். இவர், இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால், இவரை கலைவாணன் தரப்பு சரிக்கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், இங்கு அழகிரியும் களம் இறங்குவார் என்பது சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மு.க.அழகிரி, திருவாரூரில்தான் பிறந்தாராம். இதை, சென்டிமென்டாகச் சொல்லி, அழகிரியோ அவரின் மனைவி காந்தி அழகிரியோ சுயேச்சையாக இங்கு போட்டியிட வேண்டும் என்று உசுப்பேற்றி வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இவரால் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும் என்று நினைக்கிறது தி.மு.க தரப்பு. இதையெல்லாம் தாண்டி, ‘ஆர்.கே.நகர் புகழ்’ டி.டி.வி.தினகரன் வேறு பயமுறுத்துகிறார்.’’
“ஓ… திருவாரூரையும் ஆர்.கே.நகராக மாற்றிவிடுவரா என்ன?”
“ஆர்.கே.நகர் தந்த தெம்புடன்தான் படு உற்சாகமாகவும் பிஸியாகவும் திருவாரூரைக் குறிவைக்கும் தினகரன் தரப்பு, இரு மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலையைத் தெடங்கிவிட்டது. பூத் வாரியாக 600 வாக்குகளை வசப்படுத்தி, தேர்தல் முடியும்வரை அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கள்ளர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளையும், பி.ஜே.பி-யை எதிர்க்கும் சிறுபான்மையினர் வாக்குகளையும் ஒன்று திரட்டினாலே வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் தினகரன்.’’

 

‘‘நிதி நிலை சரியில்லை என்று பேச்சு இருக்கிறதே… அதை எப்படி எதிர்கொள்வார் தினகரன்?’’
‘‘கடந்த 3-ம் தேதியன்று சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சென்றிருக்கிறார் தினகரன். தேர்தல் செலவு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவைதான் முக்கிய அஜெண்டாக்களாக இருந்திருக்கக்கூடும். தேர்தல் செலவுக்கான நிதி வந்ததுசேர வேண்டிய வழிமுறைகள் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக அ.ம.மு.க-வினர் கூறுகிறார்கள். திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜை, தங்கள் வேட்பாளராக இறுதிசெய்திருப்பதாகவும் அ.ம.மு.க-வினர் சொல்கிறார்கள்.”
‘‘அ.தி.மு.க தரப்பு என்ன செய்யப்போகிறதாம்?’’
“கையில் அரசு இயந்திரம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசின் மறைமுக ஆசியும் உள்ளது. எனவே, குஷியுடன் இருக்கிறது எடப்பாடி தரப்பு.
அமைச்சர் ஆர்.காமராஜ், திருவாரூர் மாவட்டத்துக்காரர். தினகரன் தரப்பிலிருக்கும் முக்கியப் புள்ளிகளை இழுக்கும் வேலைகளில் அவர் இறங்கியுள்ளாராம். இந்த இடைத்தேர்தலை வைத்துதான், அ.தி.மு.க அரசை எடைப்போட காத்திருக்கிறது பி.ஜே.பி. அதனால், ‘கட்சியில் பிளவுகள் இருந்தாலும் ஒன்றுபட்ட அ.தி.மு.க எங்கள் பக்கம்தான் உள்ளது’ என்பதை நிரூபிக்கும் வகையில், திருவாரூரில் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரு ஓட்டுக்கு ஐந்து இலக்கம் வரைகூட செலவழிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்று பேச்சுகள் கேட்கின்றன. ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட வி.ஆர்.என் பன்னீர்செல்வத்திடம் கேட்டுள்ளனர். அவர் தயக்கம் காட்டி வருகிறாராம். அமைச்சர் காமராஜுக்கு நெருக்கமான கலியபெருமாள் என்பவர் தயாராக இருக்கிறார். ஒருவேளை பன்னீர்செல்வம் உறுதியாக மறுத்துவிட்டால், இவர்தான் வேட்பாளராம்.”
‘‘புயல் நிவாரணம் உள்ளிட்ட பலவற்றிலும் ஆளுங்கட்சிக்குப் பாதகமான சூழல்தானே இருக்கிறது. எப்படி எடப்பாடி தரப்பு குஷியாக இருக்கும்?’’
‘‘இப்போதுதான் சாதகமான காற்று வீசுகிறதே… ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரண நிதி வந்துவிட்டது. அதை விநியோகிக்கவும் தடையில்லை என்று வேறு தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. பிறகு குஷிக்கு என்ன குறைச்சல்!’’
‘‘எல்லாம் சரி, தேர்தல் நடக்குமா?’’“சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்குத் தடைக் கேட்டு திருவாரூரைச் சேர்ந்த மாரிமுத்து தாக்கல் செய்த மனு, ‘போதிய விவரங்கள் இல்லை’ என்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சத்யநாராயணன் என்பவர், ‘நிவாரணப் பணிகளில் தடை ஏற்படும்’ என்கிற காரணத்தை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தடை கோரினார். அதுவும் தள்ளுபடியாகிவிட்டது.’’

 

‘‘அ.தி.மு.க எம்.பி-யான மைத்ரேயன், பிரதமரைத் தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறாரே?’’

‘‘இந்தச் சந்திப்பு, அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அ.தி.மு.க-வின் தற்போதைய நிலவரம் குறித்து மோடி கேட்டாராம். ‘அ.தி.மு.க-வில் எடப்பாடியின் கை ஓங்கியுள்ளது. அதேசமயம், தினகரன் தனி சக்தியாக உருவெடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. அவருக்கென்று ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது’ என்று மைத்ரேயன் சொல்ல, ‘அ.தி.மு.க வலுவாக இருந்தால் மட்டுமே, தி.மு.க கூட்டணியைத் தோற்கடிக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம்?’ என்று மோடி கேட்டாராம். ‘அ.தி.மு.க- அ.ம.மு.க இணைவது முக்கியம். அத்துடன் பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே தி.மு.க கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியும்’ என்று சொன்னாராம் மைத்ரேயன். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட மோடி, தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தொகுதியுமே, மத்தியில் எங்களுக்கு ஆபத்தாகவே முடியும். எனவே, உங்களின் யோசனைகள் பயனுள்ளவையாகவே இருக்கின்றன’ என்று சொன்னாராம் மோடி’’ என்ற கழுகார், விருட்டெனப் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: