நீங்கள் எந்த குடல்வகையை சேர்ந்தவர்?!

உயிர் காக்கும் ரத்த வகையை அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், அந்த ரத்தம் உருவாக காரணமாகயிருந்த குடல் வகையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைய நவீன மருத்துவம் குடலை பல்வேறு விதங்களில் ஆராய்ந்து, அதன் பிரச்னைகளை அறிந்து சிகிச்சை அளித்து வருகிறது. ஆயிரக்கணக்கான வருடங்கள் பாரம்பரியம் கொண்ட ஆயுர்வேத மருத்துவம், இந்த நவீன உபகரணங்கள் ஏதுமற்ற காலத்திலேயே குடலை நான்கு வகையாகப் பிரித்துள்ளது.

நம் பாரம்பரிய நூல்களில் உள்ள மூலக் கருத்துக்கள் சில சமயம் வழக்கு மொழியாக மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. அதில் மருத்துவ கருத்துக்களும் அடங்கும். அப்படி பேசப்படும் பலவற்றில் ‘ஒருவரைப் போல் ஏழு பேர்’ இருப்பார்கள் என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆம்… உண்மைதான்.
இது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டதுதான். வாத பிரக்குதி, பித்த பிரக்குதி, கப பிரக்குதி, வாத பித்த பிரக்குதி, கப பித்த பிரக்குதி, கபவாத பிரக்குதி, ஸந்நிபாத (சம) பிரக்குதி என்ற ஏழு பேரே அவர்கள். இதில் கடைசியில் குறிப்பிட்ட சம பிரக்குதி தவிர மீதமுள்ளவை குறைபாடு உள்ளவையே.
பிரக்குதி என்பது ஓரு மனிதனுடைய இயற்கையான உடல் மற்றும் மனநிலையை குறிப்பதாகும். இது  கருப்பையில் கருத்தரிக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடும். இதனை பிறந்த பின்பு யாராலும் மாற்ற இயலாது. இதனால்தான் மனிதனுக்கு மனிதன் உடல்வாகு, அவன் உட்கொள்ளும் உணவின் அளவு, சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, செயல்படும் திறன், உடல்பலம், மனோபலம் போன்றவைகள் வேறுபடுகின்றன. உடல் பிணியின் தாக்கமும் இதனைப் பொறுத்தே மாறுபடும்.
நாம் என்ன வகை பிரக்குதி என்று தெரிந்துகொண்டால் நமக்கு ஒரு குறிப்பிட்ட தொந்தரவுகள் வர வாய்ப்புள்ளது என்று தெரிந்துகொண்டு அவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அப்படி பிரக்குதியில் கூறப்பட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றுதான் குடல்வாகு. சிலருக்கு காரம் அதிகம் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு ஒத்துக்கொள்ளும். சிலரால் ஒரு குறிப்பிட்ட உணவை ஜீரணிக்க இயலாது. அதுவே சிலரால் இயலும். இவை அனைத்தும் குடலைப் பொருத்தே ஏற்படுகிறது.
நமது உடல் தலைப் பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி, கிளைப்பகுதி (கை, கால்) என்று பிரிக்கப்படுகிறது. இதில் நடுப்பகுதிக்கு கோஷ்டம் என்று பெயர். கோஷ்டம் என்றால் இரண்டு பக்கமும் சுவர் வைத்த, நடுவில் உள்ள பகுதி என்று அர்த்தம். இந்த கோஷ்டம் மேல் பகுதி கோஷ்டம்,  கீழ்ப்பகுதி கோஷ்டம் என்று மேலும் இரண்டு பகுதியாக பிரிக்கப்படுகிறது. மேல் பகுதியில் இதயம், நுரையீரல், உணவுக்குழாய், மூச்சுக்குழாய் போன்ற உறுப்புகள் இடம் பெறுகிறது. கீழ்ப்பகுதி கோஷ்டத்தில் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கணையம், குடல்வால், ஆசனவாய் போன்ற உறுப்புகள் அடங்கியிருக்கிறது.
நவீன அறிவியலில் தற்போது இருப்பதுபோல CT Scan, MRI Scan, Ultra Sound Scan, X-Ray, எண்டோஸ்கோபி போன்ற நவீன உபகரணங்கள் இல்லாத அக்காலத்திலேயே குடலில் இவ்வளவு உறுப்புகள் அடங்கியிருக்கின்றன. இதனுடைய அமைப்பு, அளவு, செயல்பாடுகளைக் குறித்து ஆயுர்வேதத்தில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேற்குறிப்பிட்டவைகளே சான்று!
‘இவருக்கு முடி அப்பா போன்று உள்ளது… நெற்றி அம்மா போன்று உள்ளது’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். இவை உண்மையா என்றால் அதற்கும் ஆயுர்வேதம் பதில் சொல்கிறது. சில உறுப்புகள் அப்பாவிடம் இருந்தும், சில உறுப்புகள் அம்மாவிடம் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. அதில் குடல் நமக்கு அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. அந்த குடலின் வகைகள், தன்மைகள், அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 
ஆயுர்வேத மருத்துவத்துறையில் நமது குடலானது கல் குடல், மிருதுவான குடல், மத்தியம குடல், சம குடல் என்று நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது.
கல் குடல்
ஆயுர்வேதத்தில் கல் குடல் என்பது க்ருத குடல் என்று அழைக்கப்படுகிறது. க்ருதம் என்றால் சிறிதும் இளைப்பு இல்லாத என்று அர்த்தம். அதாவது இவ்வகை குடலில் சிறிதும் எண்ணெய் பசையில்லாமல் வறட்சி தன்மை மிகுந்து இருக்கும். இதனால் இவ்வகை குடல்வாகு உடையவர்களுக்கு எப்போதும் மலச்சிக்கல், வயிற்றுப்பொறுமல், வாயு தொந்தரவு, கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு ஊதினது போன்ற உணர்வு,  வயிற்றுவலி, சில சமயம் நன்றாகப் பசி, சில சமயம் பசியின்மை, இடுப்பு வலி, முதுகு வலி, அதிக சப்தத்துடன் ஏப்பம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உங்களுக்கு இருப்பது கல் குடல். நீங்கள் குளிர்ச்சியான வறட்சியான பொருட்களைத்  தவிர்த்து எப்போதும் எளிதில் ஜீரணிக்கக் கூடிய சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவ்வாறு சாப்பிட நேர்ந்தால் சரியான அளவு உப்பு கலந்து சாப்பிட வேண்டும். இவ்வகை குடல்வாகு உடையவர்களுக்கு அஜீரணம் ஏற்பட்டால் உப்பு கலந்த மருந்தையே ஆயுர்வேத மருத்துவர் உபயோகப்படுத்துவார். மலச்சிக்கல் ஏற்பட்டால் ஆமணக்கு எண்ணெயே
சிறந்த நிவாரணியாக இருக்கும்.
மிருது குடல்
மிருது என்றால் மென்மை என்று பொருள். இவ்வகை குடல் யாருக்கு பித்தம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு இருக்கும். இதனால் வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், அடிக்கடி வயிற்றுப்போக்கு, அடிக்கடி பசி, சிறிதளவு காரம் சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுதல் மற்றும் சிறிதளவு பால் கூடுதலாக எடுத்துக்கொண்டாலே வயிற்றுப்போக்கு பிரச்னையும் ஏற்படும்.
இவ்வகை குடல்வாகு உடையவர்கள் பச்சை மிளகாய் காரம், மசாலா பொருட்கள், துரித உணவுகள், அரை வேக்காடு உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக சூடுள்ள உணவுகளை தவிர்த்து அதே சமயம் இளஞ்சூடான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மதிய வேளை உணவில் சிறிதளவு சுத்தமான உருக்கிய பசு நெய் கலந்து சாப்பிடலாம். உணவில் தண்ணீர் சத்து மிகுந்த காய்கறிகளைப் பயன்படுத்தலாம். மனநிலையை பொறுத்தவரை அதிக கோபம், அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
மத்தியம குடல்
க்ருதம் மற்றும் மிருது இவை இரண்டிற்கும் இடைப்பட்ட குடல்வாகுதான் மத்தியம குடல். இவற்றில் எண்ணெய் பசை அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக அடிக்கடி அஜீரணம், வயிறு மந்தம், எப்போதும் உணவு உண்டது போன்ற உணர்வு, சிறிதளவு எண்ணெய் பலகாரம் அல்லது அசைவ உணவுகள் சாப்பிட்டாலே அஜீரணம் ஏற்படுதல் மற்றும் நீண்ட நேரம் சென்ற பின்பு பசி போன்ற தொந்தரவுகள் இருக்கும்.  இவர்களுடைய மலம் அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.
இவ்வகை குடல்வாகு உடையவர்கள் உணவை எப்போதும் சூடாகவும், சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு போன்றவைகள் கலந்த உணவுகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும். இவர்களுக்கு அஜீரணமோ அல்லது  மலச்சிக்கலோ ஏற்பட்டால் காரத்தன்மை கொண்ட மருந்துகளையே ஆயுர்வேத மருத்துவர் பயன்படுத்துவார்.
சம குடல்
இது வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களும் சரியான அளவில் இருக்கிற குடல். எல்லோருக்கும் இந்த நான்கு வகை குடல்தான் இருக்குமா மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்துமே எனக்கு அவ்வப்போது தோன்றுகிறதே. அப்படியானால் எனக்கு எந்த வகை குடல் என்று கேட்கத் தோன்றும் அல்லவா?
அதிகப்படியான மக்களுக்கு இரண்டு வித குடலும் கலந்தே காணப்படும். எடுத்துக்காட்டாக கல் குடலும், மத்தியம குடலும் கலந்தோ, மிருது குடலும் மத்தியம குடலும் கலந்ேதா, கல் குடலும், மிருது குடலும் கலந்ேதா காணப்படும்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் யாதெனில் இரண்டு குடலின் தன்மை கலந்து இருக்கும்போது, ஒரு குடலின் தன்மை மேம்பட்டும் மற்றொரு குடலின் தன்மை தாழ்ந்தும் இருக்கும்.  மேம்பட்டு இருக்கிற குடலின் தன்மையால் ஏற்படும் ெதாந்தரவுகள் அதிகளவில் காணப்படும். தாழ்ந்து இருக்கின்ற குடலின் தன்மையால் ஏற்படும் தொந்தரவுகள் எப்போதாவது தென்படும்.
நமது குடலின் வகை, அதன் தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்த பிறகு அதற்குரிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர் நிர்ணயம் செய்வார். நாம் நமது குடலின் தன்மையை உணர்ந்து உணவு உண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆயுர்வேதம்!

%d bloggers like this: